தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் நேற்று (அக்டோபர் 20-ந் தேதி) நள்ளிரவு சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மைசூர் தசராவுக்கு அடுத்தபடியாக குலசை தசரா திருவிழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்த ஆண்டு தசரா திருவிழா அக்டோபர் 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் காளி, அம்மன், முருகன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலித்தனர்.
கடந்த 10 நாட்களாக கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு திருக்கோலங்களில் முத்தாரம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த நிலையில், தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது.
இதற்காக கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதிக்கு வந்தார்.
அப்போது முதலில் தன் முகத்துடன் வந்த மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்தார். இதையடுத்து சிங்க முகத்துடன் வந்த மகிஷாசூரனையும், மூன்றாவதாக எருது முகத்துடன் வந்த மகிஷாசூரனையும் வதம் செய்தார்.
இறுதியாக சேவல் வடிவில் வந்த மகிஷாசூரனுக்கும் முத்தாரம்மனுக்கும் கடும் போர் நடைபெற்றது. அப்போது குலாயுதத்தால் மகிஷாசூரனை முத்தாரம்மன் வதம் செய்தார்.
இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் காளி.. ஜெய் காளி..’ என முழக்கங்களை எழுப்பி அம்மனை வழிபட்டனர்.
சூரசம்ஹாரத்தைக் காண தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குலசேகரன்பட்டினத்தில் குவிந்தனர். காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
இதனிடையே நேற்று குலசேகரன்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால் குலசேகரன்பட்டினம் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தசரா திருவிழாவையொட்டி சுமார் 3,700 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவில் வளாகம், கடற்கரை மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து இன்று (அக்டோபர் 21-ந் தேதி) காலை முத்தாரம்மன் தேரில் வீதியுலா நடைபெறுகிறது. மாலையில் கொடியிறக்கம் மற்றும் பக்தர்கள் காப்பு களைதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனுடன் இந்த ஆண்டுக்கான குலசை தசரா திருவிழா நிறைவடைகிறது.
