முதல்வர் விஜய் ஓம் சக்தி, பராசக்தி என்று பேசி மட்டும் ஆட்சியை நடத்த முடியாது. மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என ஜாமினில் வெளிவந்த நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின்போது தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாகவும், முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 12 பேர் கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றம் 9 பேருக்கு ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து கார்த்திகா உள்ளிட்ட 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர். சிறையிலிருந்து வெளியே வந்த அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியினர் மேளதாளங்கள் முழங்க, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிறையிலிருந்து வெளியே வந்த கார்த்திகா செய்தியாளர்களிடம் பேசுகையில், “வெள்ளையர்களை எதிர்த்து பொருளாதார விடுதலைக்காகப் போராடி, தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கப்பல் இயக்கிய கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் இருந்த சிறைச்சாலை இது. தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசனார் ஆகியோர் இருந்த சிறையும் இதுதான்.
இந்தச் சிறையில் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி. இத்தகைய வரலாற்றுப் பெருமைமிக்க சிறையில் நாங்களும் இருந்தது எங்களுக்கு வாழ்நாள் பெருமை.” என்றார்.
மேலும் பேசிய அவர் தாராபுரம் தொகுதியில் அக்டோபர் 4-ஆம் தேதி இறுதிக்கட்டத் தேர்தல் பரப்புரையின்போது முதலமைச்சர் விஜய் மட்டுமே பரப்புரை செய்ய வேண்டும் என்றும், மற்ற கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் பரப்புரை செய்யக்கூடாது என்றும் கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பதைப் போல, வேட்பாளர்களுக்கும் மக்களிடம் வாக்குக் கேட்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. தாங்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் பரப்புரை மேற்கொண்டோம். காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது விதிமீறலில் ஈடுபடுவது எவ்வாறு சாத்தியம். எங்களது வாகனத்தை அமைச்சர் ஒருவர் மறித்துப் பரப்புரை மேற்கொண்டார். இதுபோன்ற செயல்கள் நியாயமானதா ?”என கேள்வி எழுப்பினார்.
அதே போல் “தமிழகத்தில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் மூலம் கவனத்தைத் திசைதிருப்ப அரசு முயல்கிறது.” என்று குற்றம் சாட்டினார்.
கைது செய்யப்பட்டது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “நான் ஊழல் குற்றவாளி அல்ல. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது உள்ளதுபோல் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் நான் கைது செய்யப்படவில்லை. நான் மக்களுக்காகத் தொடர்ந்து போராட்டக் களத்தில் இருப்பவள். தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க காவிரி நீரைப் பெறுவதற்கும், பாலாற்றில் தமிழகத்திற்கான நீர்வரத்தை உறுதிப்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் கர்நாடகத்திடம் இருந்து காவிரி நீரைப் பெறுவதில் உரிய நடவடிக்கை எடுக்காமல், கோதாவரி நதிநீர் இணைப்பு குறித்து பேசுவது ஏன் என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
மேலும் “ஓம் சக்தி, பராசக்தி என்று பேசிக்கொண்டு மட்டும் ஆட்சியை நடத்த முடியாது. மக்களின் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். நல்லவர்களின் கைகளில் ஆட்சி செல்ல வேண்டும். கோமாளிகளிடம் ஆட்சி இருந்தது போதும்; போராளிகளிடம் ஆட்சியும் நாடும் கிடைக்க வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் விருப்பம்”என்றார்.
