ரீல்ஸ்கள்.. சமீப காலமாக நடைபெறும் கொலைகளுக்கு காரணமாக இவை இருப்பதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக இளம் வயதிலேயே கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் கும்பல் கும்பலாக இளைஞர்கள் ஈடுபடுவது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இளைஞர்கள் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்காகவும் போராடி கைது செய்யப்படுகின்றனர். ஆனால் நமது தமிழ்நாட்டில் பழிக்கு பழி கொலைக்காக இளைஞர்கள் கொத்து கொத்தாக கைதாகி கொண்டிருக்கின்றனர்.
20 – 30 வயது என்பது இளைஞர்களுக்கு வசந்தகாலம்.
குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு, வேலை தேடும் ஆர்வம், சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற துடிப்பு ஆகியவைதான் இந்த வயதின் இயல்பான அடையாளங்களாக இருந்தன.
இன்றைய காலகட்டத்தில் இதே வயதைக் கொண்ட சில இளைஞர்களின் கைகளில் அரிவாள் கத்தியை ஏந்துவதும், கொலை வழக்குகளில் கைதாகி காவல் நிலைய வாசல்களில் நிற்பதும், சிறையில் அடைக்கப்படுவதும் சமூகத்தின் பெரும் துயரமாக மாறியுள்ளது.
20களில் இருக்கும் இளைஞர்களை ரவுடி என்றும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் போலீசார் அறிக்கைகள் கூறுவது நெஞ்சை பதற வைக்கிறது.
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சென்னையில் தவெக நிர்வாகி கண்ணன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்குமே வயது 20 தான். தனது பெரியப்பா மற்றும் அப்பா இருவரும் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக பரணி (20) என்ற இளைஞர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தவெக நிர்வாகி கண்ணனை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் சிவகங்கையிலும் சுள்ளான் என்ற மதன் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். மதன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நமது மின்னம்பலத்தில் தேதி வாரியாக என்ன நடந்தது என்பதை விவரித்து, ’ஜல்லிக்கட்டு.. அடுத்தடுத்து படுகொலைகள்.. ‘சுள்ளான்’ மதன் ஓட ஓட வெட்டிக் கொலை – ‘ரத்தம் தெறிக்கும்’ சிவகங்கை சீமை!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
யார் இந்த சுள்ளான் மதன்?
சிவகங்கை, திருப்பாச்சேத்தி அருகே உள்ள ஆவரங்காடு கிராமத்தைச் சேர்ந்த அக்னி ராஜ் என்ற சட்டக்கல்லூரி மாணவரின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் அவரின் நண்பர்களால் தொடங்கப்பட்ட ‘அக்னி பிரதர்ஸ்’ என்ற குழுவில் அங்கமாக இருக்கும் பலரில் சுள்ளான் மதன் முக்கியமான நபராக அறியப்படுகிறார்.
இந்த மதன் (26) மீது 15 குற்றவழக்குகள் இருப்பதாகவும், சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் போலீஸ் அறிக்கை கூறுகிறது.
அவற்றில் 13 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.
மதன், குற்ற வழக்குகளில் சிறைக்கு சென்று வரும் போதும், நீதிமன்றத்தில் பிணை வாங்கிக் கொண்டு வெளியே வரும் போதும் ரீல்ஸ் எடுத்து பதிவிடுவது, கத்தியால் கேக் வெட்டி கொண்டாடி அதை பதிவிடுவது என இதையே வாடிக்கையாக வைத்திருந்தார். இதை பார்த்த சில இளைஞர்கள் அவருடன் சேர்ந்து செயல்பட்டு வந்தனர்.
இவரால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், 30.9.2026 அன்று, சிவகங்கை வட்டாட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, MC.No. 243/26 -ன் கீழ், அவரிடமிருந்து ஓராண்டு காலத்திற்கு நன்னடத்தைப் பிணையப் பத்திரம் பெறப்பட்டது.
மேலும், சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண் 137/2026 வழக்கில், மதன் 01.10.2026 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இருப்பினும், அவர் 07.10.2026 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு, இவ்வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி, சிவகங்கை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் Crl MP 2854/26-ன் கீழ் காவல்துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு நிலுவையில் உள்ளது.
மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்ற நிலைமையைக் கருத்தில் கொண்டு, சிவகங்கை நகர் காவல் நிலைய குற்ற எண் 92/2022 வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி, காவல்துறையினர் சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.
இந்தசூழலில் தான் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதோடு முடிந்துவிட்டதா?
சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் , மதனின் விசுவாசிகள் என கூறி பல்வேறு ரீல்ஸ்கள் வெளியாகி வருகின்றன.
குறிப்பாக, “விரைவில் தலைகள் சிதறும்”, “பழிக்குப் பழி தொடரும்” போன்ற வாசகங்களுடன், மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டு வந்தன.
இப்படி பதிவுகள் வெளியான 20 இன்ஸ்டாகிராம் கணக்குகள் உட்பட மொத்தம் 36 சமூக வலைதள கணக்குகளை போலீசார் முடக்கியுள்ளனர். எனினும் தொடர்ந்து மதன் ஆதரவாளர்களின் ரீல்ஸ்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தவழக்கில் ஏற்கனவே மூன்று பேர் இன்று நான்கு பேர் என 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
20 வயது இளைஞர்கள்…
திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் (26), மானாமதுரை உடகுளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (19), ஏ.விளாக்குளம் பகுதியைச் சேர்ந்த பாபு (23), சிவகங்கையை சேர்ந்த சந்தோஷ் (19), ஜெய மாணிக்கராஜ் (20), முத்து சூர்யா (20), விக்னேஷ் (23) என இளம் வயதினர் கைதாகியுள்ளனர்.
இனி இந்த இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும்… இவர்கள் வாழ்க்கை மட்டுமின்றி இவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கையும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
இந்த ஜென்சி கிட்ஸ்கள் சமூக வளைதளங்களுக்கு அடிமையாகி கிடக்கின்றனர். குறிப்பாக ரீல்ஸ் மோகம். எனவே, சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் வகையிலோ, சாதி ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலோ ரீல்ஸ்கள் மற்றும் பதிவுகளை வெளியிடுவோர் மீது உடனடி நடவடிக்கை தேவை என பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதேபோல, தங்கள் பிள்ளைகள் எந்த மாதிரியான ரீல்ஸ்கள் பார்க்கிறார்கள், இணையத்தில் எத்தகைய குழுக்களுடன் இயங்குகிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.
நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்பார்கள், ஆனால் இங்கு இளைஞர்களின் எதிர்காலமே கேள்விகுறியாகியுள்ளது. அதற்கு உதாரணம் தான் சுள்ளான் மதன் கொலை வழக்கு.
