சென்னையில் நேற்று (அக்டோபர் 17-ந் தேதி) இரவு கொட்டித் தீர்த்த பெருமழை மேகவெடிப்பா என்ற விவாதம் எழுந்துள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மேகவெடிப்புக்கான வரையறையை சுட்டிக்காட்டி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று மாலை தொடங்கி இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் அதிகபட்சமாக பாரிமுனையில் 36.34 செ.மீ. மழை பதிவானது. கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ., எண்ணூரில் 21.58 செ.மீ., சைதாப்பேட்டையில் 17.02 செ.மீ., ஐஸ் ஹவுஸ் பகுதியில் 13.86 செ.மீ. மழை பதிவானது.
ஒரே இரவில் இவ்வளவு அதிகமான மழை பெய்ததால், சென்னையில் மேகவெடிப்பு ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று (அக்டோபர் 18-ந் தேதி) தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று நிகழ்ந்த பெருமழை மேகவெடிப்பா, இல்லையா? ஏற்கெனவே வெளியிட்டுள்ள மணிநேர மழைப்பொழிவு விவரங்களும், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மேகவெடிப்புக்கான வரையறையும் இதற்குப் பதில் சொல்லட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன் மழையின் தீவிரம் மற்றும் மேகவெடிப்பு குறித்த விளக்கங்கள் இடம்பெற்றுள்ள ஆவணத்தையும் இணைத்துள்ளார்.
அந்த ஆவணத்தில், ஒரு மணி நேரத்தில் 1 செ.மீ. மழை பெய்வது லேசான மழை என்றும், 1 முதல் 2 செ.மீ. மழை பெய்வது மிதமான மழை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்தில் 2 முதல் 3 செ.மீ. மழை பெய்வது தீவிர மழை என்றும், 3 முதல் 5 செ.மீ. மழை பெய்வது மிகத் தீவிர மழை என்றும், 5 முதல் 10 செ.மீ. மழை பெய்வது அதிதீவிர மழை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. அல்லது அதற்கு அதிகமாக மழை பெய்வது மேகவெடிப்புக்கான முக்கியமான அளவுகோல் என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 20 முதல் 30 சதுர கி.மீ. பரப்பளவில் குறுகிய நேரத்தில் இவ்வளவு அதிகமான மழை பெய்வதை மேகவெடிப்பு என இந்திய வானிலை ஆய்வு மையமும் உலக வானிலை அமைப்பும் வரையறுப்பதாக அந்த ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று பாரிமுனையில் 36.34 செ.மீ., கத்திவாக்கத்தில் 34.44 செ.மீ. மழை பதிவாகியிருந்தாலும், இவை ஒரு மணி நேரத்தில் பதிவான மழையளவுகள் அல்ல. குறிப்பிட்ட காலப்பகுதியில் பதிவான மொத்த மழையளவுகளாகும்.
எனவே, நேற்று சென்னையில் எந்தெந்த இடங்களில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. அல்லது அதற்கு அதிகமாக மழை பதிவானது என்பதையும், அந்த மழை எவ்வளவு பரப்பளவில் பெய்தது என்பதையும் ஆய்வு செய்வது அவசியமாகிறது.
சென்னையில் நேற்று பெய்த பெருமழை, மேகவெடிப்புக்கான அளவுகோலை எட்டியதா? இல்லையா? என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம்தான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்.
