ஜெம் வீரமணி வழக்கில் அவரது மேலாளர் இன்று ( அக்டோபர் 18) கைது செய்யப்பட்டார்.
ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை பெருநகர காவல் விபச்சார தடுப்பு பிரிவில் பெறப்பட்ட பென் டிரைவில் ஜெம் கிரணைட் தொழிலதிபர் வீரமணி சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரது வீட்டின் படுக்கையறையில் சிறுமி ஒருவருடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக பதிவாகியிருந்த வீடியோவில் வீரமணி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்ததின் அடிப்படையில், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு, விபச்சார தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக ஜெம் கிரானைட் தொழிலபதிர் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டும் இவ்வழக்கில் வீரமணி சிறுமியிடம் ஆபாசமாக இருப்பது போன்ற மேலும் ஒரு வீடியோவை வைத்திருந்தது தொடர்பாக அதைப்பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காத குற்றத்திற்காக கணேசன் என்பவரும் கைது செய்யப்பட்டு, மேற்படி நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் இவ்வழக்குகள் தொடர்பாக ஜெம் வீரமணியின், லாயட்ஸ் ரோடு வீடு, கானத்தூரில் உள்ள அவரது பண்ணை வீடு மற்றும் அவரது சாமுண்டீஸ்வரி நேச்சுரல் ஸ்டோன் அலுவலகம் ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வழக்கு தொடர்பான முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக வீரமணிக்கு உதவிய ஜெம் கிரானைட் நிறுவனத்தின் மேனஜர் சக்திவேல் என்பவர் இன்று (18.10.2026) கைது செய்யப்பட்டார்.
ஜெம் வீரமணியின் மேனேஜர் சக்திவேல் மூலம் வீரமணி சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்கு செய்த பணப்பரிமாற்றங்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை பாதிக்கப்பட்ட பதினொரு சிறுமிகள் குறித்த புகார்களின் பேரில் வீரமணி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே போக்சோ வழக்கில் சிறப்பு நீதிமன்ற உத்தரவுபடி ஜெம் வீரமணியை அக்டோபர் 15ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
