சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருவிக பாலம் வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கலங்கரை விளக்கத்திலிருந்து திருவிக பாலம் வரை நான்கு கிலோமீட்டர் நீளத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு தகுதியான ஆலோசகர்களை நியமிக்கவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இதை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணிக்கான ஆவணத்தை நெடுஞ்சாலை துறை வெளியிட்டுள்ளது.
இந்த நான்கு கிலோமீட்டர் பறக்கும் சாலையின் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வது, போக்குவரத்து ஆய்வு, மண் பரிசோதனை, மழைநீர் வடிகால், சந்திப்பு மேம்பாடு, சர்வீஸ் சாலைகள் வடிவமைப்பு, செலவு மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் ஆகியவை இந்த திட்ட அறிக்கையில் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெண்டர் பணியை மேற்கொள்ள 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முன் வைப்பு தொகையாக 29 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தகுதியான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்கலாம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இந்த புதிய உயர்மட்ட சாலை அமைந்தால் மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
