அடக்குமுறையை ஏவுவது தான் விஜய்யின் மாற்று அரசியலா? நயினார் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தவெக கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அநியாயத்தை தட்டிக் கேட்பவர்களை மட்டும் தடாலடியாக கைது செய்வீர்களா? என்ன விதமான பாசிஸப் போக்கு இது என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக அரசு விவசாய கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி சமயபுரம் பகுதிய்ல போராட்டத்தில் ஈடுபட முயன்ற 4 பெண்கள் உள்ளிட்ட 252 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் “போராடும் விவசாயிகளை ஒடுக்கிவிட்டால், பிரச்சினைகள் தீர்ந்து விடுமா முதல்வர் விஜய் அவர்களே?

திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த இருங்களூர் அருகே, தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின் படி பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி, அமைதியான வழியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்ற 252 விவசாயிகளை உங்கள் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ADVERTISEMENT

5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற மாட்டீர்கள், ஆனால் அந்த அநியாயத்தை தட்டிக் கேட்பவர்களை மட்டும் தடாலடியாக கைது செய்வீர்களா? என்ன விதமான பாசிஸப் போக்கு இது? உங்கள் நிர்வாகத் திறனின்மையை மறைக்க, போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறையை ஏவுவது தான் மாற்று அரசியலா? பதில் கூறுங்கள் முதல்வரே?

அடுத்த ஜென்மத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறக்க வேண்டுமென மேடைகளில் வசனம் பேசிக் கொண்டு, ‘உண்டி கொடுக்கும்’ விவசாயப் பெருமக்களை மனசாட்சிக்குத் தெரிந்தே இப்படி வஞ்சிக்கும் உங்களை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது!” என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share