திண்டுக்கல் மாவட்டத்தில் ”மோர் மிளகாய்” தொழில் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தம் மீது குற்றம்சாட்டிய கம்யூனிஸ்டுகளுக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ. பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போலியம்மனூர் பகுதியில் மோர் மிளகாய் தொழில் நடைபெற்று வருகிறது. சுமார் 40 ஆண்டு காலமாக செயல்படுத்தப்படும் இந்த தொழில் மூலமாக நிலத்தடி நீர் பாதிப்பதாக சமீப காலமாக சிலர் புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர் பேசும்போது, ”மோர் மிளகாய் தொழிலால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் புகார் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் மோர் மிளகாய்த் தொழில் நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமையிருந்ததால், “போளியம்மனூர் பகுதியில் மோர் மிளகாய் தொழில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடிசைத் தொழிலாக செய்யப்பட்டு வருகிறது. அரசின் விதிகளுக்கு உட்பட்டு அந்தத் தொழிலை செய்து வருகிறார்கள். அமைச்சர் நேரில் வந்து பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள். சமீப காலமாக ஓரிரு விவசாயிகள் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து வருகிறார்கள். சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து அரசின் விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என்று பேசினேன். இதில் எங்கு கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவு வருகிறது?
சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவடைந்து பல நாட்கள் ஆகிவிட்டன. மோர் மிளகாய் உற்பத்தி தொழில் கடந்த 4 மாதங்களாக நடைபெறவில்லை. இந்நிலையில் இத்தனை நாட்கள் கழித்து, அரசியல் காழ்ப்புணர்சசி காரணமாக எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
சட்டசபையில் உண்மைக்கு மாறான கருத்து எதையும் நான் பதிவு செய்யவில்லை. ஆளும் கட்சி அமைச்சர் சொன்னது தான் உண்மைக்கு மாறான கருத்து. அதற்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில், ’40 ஆண்டுகளாக மோர் மிளகாய் தொழில் நடைபெற்று வருகிறது’ என்பதை தான் பதிவு செய்தேன். இது உண்மை தானே? அந்த பகுதியில் இந்த தொழில் நடந்து வருவது உலகத்திற்கே தெரியும்.
இந்த உண்மையைத் தான் நான் சட்டமன்றத்தில் பேசினேன். அந்த பகுதியில் மோர் மிளகாய் தொழில் நடப்பது கம்யூனிஸ்ட் கட்சியினருக்குத் தெரியாதா? உள்ளூர் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு இது தெரியவில்லை என்பது தான் வியப்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எந்த தரப்புக்கும் சாதகமாக இருக்க மாட்டேன். நியாயத்தின் பக்கம் நிற்பேன். இந்த விஷயத்திலும் அப்படித்தான் இருக்கிறேன்.
எனது 50 ஆண்டுகால அரசியல் பயணத்தில் இதுவரை அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாகவே நின்றிருக்கிறேன். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு என்றைக்கும் துணை நின்றதில்லை. இனியும் நிற்கப்போவதும் இல்லை. மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்சினை என்றால் அதை தீர்க்கும் முதல் ஆள் நானாகவே இருந்திருக்கிறேன். இது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தெரியும்.

ஆனால் உண்மைக்கு மாறாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சமீப காலமாக விஷமத்தனமான பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு வருகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து விதிகளை மீறி செயல்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அதை தடுத்து நிறுத்தட்டும். இதற்கு நான் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்த உண்மையை மறைத்து, அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக என்னை மையப்படுத்தி பரப்பப்பப்படும் பொய் பிரச்சாரங்களை விட்டுவிட்டு மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
