போதைப்பொருள் விற்பனை: தவெக, திமுக நிர்வாகிகளை தட்டித் தூக்கிய கேரள போலீஸ்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில், தவெக கட்சிக் கொடி கட்டிய காரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தவெக மற்றும் திமுக நிர்வாகிகளை கேரள காவல்துறையினர் கூட்டாக கைது செய்துள்ளனர்.

கேரள மாநில காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு சிறப்புப் பிரிவு மற்றும் மாவட்ட ஆன்டி-நார்கோடிக்ஸ் ஸ்குவாட் ஆகியவை இணைந்து, ‘ஆபரேஷன் தூஃபான்’ என்ற பெயரில் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, அண்டை மாநிலங்களுடனான போதைப்பொருள் விற்பனைச் சங்கிலித் தொடர்பைத் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் காவல்துறையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஃபார்ச்சூனர் காரில் 2 பேர் நீண்ட நேரம் காத்திருந்தனர். அப்போது அவர்களை பார்க்க வந்த ஒருவர் காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்த தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேசம் அடைந்த காவல்துறையினர் தவெக கொடிய கட்டிய காரில் இருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில், அவர்கள் நீலகிரி மாவட்டம் கூடலூர் எருமாடு பகுதியைச் சேர்ந்த நௌஸாத் மற்றும் முகமது நசீஃப் என்பது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 கிராம் எம்.டி.எம்.ஏ (MDMA) போதைப்பொருள் இருந்த நிலையில் அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

இதில், கைது செய்யப்பட்டுள்ள முகமது நசீஃப் தவெகவின் நீலகிரி மாவட்ட மேற்கு மண்டல இணைச் செயலாளராகவும், நௌஸாத் திமுகவின் நீலகிரி மாவட்ட இளைஞர் அமைப்பாளராகவும் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இருவரும் இணைந்து தவெக கட்சிக் கொடி கட்டப்பட்ட காரைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் 135 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் மாஜி தவெக நிர்வாகியான பூபாலன் கைது செய்யப்பட்ட நிலையில் கேரளாவில் போதைப்பொருள் விற்பனை செய்த தவெக, திமுக நிர்வாகிகள் கூட்டாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share