சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்.. பேருந்துகளில் இருமுடி பைகளை வைத்து இடம் பிடிக்கும் பக்தர்கள்!

Published On:

| By Mathi

Sabarimala-Rush

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல்-பம்பை இடையே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து அவதிப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக அக்டோபர் 17-ந் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. அக்டோபர் 18-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 22-ந் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐப்பசி மாத பூஜைகளுக்காக அக்டோபர் 17-ந் தேதி 30,000 பக்தர்களும், அக்டோபர் 18-ந் தேதி 50,000 பக்தர்களும், அக்டோபர் 19-ந் தேதி 40,000 பக்தர்களும் தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.

இதனால் நடை திறக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

ADVERTISEMENT

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளில் பம்பைக்குச் செல்கின்றனர். பம்பையிலிருந்து நடைப்பயணமாக சன்னிதானத்திற்குச் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்கின்றனர்.

ஆனால், பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், நிலக்கல்-பம்பை இடையே இயக்கப்படும் பேருந்துகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான பேருந்துகள் கிடைக்காததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பேருந்துகள் வந்ததும் அதில் ஏறுவதற்காகப் பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டனர். பேருந்துகளில் இருக்கைகளைப் பிடிப்பதற்காகப் பக்தர்கள் தங்களது இருமுடி பைகளை இருக்கைகளில் வைத்து இடம் பிடித்தனர்.

ADVERTISEMENT

ஐயப்பனுக்குக் காணிக்கையாக எடுத்துச் செல்லப்படும் இருமுடி பைகளைப் பேருந்து இருக்கைகளில் வைத்து இடம் பிடிக்கும் அளவுக்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பேருந்துகளில் இடம் கிடைக்காமல் முதியவர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வந்த குடும்பத்தினர் உள்ளிட்டோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, பம்பை-சாலக்காயம் சாலையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையின் சில பகுதிகளில் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மெதுவாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. நிலக்கல்லிலிருந்து பம்பைக்குச் செல்லும் பேருந்துகளும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால், பக்தர்களை இறக்கிவிட்டு மீண்டும் நிலக்கல்லுக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.

அக்டோபர் 18-ந் தேதி மாலை நிலக்கல்லில் பேருந்துகளுக்காகப் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஆனந்த் தலையிட்டு நடவடிக்கை எடுத்தார். பக்தர்களை பம்பைக்கு அழைத்துச் செல்வதற்காக போலீஸ் பேருந்தும் பயன்படுத்தப்பட்டது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதற்கேற்ப போக்குவரத்து வசதிகள் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நேரத்தில் பம்பை செல்லும் முக்கியச் சாலையில் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதாகப் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று முன்தினம் அக்டோபர் 17-ந் தேதி சபரிமலைக்குச் சென்ற கேரள முதல்வர் வி.டி.சதீசன், பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பம்பையில் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், நிலுவையில் உள்ள சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ள மண்டல, மகரவிளக்கு யாத்திரைக் காலத்தில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், அதற்குள் சாலைப் பணிகளை முடித்து, நிலக்கல்–பம்பை இடையே போதுமான பேருந்துகளை இயக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share