சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் (அக்டோபர் 18) அதீத கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. சென்னையில் நேற்று 6 இடங்களில் அதிக கனமழை பெய்த நிலையில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்பதால் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 18-ந் தேதி) வெளியிட்டுள்ள மழை முன்னறிவிப்பின்படி, சென்னையில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் வகைப்பாட்டின்படி, 24 மணி நேரத்தில் 20.44 செ.மீ.க்கு அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகளுக்கு ரெட் அலர்ட், 11.56 முதல் 20.44 செ.மீ. வரையிலான மிக கனமழைக்கு ஆரஞ்சு அலர்ட், 6.45 முதல் 11.55 செ.மீ. வரையிலான கனமழைக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுகிறது.
