சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் இடையே நாளை (அக்டோபர் 23-ந் தேதி) முதல் 12 பெட்டிகளைக் கொண்ட புதிய ஏசி மின்சார ரயில் சேவை தொடங்குகிறது. இந்த ரயில்கள் சோதனை அடிப்படையில் டிசம்பர் 24-ந் தேதி வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக வேலைக்குச் செல்வோர், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் மின்சார ரயில்களைப் பயன்படுத்துகின்றனர்.

சென்னையில் முதல்முறையாக 2025-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் வழித்தடத்தில் 2-வது ஏசி மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ஏசி மின்சார ரயிலில் 12 பெட்டிகள் உள்ளன. சுமார் 5,000 பயணிகள் வரை பயணம் செய்யும் வகையில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமராக்கள், ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டிஜிட்டல் தகவல் பலகைகள், அகலமான ஜன்னல்கள், அவசர நேரத்தில் ரயில் ஊழியர்களைத் தொடர்புகொள்ளும் வசதி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
ஆவடியில் இருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் ஏசி மின்சார ரயில் காலை 7.45 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். அரக்கோணத்தில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் ரயில் காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.40 மணிக்குப் புறப்படும் ரயில் காலை 10.25 மணிக்கு ஆவடி சென்றடையும்.
இதேபோல மாலை 5.25 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்படும் ரயில் மாலை 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 6.30 மணிக்குப் புறப்படும் ரயில் இரவு 7.55 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.
அரக்கோணத்தில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்படும் ரயில் இரவு 9.10 மணிக்கு ஆவடி சென்றடையும்.
இந்த ஏசி மின்சார ரயில்கள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இயக்கப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படாது.
சென்னை சென்ட்ரல், பெரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் இந்த ரயில் சேவை, மேற்கு புறநகர்ப் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலைக்குச் செல்லும் பயணிகளுக்குக் கூடுதல் வசதியாக இருக்கும்.
