இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரீஷ் தற்கொலை வழக்கில் யூடியூபர் ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியைச் சேர்ந்த ஹரிஷ், ‘Finance with Harish’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வந்தார். சுமார் 13 லட்சம் பேர் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பின்தொடர்ந்து வந்தனர். நிதி மேலாண்மை குறித்து ஹரிஷ் பல்வேறு விஷயங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்து வந்தார்.
இதற்கிடையில், இவரது ஆலோசனைகள் தொடர்பாகச் சர்ச்சைகள் எழுந்தன. இது குறித்துப் பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபிக்கு (SEBI) புகார்கள் அளிக்கப்பட்டன. இதன் விளைவாக அவரது சோசியல் மீடியா பக்கங்கள் முடக்கப்பட்டன. இதை அடுத்து, ஹரிஷ் புதிய பக்கங்களைத் திறந்து ஆலோசனைகளை வழங்கி வந்தார்.
அப்போது, மற்றொரு யூடியூபரான ஜேசன் சாமுவேலுக்கும் இவருக்கும் இடையே ஆன்லைன் மோதல் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அவர் ஹரிஷைக் கடுமையாக விமர்சித்துப் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரிஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, ஹரிஷின் தந்தை கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில், ஹரிஷ் தற்கொலைக்குக் காரணமாகக் கூறப்படும் யூடியூபர் ஜேசன் சாமுவேல் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் பிரிவின் கீழ் கானத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யூடியூபில் அவதூறு வீடியோக்களை வெளியிட்டு ஹரிஷைத் தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஜேசன் சாமுவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
