கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக்க வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இந்த நிலையில், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைத் தனிநாடாக்கும் முயற்சிக்கு அங்குள்ள மக்கள் செம்ம அடி கொடுத்துள்ளனர். அக்டோபர் 19-ந் தேதி நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், கனடாவிலிருந்து பிரிவதற்கான நடவடிக்கைகளை 76% மக்கள் நிராகரித்துள்ளனர்.

ஆல்பர்ட்டா மாகாணமும் மக்களும்
கனடாவின் மேற்குப் பகுதியில் அமெரிக்க எல்லையை ஒட்டி அமைந்துள்ளது ஆல்பர்ட்டா மாகாணம். இந்த மாகாணத்தில் க்ரீ, பிளாக்ஃபுட் உள்ளிட்ட பல்வேறு பூர்வகுடி தேசிய இன மக்களும், பிற பகுதிகளில் இருந்து குடியேறிய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆல்பர்ட்டா என்பது ஒரே மொழி பேசக் கூடிய, ஒரே கலாசாரத்தை பின்பற்றுகிற, ஒரே நிலப்பரப்பில் வாழும் தனித்துவமான தேசிய இன மக்கள் வாழும் பகுதி அல்ல.
1870-ம் ஆண்டு இன்றைய ஆல்பர்ட்டாவின் பெரும்பகுதி கனடாவின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. பின்னர் 1905-ம் ஆண்டு கனடாவின் தனி மாகாணமாக ஆல்பர்ட்டா உருவாக்கப்பட்டது. அதாவது, முன்பு தனிநாடாக இருந்து கனடாவுடன் இணைந்த மாகாணம் ஆல்பர்ட்டா அல்ல.
மத்திய- மாகாண அரசு மோதல் ஏன்?
அதே நேரத்தில், கனடா மத்திய அரசுக்கும் ஆல்பர்ட்டா மாகாண அரசுக்கும் நீண்டகாலமாக மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக, ஆல்பர்ட்டாவில் கிடைக்கும் எண்ணெய், இயற்கை எரிவாயு மூலம் வரும் வருமானத்தை யார் கட்டுப்படுத்துவது, மாகாண அரசுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்க வேண்டும் என்பதில் இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
மேலும் ஆல்பர்ட்டாவின் இயற்கை வளங்களால் கிடைக்கும் வருவாயை மத்திய அரசு மற்ற மாகாணங்களுக்குப் பயன்படுத்துவதாகவும், எண்ணெய் உற்பத்திக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய அதிருப்திகளே, ஆல்பர்ட்டா தனிநாடு கோரிக்கைக்கு அடிப்படையாகவும் அமைந்தன.
ஆல்பர்ட்டா தனிநாடு கோரிக்கையை Alberta Prosperity Project உள்ளிட்ட அமைப்புகள் முன்னெடுத்தன. ஆல்பர்ட்டா மாகாண மக்கள் உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராக, இயற்கை வளங்களை கபளீகரம் செய்து பிற மாகாணங்களை கொழுக்க வைப்பதற்கு எதிராக போர்க்குரல் எழுப்புவதும் தனிநாடு கோருவதும் இயல்பிலேயே புரிந்து கொள்ளக் கூடியதும் மக்களிடையே ஆதரவை பெறக் கூடியதுமானதுதான்.

உள்ளே வந்த அமெரிக்கா
ஆனால் ஆல்பர்ட்டா தனிநாடு கோரிக்கை முழக்கத்தின் பாதை.. ‘அமெரிக்காவில்’ போய் ஐக்கியமாவதில் முடிகிறது என்பதுதான் சர்ச்சையின் மையம்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றது முதலே கனடாவை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக மாற்ற வேண்டும் என்று பேசி வருகிறார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் அந்நாட்டு மக்களுக்கு வரிச் சுமை குறையும் என்றும், பொருளாதாரம் வளரும் என்றும் கூறி வருகிறார். இதற்கு கனடா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்நாட்டின் எண்ணெய் வளம் நிறைந்த ஆல்பர்ட்டா மாகாணத்தைத் தனிநாடாக்கக் கோரும் இயக்கத்தினர் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆம்.. கடந்த ஜனவரி மாதம் ஆல்பர்ட்டா தனிநாடு கோரும் அமைப்புகளின் பிரதிநிதிகள் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை வாஷிங்டனில் சந்தித்தனர்.
ஆனாலும் கனடாவில் இருந்து பிரிந்து தனிநாடாக விரும்பும் ஆல்பர்ட்டா மாகாணத்தை அமெரிக்காவின் மாநிலமாக இணைக்கும் நோக்கமே எங்களுக்கு இல்லை என அடித்து சொன்னது அமெரிக்கா. அப்படி சொன்ன அமெரிக்காதான் தனக்கு தோதான ஒரு குட்டி தேசமாக ஆல்பர்ட்டாவை உருவாக்குவது நோக்கம் என்ற அபிலாஷையும் வெளிப்படுத்தியது.
அதாவது “ஆல்பர்ட்டாவை சுதந்திரமான தனிநாடாக உருவாக்குவதே அமெரிக்காவின் நோக்கம்” என திருவாய் மலர்ந்தருளியது அமெரிக்கா.
இத்தகைய அமெரிக்காவின் தலையீடு, இயல்பாகவே ஆல்பர்ட்டா தனிநாடு கோரிக்கை மீது அச்சத்தை ஏற்படுத்தியது. ஆல்பர்ட்டா தனிநாடு உருவானால் அது எத்தனை காலத்துக்கு தனி நாடாகவே இருக்கும்? அல்லது டொனால்ட் டிரம்ப்பின் பேராசைப்படியே அமெரிக்காவின் ஒரு மாநிலமாக ஐக்கியமாகிவிடுமா? என்ற கேள்விகளும் அலையடித்து கொண்டிருந்தன.

