சுள்ளான் மதன் கொலை வழக்கில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்த 26 வயதான சுள்ளான் மதன் என்ற ரவுடி கடந்த அக்டோபர் 18ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்து சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே, இந்த வழக்கில் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் (26), மானாமதுரை உடகுளம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (19), ஏ.விளாக்குளம் பகுதியைச் சேர்ந்த பாபு (23), சிவகங்கையை சேர்ந்த சந்தோஷ் (19), ஜெய மாணிக்கராஜ் (20), முத்து சூர்யா (20), விக்னேஷ் (23) என ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மிதுன் மாணிக்கம் மற்றும் அஜித் குமார் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டு நடந்த ஜெயசூர்யா சுபாஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைக்கு பழிக்கு பழியாக தான் சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்டிருப்பார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், வேறொரு கொலை வழக்கில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருப்பதாக போலீஸ் தகவல்கள் கூறுகின்றன.
அதாவது, சுள்ளான் மதனை கொலை செய்தது மானாமதுரை அடுத்துள்ள வேலூர் முருகபாஞ்சான் என்ற கிராமத்தைச் சேர்ந்த மிதுன் மாணிக்கத்தின் கும்பல் என தெரிய வந்தது.
இதைையடுத்து மிதுன் மாணிக்கத்தையும் அவரது கூட்டாளியான அஜித்குமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
“சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை பேருந்து நிலையத்தில் 19 வயதான ராஜேஷ் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். இவரை சுள்ளான் மதன் நண்பர் அருண்பாண்டியன் கொலை செய்திருக்கிறார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜாமீனில் வெளியே வந்த சுள்ளான் மதனை ராஜேஷ் நண்பரான மிதுன் மாணிக்கம் கொலை செய்திருக்கிறார்” என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
