சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 6 இடங்களில் அதி கனமழையும் (20 செ.மீ.க்கு மேல்), 12 இடங்களில் மிக கனமழையும் (11.5 செ.மீ.க்கு மேல்) பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக பாரிமுனையில் 36.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனால் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் சுமார், 15,000 களப்பணியாளர்கள் இரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும், மழைநீரை வெளியேற்றுவதற்காக 650 மின் மோட்டார் பம்புகள் மற்றும் டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
வெள்ள பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ஒரு குழுவும். தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் (TNDRF) 4 குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இன்றும் சென்னைக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் சென்னை மக்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.
அதில், “மிகவும் தீவிரமான எச்சரிக்கை… சென்னையில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும். அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்” என கேட்டுக்கொண்டுள்ளது.
