சவுதியில் நெற்றியில் முத்தமிட்டதால் மரண தண்டனையா? 2 வங்கதேசத்தவருக்கு என்னதான் நடந்தது?

Published On:

| By Pandeeswari Gurusamy

குடும்பத்தின் வறுமையைப் போக்கி, நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் சவுதி அரேபியா சென்ற வங்கதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் மற்றும் ஸ்வீட்டி அக்தர் ஆகிய இருவருக்கும், மெக்கா மசூதியில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இருவரும் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டதற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

கடன் வாங்கி சவுதி சென்ற இளைஞர்

வங்கதேசத்தைச் சேர்ந்த 22 வயதான நஸ்ருல் இஸ்லாமின் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் இருந்துள்ளது. இதனால் இஸ்லாமின் தந்தை அப்துல் பசீர், 7 லட்சம் டாக்கா கடன் வாங்கி தனது மகனை சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்தார்.

ADVERTISEMENT

2022-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி சவுதி அரேபியா சென்ற நஸ்ருல், அங்கு துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி நஸ்ருல் திடீரென கைது செய்யப்பட்டார்.

வங்கதேசத்தின் ஜெட்டா துணைத் தூதரகம் அக்டோபர் 18-ந் தேதி அனுப்பிய கடிதத்தின்படி, சவுதி அரேபியாவின் இணையக் குற்றச் சட்டத்தின் கீழ் நஸ்ருல் கைது செய்யப்பட்டதாக சிறை கைதிகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல, ஸ்வீட்டி அக்தர் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதி திருமணத்திற்கு வெளியேயான பாலியல் உறவு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நஸ்ருல் ஜெட்டாவில் உள்ள சிறையிலும், ஸ்வீட்டி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர். இருவரும் அல் மஜால் நிறுவனத்தில் துப்புரவு பணியாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

ADVERTISEMENT

நெற்றியில் முத்தமிட்டதற்காக மரண தண்டனையா?

மெக்காவில் உள்ள மசூதி ஒன்றில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டு, அதன் புனிதத்தன்மையை மீறியதாகக் கூறி நஸ்ருல் இஸ்லாம் மற்றும் ஸ்வீட்டி அக்தர் ஆகியோருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் அக்டோபர் 14-ந் தேதி அறிவித்தது.

இருப்பினும், இருவரும் நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால், இதற்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் இல்லை.

இதில் மற்றொரு முக்கியமான தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வங்கதேச துணைத் தூதரகத்துக்கு சவுதி அதிகாரிகள் வழங்கிய கைதிகள் பட்டியலில் நஸ்ருல், ஸ்வீட்டி ஆகிய இருவரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

ஆனால், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அந்தப் பட்டியலில் எந்தத் தகவலும் இல்லை.

மேலும், இருவரும் முதலில் கைது செய்யப்பட்டபோது குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், பின்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கான காரணமாக சவுதி அதிகாரிகள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கும் என்ன தொடர்பு என்பது தெளிவாகவில்லை.

இருவருக்கும் எதிரான வழக்குகள் எவ்வாறு விசாரிக்கப்பட்டன, அவர்களுக்கு சட்ட உதவி வழங்கப்பட்டதா, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு கிடைத்ததா என்பன குறித்த முழுமையான விவரங்களும் வெளியாகவில்லை.

ஊடகங்கள் மூலம் தெரிந்த மரண தண்டனை

கடந்த அக்டோபர் 14-ந் தேதி மெக்காவில் நஸ்ருல் இஸ்லாமுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கு ஊடகச் செய்திகள் மூலமாகவே தெரியவந்துள்ளது.

சிறையில் இருந்தபோதும் அவர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நஸ்ருலின் தந்தை அப்துல் பசீர் கூறுகையில், “கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டு அழுத்தம் கொடுக்கின்றனர். எனது மகன் உரிய காரணமின்றி மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் எனக்கு நீதி வேண்டும். அவனது உடலைத் தாயகம் கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நஸ்ருலின் மரணச் செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் அவரது தந்தைவழி அத்தை அபேதா பேகம் மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மகனின் உடலை வங்கதேசத்துக்கு கொண்டுவருவதுடன், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்வீட்டி அக்தரின் குடும்பத்தினரும் தவிப்பு

இந்த வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்வீட்டி அக்தரின் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஸ்வீட்டியை சவுதி அரேபியாவுக்கு அனுப்புவதற்காக அவரது தந்தை ஃபசல் மியா 1.5 லட்சம் டாக்கா கடன் வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

சவுதியில் பணியாற்றி வந்த ஸ்வீட்டி, மற்ற பெண் தொழிலாளர்களுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து தன் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக குடும்பத்தினரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பிறகு சுமார் ஓராண்டு காலம் ஸ்வீட்டியுடன் குடும்பத்தினருக்கு தொடர்பு இல்லாமல் இருந்துள்ளது. பின்னர் மீண்டும் பேசத் தொடங்கிய அவர், மாதத்திற்கு ஒருமுறை குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடைசியாக 15 நாட்களுக்கு முன்பு பேசியபோது, இன்னும் 2 மாதங்களில் சிறையிலிருந்து விடுதலையாக வாய்ப்புள்ளதாக ஸ்வீட்டி தெரிவித்ததாக அவரது தந்தை கூறியுள்ளார்.

