தமிழகத்தில் இன்று (அக்டோபர் 20-ந் தேதி) முதல் 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழகக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அதே பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 20-ந் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
நாளை (அக்டோபர் 21-ந் தேதி) தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
அக்டோபர் 22-ந் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இடி, மின்னலுடன் பலத்த காற்று
அக்டோபர் 20 முதல் 26-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரஞ்ச் அலர்ட் என்பது ஓரிரு இடங்களில் 11.5 செ.மீ. முதல் 20.4 செ.மீ. வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்பதைக் குறிக்கும்.
