புதுச்சேரி உள்துறை அமைச்சருக்கு வீடியோ கான்பரன்ஸில் ஆசீர்வாதம் தந்த ’தேடப்படும் குற்றவாளி நித்தியானந்தா’

Published On:

| By Pandeeswari Gurusamy

தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தாவிற்கு சொந்தமான புதுச்சேரி ஆசிரமத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்ற‌ வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமைச்சரை நித்யானந்தா வீடியோவில் தோன்றி அவரை வரவேற்றுப் பேசுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உளளது.

பெங்களூரூ பிடதியில் கடந்த 2003-ம் ஆண்டு ஆசிரமத்தை தொடங்கி நடத்தி வந்தவர் நித்யானந்தா. தமிழகத்தில் திருவண்ணாமலை, ராஜபாளையம், புதுச்சேரி ஏம்பலம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நித்தியானந்தாவிற்கு ஆசிரமம் உள்ளது.

ADVERTISEMENT

இந்த சூழலில் கடந்த 2018-ல் பெங்களூரு ஆசிரமத்தில் நித்தியானந்தாவால் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் அவர் மீது பாலியல் துன்புறுத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பெங்களூரு போலீசார் தலைமறைவாக இருந்த நித்தியானந்தாவை தேடத் தொடங்கினர். அனால் நித்யானந்தா மாயமானார். இதனால் தேடப்படும் குற்றவாளியாக நித்யானந்தா அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கைலாசா என்ற பெயரில் தனி நாட்டை நித்யானந்தா உருவாக்கினார். ஈக்வடார் அருகே உள்ள ஒரு சிறிய தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற தனி நாட்டை உருவாக்கியதாகத் தெரிவித்து, அதற்கென தனிக்கொடி, அமைச்சரவை, இணையதளம் மற்றும் ரிசர்வ் வங்கி போன்றவற்றை அறிவித்தார். எனினும், அவருக்கு அடைக்கலம் தரப்படவில்லை என்று ஈக்வடார் தூதரகம் அப்போது விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. இவர் மீது வழக்குகள் உள்ளதால் அவரால் இந்தியா திரும்ப முடியவில்லை. அவ்வப்போது சமூக வலைதளங்களில் தோன்றி தனது பக்தர்களுடன் பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ADVERTISEMENT

இதனிடையே புதுச்சேரியை அடுத்த ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தா தியான பீடத்திற்கு திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் புதுச்சேரி நித்யானந்தா தியான பீடத்தின் நிர்வாகிகள், புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினர்.

அப்போது தியான பீடத்திற்கு விரைவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், விழாவில் பங்கேற்க நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாகவும் கைலாசா நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக மத்திய அரசிடம் பேசி வருகிறோம். நித்யானந்தா புதுச்சேரிக்கு வரும் போது மாநில அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தனர். தேடப்படும் குற்றவாளியான நித்யானந்தா புதுச்சேரிக்கு வர இருப்பதாக தியான பீட நிர்வாகிகள் தெரிவித்ததால் பரபரப்பான சூழல் நிலவியது.

ADVERTISEMENT

அந்த பரபரப்பு அடங்குவதற்குள், புதுச்சேரி ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தா தியான பீடத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் புதுச்சேரி பாஜகவை சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாசை பூரண கும்ப மரியாதையுடன் நித்யானந்தா சீடர்கள் வரவேற்தின்றனர். பின்னர் வீடியோவில் தோன்றிய நித்யானந்தா பேச ஆரம்பித்தவுடன் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் பயபக்தியுடன் நித்யானந்தாவை கையெடுத்து கும்பிடும்கின்றனர். பின்னர் அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயத்திடம் நித்யானந்தா பேசுகிறார்.

அந்த வீடியோவில் நித்யானந்தா தோன்றி பேசுகையில், கைலாசா புதுச்சேரிக்கு வருகை தந்திருக்கும் புதுச்சேரியின் மாண்புமிகு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்களையும், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் அவர்களையும் மற்றும் எல்லோரையும் வணங்கி வரவேற்கிறேன். நீங்கள் கைலாசா புதுச்சேரிக்கு வந்திருப்பதற்கு மிகுந்த நன்றியும், சந்தோஷமும், ஆனந்தத்தோடும் உங்களை வரவேற்கின்றேன்.

கைலாஷா புதுச்சேரியின் தலைவர் விநாயகம் மற்றும் பக்தர்கள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு எனது சார்பில் சால்வை மற்றும் மாலை அணிவித்து வரவேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒரு முறை பாண்டிச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் அவர்களை வணங்கி வரவேற்கிறேன். நீங்கள் வந்தது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அதில் உள்ளது.

தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாசுக்கு கைலாசாவின் சிறப்புகள் அடங்கிய புத்தகத்தையும் தியான பீட நிர்வாகிகள் வழங்கினர். தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தாவின் மடத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பாஜகவை சேர்ந்த உள்துறை அமைச்சரே பங்கேற்ற விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share