நாகை மெத்தபெட்டமைன் பறிமுதல் விவகாரம்: 2 காவலர்கள் பணியிடமாற்றம்

Published On:

| By Pandeeswari Gurusamy

நாகையில் 137 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பூபாலன் உட்பட சுகன், மணிகண்டன், சதீஷ் ஆகிய நான்கு பேர் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை (DRI) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்த மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில், மெத்தபெட்டமைன் கடத்துவதற்கு காரை வழங்கியது தொடர்பாக பிரதாபராமபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கு மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.

இதனிடையே, வேளாங்கண்ணி டி.எஸ்.பி-யின் ஓட்டுநரான காவலர் சிவகுமார் மற்றும் வேளாங்கண்ணி காவல் நிலையப் பெண் காவலர் சங்கீதா ஆகியோர் தஞ்சாவூருக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மெத்தபெட்டமைன் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுகனின் உறவினர்தான், வேளாங்கண்ணி டி.எஸ்.பி-யின் கார் ஓட்டுநரான சிவகுமார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சுகன் குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் வேளாங்கண்ணி பகுதியில் உள்ள ‘குயின்ஸ் பேலஸ்’ விடுதியில் கைப்பற்றப்பட்ட டைரியில், டி.எஸ்.பி ஓட்டுநர் சிவகுமார் மற்றும் பெண் காவலர் சங்கீதா ஆகியோர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்களை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்தே இவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, வேளாங்கண்ணிப் பகுதியைச் சேர்ந்த மேலும் சில காவல் அதிகாரிகளும் இந்த வழக்கில் சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share