‘பிரான்ஸில்’ பற்றிய நெருப்பு.. ‘புரட்சிகளின்’ பிடியில் 9 ஐரோப்பிய நாடுகள்.. வீதிகளில் வெடிக்கும் மக்கள் போராட்டங்கள்!

Published On:

| By Mathi

Europe Protests

பிரான்ஸில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்து, பல நகரங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. பிரான்ஸில் பற்றிய இந்தப் போராட்ட நெருப்பின் தொடர்ச்சியாக பெல்ஜியம், இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், அல்பேனியா, கிரீஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா என ஐரோப்பாவின் 9 நாடுகளிலும் வெவ்வேறு பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.

பிரான்ஸ்

பிரான்ஸில் செப்டம்பர் மாதம் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்பறைகளில் அளவுக்கு அதிகமான மாணவர்கள், கல்வி நிறுவனங்களின் மோசமான நிலை ஆகியவற்றை முன்வைத்து மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கினர். இந்தப் போராட்டங்கள் படிப்படியாக நாடு முழுவதும் பரவின.

ADVERTISEMENT

தொழிற்சங்கங்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள், 2018-ம் ஆண்டு பிரான்ஸை உலுக்கிய மஞ்சள் அங்கி இயக்கத்தினர் ஆகியோரும் போராட்டங்களில் பங்கேற்றனர். அக்டோபர் 17-ந் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற 110 பேரணிகளில் அரசின் கணக்குப்படி 5.5 லட்சம் பேர் பங்கேற்றனர். போராட்ட அமைப்புகளின் கணக்குப்படி இந்த எண்ணிக்கை 8 லட்சம்.

பாரிஸ், மார்சேய், லியோன், லிமோஜ் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களின்போது சில குழுக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. கடைகள் சூறையாடப்பட்டன. வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. லிமோஜ் நகரில் 143 ஆண்டுகள் பழமையான நகராட்சி கட்டிடமும் தீக்கிரையானது.

ADVERTISEMENT

பெல்ஜியம்

பிரான்ஸைத் தொடர்ந்து அக்டோபர் 17-ந் தேதி பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸிலும் போராட்டங்கள் வெடித்தன. கல்விக்கான செலவு அதிகரிப்பு, உயர்கல்வி வாய்ப்புகளைப் பாதிக்கும் சீர்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.

பிரஸ்ஸல்ஸில் திரண்ட இளைஞர்களில் சிலர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். ஒரு கார் கவிழ்க்கப்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களையும் பயன்படுத்தினர்.

ADVERTISEMENT

பெல்ஜியத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள லீயேஜ் நகரிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு முன்னதாக அக்டோபர் 9-ந் தேதி அரசின் பட்ஜெட் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெற்ற தேசிய வேலைநிறுத்தத்திலும் மாணவர்கள், தொழிற்சங்கத்தினர் பங்கேற்றிருந்தனர்.

இத்தாலி

இத்தாலியில் விலைவாசி உயர்வு, குறைந்த ஊதியம், பொதுச் சேவைகளின் மோசமான நிலை ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அக்டோபர் 17-ந் தேதி மிலன், போலோனியா, பிரெசியா, பெர்காமோ, டூரின் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. சில இடங்களில் போலீசாருடன் மோதல்கள் வெடித்தன. இந்த மோதல்கள் தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். மறுநாளான அக்டோபர் 18-ந் தேதியும் மிலன் நகரில் போராட்டங்கள் தொடர்ந்தன.

மிலன் நகரின் முக்கியப் பகுதியான பியாசா டுவோமோ அருகே முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் சிலர் கடைகளின் கண்ணாடிகளை உடைத்தனர். குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைத்தனர். போலீசாரை நோக்கிக் கற்களை வீசினர்.

இதையடுத்து போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். 60-க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போர்ச்சுகல்

போர்ச்சுகலில் போராட்டங்களின் முக்கியக் காரணம் வீட்டுவசதி நெருக்கடி.
தலைநகர் லிஸ்பனில் அக்டோபர் 17-ந் தேதி பல்லாயிரக்கணக்கான மக்கள் பேரணி நடத்தினர். நாட்டின் முக்கிய தொழிற்சங்கமான CGTP இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

போர்ச்சுகலில் 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வீடுகளின் விலை 2 மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. புதிய வீட்டு வாடகை ஒப்பந்தங்களுக்கான கட்டணமும் ஏறக்குறைய இரட்டிப்பாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 3.6 சதவீதமாக இருந்தது. உணவு, எரிபொருள் விலைகளும் அதிகரித்துள்ளன.

வீட்டு வாடகையைக் கட்டுப்படுத்த வேண்டும்; ஊதியத்தை உயர்த்த வேண்டும்; அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கியக் கோரிக்கைகள்.

ஸ்பெயின்

ஸ்பெயினில் வீட்டு வாடகை உயர்வும் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதும் பெரும் அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளன. தலைநகர் மாட்ரிட்டில் 87 வயதான மரிகார்மென் அபாஸ்கல் என்ற மூதாட்டி, 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த வீட்டிலிருந்து செப்டம்பர் 23-ந் தேதி வெளியேற்றப்பட்டார்.

வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் திரண்டு வெளியேற்றத்தைத் தடுக்க முயன்றனர். ஆனால் போலீசார் பாதுகாப்புடன் மூதாட்டி ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் செல்லப்பட்டு ஆம்புலன்ஸில் அனுப்பப்பட்டார். இந்தச் சம்பவம் ஸ்பெயினில் வீட்டு வாடகை உயர்வுக்கும் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவதற்கும் எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தியது.

வாடகைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும், குடியிருப்பாளர்களை வெளியேற்றுவதைத் தடுக்க வேண்டும், முதலீட்டு நிறுவனங்கள் குடியிருப்பு வீடுகளை மொத்தமாக வாங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பவை போராட்டக்காரர்களின் கோரிக்கைகள்.

ஸ்பெயினில் நவம்பர் 29-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வீட்டுவசதி நெருக்கடி முக்கிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது.

அல்பேனியா

ஐரோப்பாவின் பால்கன் பகுதியில் உள்ள அல்பேனியாவில் மாணவர்கள் தலைமையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கல்விக்கான செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, அரசுத் துறைகளில் ஊழல் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் ஆகியவை போராட்டங்களின் முக்கியக் காரணங்கள்.

அத்துடன் அல்பேனியாவின் தெற்குக் கடலோரப் பகுதியில் சொகுசு சுற்றுலா விடுதி அமைப்பதற்கான நில மேம்பாட்டுத் திட்டமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னருடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனம் ஆதரவு அளிக்கிறது. நிலம் தொடர்பான முறைகேடுகள் நடந்ததாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் குஷ்னர் தவறு செய்ததற்கான ஆதாரத்தைத் தாங்கள் கண்டறியவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 13-ந் தேதி தொடங்கிய மாணவர் போராட்டங்கள் தலைநகர் டிரானாவிலிருந்து பிற நகரங்களுக்கும் பரவின. அக்டோபர் 17-ந் தேதி கல்வி அமைச்சகத்தின் முன்பு திரண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களில் சிலர் போலீசாரை நோக்கிக் கற்களை வீசினர். போலீசார் கண்ணீர்ப்புகை, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களைப் பயன்படுத்தினர்.
பிரதமர் எடி ராமா பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் பதவி விலக மறுத்துள்ள அவர், போராட்டங்களால் ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்பேனியா இணையும் முயற்சி பாதிக்கப்படலாம் என்று எச்சரித்துள்ளார்.

கிரீஸ்

கிரீஸில் துறைமுகத் தொழிலாளர்கள், கப்பல் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் வேலைநிறுத்தப் போராட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர். அக்டோபர் 30-ந் தேதி உலகம் முழுவதும் 100 துறைமுகங்களில் ஒருங்கிணைந்த வேலைநிறுத்தம் நடத்த தொழிலாளர் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக கிரீஸின் முக்கியத் துறைமுகமான பிரேயஸில் உள்ள 2 மற்றும் 3-வது சரக்குக் கையாளும் முனையங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பங்கேற்க உள்ளனர். கப்பல் கட்டும் தளங்கள், கப்பல் பழுதுபார்க்கும் தொழிற்சாலைகள், உலோகத் தொழிற்சாலைகளில் பணிபுரிவோரும் இந்தப் போராட்டத்தில் இணைய உள்ளனர்.

போருக்கான ஆயுதங்களையும் ராணுவத் தளவாடங்களையும் கொண்டு செல்லத் துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது இந்தப் போராட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.

ஜெர்மனி

ஜெர்மனியில் தீவிர வலதுசாரி அரசியல், இனவெறி, ஜனநாயக உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளை முன்வைத்து பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மனித உரிமை அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சமூக இயக்கங்கள் இணைந்து இந்தப் போராட்டங்களை நடத்துகின்றன. குறிப்பாக தீவிர வலதுசாரி அரசியல் இயக்கங்களின் செல்வாக்குக்கு எதிராகவும், பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பேரணிகள் நடைபெறுகின்றன.

அக்டோபர் 20-ந் தேதி லெவர்கூசன், அக்டோபர் 21-ந் தேதி டார்ம்ஸ்டாட், அக்டோபர் 24-ந் தேதி கொலோன் உள்ளிட்ட நகரங்களில் அடுத்தடுத்த போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியா

ஆஸ்திரியாவில் அரசின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்கான உயர்கல்வி நிதியில் சுமார் 100 கோடி யூரோ அளவுக்குப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பல்கலைக்கழக நிர்வாகங்கள் எச்சரித்துள்ளன. இதையடுத்து அக்டோபர் 13-ந் தேதி தலைநகர் வியன்னாவில் மாணவர்கள் வித்தியாசமான போராட்டத்தை நடத்தினர். பல்கலைக்கழகத்துக்கு வெளியே உள்ள யுனிவர்சிட்டாட்ஸ்ரிங் சாலையையே திறந்தவெளி வகுப்பறையாக மாற்றினர். அங்கு ஆசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் பாடங்களை நடத்தினர். உயர்கல்விக்கான நிதியைக் குறைத்தால் மாணவர்களின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை விளக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

அக்டோபர் 15-ந் தேதி மாலை முதல் வியன்னாவில் உள்ள நுண்கலைக் கல்லூரியின் அரங்கத்தையும் மாணவர்கள் ஆக்கிரமித்துப் போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழகங்களுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்; கல்விக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது; ஆராய்ச்சிப் பணிகளுக்கான நிதியைக் குறைக்கக்கூடாது என்பவை இவர்களின் முக்கியக் கோரிக்கைகள்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share