சிவகங்கையில் ரவுடி சுள்ளான் மதன் கொலையை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல்கள் விடுத்து வந்தனர். இதனையடுத்து இத்தகைய கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட 36 சோசியல் மீடியா பக்கங்களை சிவகங்கை போலீசார் முடக்கியுள்ளனர். மேலும் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே உள்ள மேலமங்கலத்தில் அக்டோபர் 18-ந் தேதி நடைபெற்ற வடமஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் சுள்ளான் மதன் தனது நண்பர்களுடன் கலந்து கொண்டிருந்தார்.

அன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் 5 இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் வந்த 11 பேர் கொண்ட கும்பல், சுள்ளான் மதனைத் தாக்க முயன்றது. அவர்களிடமிருந்து தப்பிக்க சுள்ளான் மதன் ஓடியபோது, அந்தக் கும்பல் அவரைத் துரத்திச் சென்றது.
அருகில் இருந்த கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்த சுள்ளான் மதனை அந்தக் கும்பல் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தப் படுகொலை தொடர்பாக பாபு, பாலமுருகன், பிரதீப் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 8 பேரைத் தேடி வருகின்றனர்.
இந்தப் படுகொலையின் பின்னணியில், 2024-ம் ஆண்டு ஜூன் 22-ந் தேதி நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறும், அதனைத் தொடர்ந்து ஜூன் 30-ந் தேதி நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவமும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல்துறை இன்று (அக்டோபர் 20-ந் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சுள்ளான் மதன் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களான Instagram மற்றும் Facebook ஆகியவற்றில் சிலர் இரு தரப்பினராகப் பிரிந்து, ஒருவருக்கொருவர் மாறி மாறி கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளனர்.
குறிப்பாக, ”விரைவில் தலைகள் சிதறும்”, ”பழிக்கு பழி தொடரும்” போன்ற வாசகங்களுடன், மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டு வந்தது, சமூக வலைதள ஊடகப் பிரிவின் கண்காணிப்பின்போது கண்டறியப் பட்டு. மேற்கண்ட பதிவுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட Instagram மற்றும் Facebook கணக்குகள் தொடர்பாக இன்று சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண்.82/26, மற்றும் 83/26 பிரிவு.196(1), 353(2) BNS-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 20 Instagram accounts, மற்றும் 1 Facebook account (blocked) முடக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் 36 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுப்பது, வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துக்களைப் பதிவிடுவது மற்றும் இரு தரப்பினரிடையே பகைமையை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். இவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
எனவே, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சமூகத்தில் பதற்றம், வன்முறை அல்லது சட்டம்—ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது, தொடர்புடைய BNS மற்றும் IT Act சட்டப் பிரிவுகளின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்கள் சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமான மற்றும் சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் பாதிக்கும் வகையிலான பதிவுகளைப் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
