12 நாடுகளின் அமெரிக்கர்களுக்கு ‘பாதுகாப்பு’ எச்சரிக்கை.. மத்திய கிழக்கில் வெடிக்கிறதா பெரும் போர்?

Published On:

| By Mathi

US-Middle East

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 12 நாடுகளில் உள்ள அமெரிக்கர்களுக்கு ஒரே நேரத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கில் மிகப் பெரும் போர் வெடிக்குமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையிலான மோதல்களால் ஏற்கெனவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி அமைப்பினர் சவுதி அரேபியாவில் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் தம்மாம் விமான நிலையங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் அக்டோபர் 18-ந் தேதி முதல் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளன.

ADVERTISEMENT

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன், ஈராக், ஈரான், இஸ்ரேல், ஜோர்டான், லெபனான், ஏமன் ஆகிய 12 நாடுகளில் உள்ள அமெரிக்கர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகங்கள் வெளியிட்டுள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பாதுகாப்பு சூழல் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இப்பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள், தற்போதைய பகுதிகளையும் தாண்டி மிக வேகமாக விரிவடையக்கூடிய அபாயம் உள்ளது.

ADVERTISEMENT

ஈரான் மற்றும் ஈரானுக்கு ஆதரவான அமைப்புகள், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அமெரிக்க நலன்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தக்கூடும். அமெரிக்க நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் அமெரிக்கர்களுடன் தொடர்புடைய இடங்களும் தாக்குதலுக்கு இலக்காகலாம்.

இதனால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கர்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படலாம். வான்வெளிகள் மூடப்படலாம். பயணங்களில் எதிர்பாராத தடைகள் ஏற்படலாம்.

விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் வெளியிடும் அறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவசர சூழல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான மாற்றுத் திட்டங்களை முன்கூட்டியே தயாரித்து வைத்திருக்க வேண்டும்.

போராட்டங்கள், பெரிய அளவிலான மக்கள் கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அமெரிக்கத் தூதரகங்களின் பாதுகாப்பு அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களுக்கான விமான சேவைகளை அக்டோபர் 24-ந் தேதி வரை நிறுத்துவதாக கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. ஜெட்டாவுக்கான தினசரி விமான சேவைகளையும் அந்நிறுவனம் குறைத்துள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share