பூந்தமல்லி – வடபழனி ரயில் இயக்க நேரத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது.
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையை கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பிரதமர் மோடி , முதலமைச்சர் விஜய் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
அன்றிலிருந்து காலை 7 மணி முதல் அவ்வழித் தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காலை 6 மணி முதலே மெட்ரோ ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று ரயில் இயக்க நேரத்தை மெட்ரோ நிர்வாகம் மாற்றியமைத்துள்ளது.
இதுகுறித்து இன்று (அக்டோபர் 21) வெளியிட்ட அறிவிப்பில்,
”சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-II வழித்தடம் 4-ல், பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ இரயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்திற்கு 11 உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் அக்டோபர் 11, 2026 அன்று மெட்ரோ இரயில் பயணிகள் சேவையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தொடங்கியது.
இச்சேவை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், வழித்தடம் 4-இல் இரயில் சேவை தொடங்கும் நேரத்தை அக்டோபர் 23, 2026 (வெள்ளிக்கிழமை) முதல் காலை 6.00 மணியாக மாற்றியமைப்பதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மகிழ்ச்சியடைகிறது.

இந்த நேர மாற்றம் பயணிகளுக்கு கூடுதல் வசதியை வழங்குவதோடு, வடபழனி மற்றும் பூவிருந்தவல்லி நோக்கி அதிகாலைப் பயணங்களை எளிதாக மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 23, 2026 முதல், 15 கி.மீ. நீளமுள்ள இவ்வழித்தடத்தின் இரு திசைகளிலும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வழக்கமான மெட்ரோ இரயில் பயணிகள் சேவை இயக்கப்படும்.
இரு திசைகளிலும் காலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வழக்கமான மெட்ரோ இரயில் பயணிகள் சேவை இயக்கப்படும்.
பூவிருந்தவல்லி புறவழிச்சாலை மெட்ரோ மற்றும் வழித்தடம் 4-இன் வடபழனி மெட்ரோ ஆகிய இரு முனையங்களிலிருந்தும் கடைசி இரயில் சேவை இரவு 9.00 மணிக்கு இயக்கப்படும். எனவே, பயணிகள் மாற்றியமைக்கப்பட்ட இரயில் சேவை நேரத்தைக் கவனத்தில் கொண்டு, தங்களது பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை நேரத்தை மாற்றியமைக்கப்பட்டிருக்கும் நிலையில் இரவு 9 மணிக்கு பின்னரும் ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