ஸ்வீட்டியின் தாய் ஜோஹுரா கூறுகையில், தனது மகள் விவாகரத்து பெற்றவர் என்றும், அவருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஸ்வீட்டி சவுதி அரேபியா சென்ற பிறகு, அவரது மூத்த சகோதரி பியூட்டி குழந்தையை வளர்த்து வருகிறார்.

“என் மகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் எனக்குச் சொல்ல வேண்டும். அவள் உயிருடன் இருக்கிறாளா, இல்லையா என்பதுகூட எனக்குத் தெரியவில்லை. என் மகள் எனக்குத் திரும்பக் கிடைக்க வேண்டும்” என்று ஜோஹுரா தெரிவித்துள்ளார்.

சவுதி அதிகாரிகள் ஸ்வீட்டி அக்தருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் தங்களுக்கு நேரடியாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி வருகின்றனர்.

வங்கதேச அரசு அதிருப்தி

இந்தச் சம்பவம் தொடர்பாக வங்கதேச அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
வங்கதேச வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஹுமாயூன் கபீர், அக்டோபர் 19-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு நிலவி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தகவல் பரிமாற்றத்தில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்படும்போதோ அல்லது குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்போதோ தங்கள் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோல, வங்கதேசத்தில் சவுதி அரேபிய நாட்டவர் கைது செய்யப்பட்டால் அந்நாட்டு அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபிய அதிகாரிகளிடம் விரிவான விளக்கம் கோரப்பட்டுள்ளது.

அக்டோபர் 18-ந் தேதி டாக்காவில் உள்ள சவுதி அரேபிய தூதரை வங்கதேச வெளியுறவுத்துறை அதிகாரி நஸ்ருல் இஸ்லாம் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, மரண தண்டனை விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அனுப்பப்பட்ட தூதரக கடிதத்தின் நகலும் வழங்கப்பட்டது.

இந்தச் சந்திப்பு குறித்து வங்கதேச வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஷாமா ஒபாயித் இஸ்லாம் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

அதேநேரத்தில், சவுதி தூதரை அதிகாரப்பூர்வமாக அழைப்பாணை அனுப்பி வரவழைத்ததாக இந்தச் சந்திப்பைக் குறிப்பிடக் கூடாது என்று வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருவரின் மரண தண்டனை தொடர்பான முழுமையான விவரங்களை சவுதி அரேபியாவிடம் வங்கதேச அரசு கேட்டுள்ளது.

விடை தெரியாத கேள்விகள்

வறுமையைப் போக்குவதற்காக வெளிநாடு சென்ற நஸ்ருலின் மரணம் அவரது குடும்பத்தைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறுபுறம், ஸ்வீட்டி அக்தரின் குடும்பத்தினர் தங்கள் மகளின் நிலை குறித்து அதிகாரப்பூர்வமான தகவலுக்காக காத்திருக்கின்றனர்.

இருவரும் முதலில் வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக தூதரக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பின்னர் மசூதியில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இடையேயான தொடர்பு என்ன? மரண தண்டனை விதிக்கப்பட்ட விவரம் கைதிகள் பட்டியலில் ஏன் இடம்பெறவில்லை? இருவருக்கும் உரிய சட்ட உதவி கிடைத்ததா? மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு வங்கதேச அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படாதது ஏன்?

இத்தகைய கேள்விகளுக்கு இன்னும் முழுமையான பதில் கிடைக்கவில்லை.

சமூக வலைதளங்களில் கண்டனம்

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, நெற்றியில் முத்தமிட்டதற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக பரவும் தகவலை முன்வைத்து சவுதி அரேபியாவின் சட்டங்கள் குறித்தும், மரண தண்டனையின் கடுமை குறித்தும் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

பொது இடங்களில் இது போன்ற சம்பவங்கள் இயல்பாக நிகழ்கிறது. அதற்கான இத்தனை கொடூரமான மரண தண்டனை விதிக்கப்படுவதை ஏற்கவே முடியாது. எல்லா மத அடிப்படை வாதமும் மக்களுக்கு எதிரானதுதான் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், நெற்றியில் முத்தமிட்டதுதான் மரண தண்டனைக்கான காரணம் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே, இருவருக்கும் எதிரான உண்மையான குற்றச்சாட்டுகள், நீதிமன்ற விசாரணை விவரங்கள் மற்றும் மரண தண்டனைக்கான சட்ட அடிப்படை ஆகியவற்றை சவுதி அரேபிய அரசு முழுமையாக வெளியிட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share