அக்.19-ல் ஆல்பர்ட்டா தனிநாட்டுக்கான பொதுவாக்கெடுப்பு
இந்தப் பின்னணியில் ஆல்பர்ட்டா மாகாணத்தில் அக்டோபர் 19-ந் தேதி உலக நாடுகள் உன்னிப்புடன் கவனித்த பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது.
ஆல்பர்ட்டா, கனடாவின் ஒரு மாகாணமாகத் தொடர வேண்டுமா அல்லது கனடாவிலிருந்து பிரிந்து தனிநாடாக வேண்டுமா? என்பதற்கான பொதுவாக்கெடுப்புதான் இது. அதனால்தான் இது உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றது.
அதேநேரத்தில், ஆல்பர்ட்டா உடனடியாகத் தனிநாடாக மாறுவதற்கான வாக்கெடுப்பு இது அல்ல. தனிநாடு தொடர்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டுமா என்பதற்கான வாக்கெடுப்பாகும்.
கியூபெக் வாக்கெடுப்பு
கனடாவில் தனிநாடு கோரிக்கை தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடைபெறுவது இது முதல் முறையல்ல. பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கியூபெக் மாகாணத்தில் ஏற்கெனவே 2 முறை பொதுவாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. 1980-ம் ஆண்டு மே 20-ந் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் தனி இறையாண்மை பெறுவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கும் திட்டத்தை 59.56% மக்கள் நிராகரித்தனர். மீண்டும் 1995-ம் ஆண்டு அக்டோபர் 30-ந் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் 50.58% பேர் தனிநாடு கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தனர். அப்போது வெறும் 54,288 வாக்குகள் வித்தியாசத்தில்தான் கியூபெக் கனடாவுடன் தொடர்வது உறுதியானது.
ஆனால் கியூபெக்கைப் போல அல்லாமல், ஆல்பர்ட்டாவில் பல்வேறு பூர்வகுடி தேசிய இன மக்களும் குடியேறிய மக்களும் வாழ்கின்றனர். ”ஆல்பர்ட்டா தனிநாடு” தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதல் முறை.
ஆல்பர்ட்டா தனிநாடு கோரிக்கைக்கு எதிராக மக்கள்
அக்டோபர் 19-ந் தேதி வாக்கெடுப்பு நடைபெற்றது. அக்டோபர் 20-ந் தேதி வெளியான ஆரம்பகட்ட முடிவுகளின்படி, சுமார் 76% பேர் கனடாவுடன் ஒருங்கிணைந்த ஒரு மாகாணமாக ஆல்பர்ட்டா நீடிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுமார் 24% பேர் தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
டிரம்ப் பேராசைக்கு சம்மட்டி அடி
ஆல்பர்ட்டா மக்கள், தனிநாடு கோரிக்கைக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பது வாக்கு எண்ணிக்கை முடிவாக இருக்கலாம்… உண்மையில் கனடாவை அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள முதல் கட்டமாக ஆல்பர்ட்டா மாகாணத்தை துண்டாடி தனிநாடாக்கிட நினைத்த ”அமெரிக்காவின் பேரரசன்” டொனால்ட் டிரம்ப்பின் பேராசைக்கு விழுந்த சம்மடி அடியாகவே ஆல்பர்ட்டாவின் முடிவுகள் பார்க்கப்படுகின்றன.
