பேரிடர்களைச் சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் : செங்கோட்டையன்

Published On:

| By Kavi

எவ்வளவு மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இது சூப்பர் எல் நினோ வருடம் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். 

ADVERTISEMENT

இந்தநிலையில் சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் இன்று (அக்டோபர் 19) செய்தியாளர்களைச்  சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன்,   ”இயற்கை மாற்றம், மழை அளவு ஆகியவற்றை பொறுத்து  ஆய்வுப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

அந்த அடிப்படையில், இன்று மழை பெய்யக்கூடிய பகுதிகளாக நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோவை, நீலகிரி போன்ற பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

நம்முடைய முதல்வருடைய அறிவுறுத்தலின் பெயரில், அந்தந்த பகுதியில் இருக்கிற மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அவருக்கு உறுதுணையாகப் பணியாற்றி வருகிற அனைத்து உயர் அதிகாரிகள், மற்ற துறையைச் சார்ந்த அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, அந்தந்த பகுதியில் அந்த பணிகளை மேற்கொள்வதற்காகத் தயாராகவே இருக்கிறார்கள்.

இன்று இரவு மழை பெய்கிற போது மழையினுடைய அளவு எவ்வளவு என்பது நாளை காலைக்குள் தெரியவரும். நேற்றைய தினம் பெய்த மழையில், குறிப்பாக கோவை மேட்டுப்பாளையத்தில் 6.2 சென்டிமீட்டர் மழை கூடுதலாகப் பெய்திருக்கிறது. நீலகிரியில் குறைந்த மழைதான். 2 சென்டிமீட்டர், 3 சென்டிமீட்டர் என்ற அளவில் பெய்திருக்கிறது. 

ADVERTISEMENT

ஒவ்வொரு நாளும் என்ன நிலை என்பதை பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக ஆய்வு செய்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர அறிவுரைப்படி அந்த பணிகளை நிறைவேற்றி வருகிறோம்.

சென்னையில நேற்று முன்தினம் திடீர் மழை வந்தது. பாதிப்புகள் இல்லாமல்  அதை கடந்துவந்துவிட்டோம்.  திடீரென்று 31 சென்டிமீட்டர் மழை பெய்தாலும் கூட உடனுக்குடன் நிவாரணப் பணிகளை ஆற்றியிருப்பதை முதல்வர் பாராட்டினார். 

எவ்வளவு மழை வந்தாலும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் முதல்வருடைய நோக்கம். இதற்காக ஏறத்தாழ மூன்று மாத காலமாக பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டோம். 

15 மண்டலங்களுக்கு 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை அமைச்சர், இந்த ஒருங்கிணைப்பு குழுவுக்கு  தலைமை ஏற்று, அனைத்து துறையையும் ஒருங்கிணைத்து அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக என்னென்ன பணிகளை நிறைவேற்ற வேண்டுமோ, உடனுக்குடன் தமிழக முழுவதும் இருக்கின்ற பல்வேறு பகுதியில் இருக்கின்ற பணிகளை நாங்கள் ஆய்வு செய்து, விரைந்து அந்த பணிகளை நிறைவேற்றுவதற்குத் தயார் நிலையில் இருக்கிறோம்.

பொதுவாக, நவம்பர்  முதல் வாரத்திற்குப் பிறகு, சூப்பர் எல் நினோ என்று சொல்லப்படுகிற அந்த மாற்றங்கள் உருவாகும் என்று நமக்கு புள்ளிவிவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறது. அப்படி வருகிறபோது அந்த காலகட்டத்தில் இயற்கையின் மாற்றங்கள் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

இயற்கை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது. ஆனாலும் இயற்கையிலிருந்து மக்களைக் காப்பது பெரிய கடமையாக, அதற்கு முன்னுரிமை வழங்கி நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் முழுமையான நேரத்தை அதற்காக ஒதுக்கி அந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் தமிழக மக்களுடைய சகஜ வாழ்க்கை சீரான முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share