சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெற்ற திமுகவின் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியை மறுசீரமைக்க அதிரடியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இன்றைய செயற்குழுவில்
- 234 தொகுதிகளை 2 ஆக பிரிக்கிறது; சில இடங்களில் 2 தொகுதிகளுடன் 3 என சேர்ப்பது; மொத்தமாக திமுகவில் 110 மாவட்டங்கள் உருவாக்கம்
- மா.செ.க்களின் அதிகபட்ச வயது 70
- ஒன்றிய செயலாளர் அதிகபட்ச வயது 60
- நகர கழக செயலாளர் அதிகபட்ச வயது 60
- பேரூர், வட்ட கழக செயலாளர் அதிகபட்ச வயது 50
- கிளைச் செயலாளர் அதிகபட்ச வயது 45
- மாநகர செயலாளர்கள் என்ற பதவி இனி இல்லை என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழகத்தின் பல பகுதிகளில் திமுகவினரிடம் நாம் கேட்ட கருத்துகளின் தொகுப்பு:
நம்மிடம் பேசிய திமுக மாநில நிர்வாகி ஒருவர், “கட்சிக்கு சீரமைப்பு என்பது அவசியம். அதுவும் இளம் ரத்தங்களை பதவிகளில் அமர வைக்க வேண்டியதும் அவசியம்தான். 20, 30 ஆண்டுகளாக “ஆக்கிரமிப்புகளாக” இருப்பவர்களை அகற்ற வேண்டியதும் கட்டாயம்தான்.
அப்படி புதிய மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுக்கும் போது திமுகவினர் கவனமாகவும் இருக்க வேண்டும். திடீரென கட்சிக்குள் நுழைந்தவர்கள் பண பலத்தால் கட்சிப் பதவிகளை பெற்றுக் கொள்கிற போக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். வாரிசுகள் தலையெடுத்து மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதையும் இத்துடன் முடிவுக்கு கொண்டுவரலாம்.
திமுக என்றால் என்ன? கட்சியின் கொள்கை என்ன? நம்ம மாவட்டத்தில் கட்சிக்காக உழைத்த மூத்தவர்கள், சிறைக்கு போனவர்கள் யார் என்கிற விவரம் அறிந்து அவர்களையும் அரவணைத்துச் செல்லக் கூடிய திமுகவினராக இருந்தால் நல்லது.
அத்துடன், கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கும் முறையான தேர்தல் நடத்தப்பட்டு அவர்களால் சரியான மாவட்ட செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது திமுகவை மிகவும் பலப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
ஜனநாயகத்தில் குறைபாடுகள் இருப்பது போல ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதில் குறைகள் இருக்கத்தான் செய்யும்.
அதற்காக கடந்த காலங்களில் தேர்தல்கள் என்ற பெயரில் “அறிவாலயத்தின்” நியமனங்கள் மட்டுமே இறுதி முடிவாக இருந்த போக்கு நிச்சயம் களையப்பட வேண்டும். அறிவாலயத்தில் அமர்ந்து கொண்டு, ‘தலைவர்’ இன்னார்தான் வர வேண்டும் என விரும்புகிறார்; ‘அவர்’ ’இவர்’ இன்னார்தான் வர வேண்டும் என விரும்புகிறார் என ‘பேரம்’ பேசுகிற போக்குகளை அனுமதிக்காமல் ஆகக் கூடுமானவரை சரியான முறையில் தேர்தல்களை நடத்தினாலே கட்சியை மேலும் பலப்படுத்த முடியும்.
திமுகவில் இளைஞர்களே இல்லை என்கிற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிற வகையில், இளைஞர்களுக்கும் வாசல் கதவை திமுக திறந்து வைக்கட்டும்.. அவர்களையும் களத்தில் விளையாடுவதற்கு அனுமதிக்கட்டும். முடிவு என்ன என்பதை ஏற்றுக் கொள்வோம்” என்கின்றனர்.
அதேபோல மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர் பேசும் போது, ”தலைமையிடம் கோலோச்சுகிற நபர்களின் வலது, இடது கரங்கள் புதிய மா.செ.க்களாக வருவதை அனுமதிக்க கூடாது. ஏற்கனவே எம்.எல்.ஏ., எம்.பி. பதவியில் உள்ளவர்கள், ‘ஆதிக்கம்’ செலுத்தக் கூடிய மனநிலையில் இருந்து விடுபட்டு அடுத்தவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்; ஆரோக்கியமான ஜனநாயக அரசியலை அனுமதித்தால் கட்சிக்காரன் வேலை செய்வான் என “கட்சி” நலனை சிந்தித்து பார்த்து “பெரிய மனதுடன்” ஒதுங்கி நிற்க வேண்டும்” என்கின்றனர்.
அதே போல, ”2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்பதை வரவேற்கிறோம். ஆனால் அந்த 2 தொகுதிகள் எது என்பதை இப்போதைய மாவட்ட செயலாளர்களிடம் ஒரு ஆலோசனையாக கேட்கலாம். அவ்வளவுதான்.. கழகத் தலைமையே இதில் ‘இறுதி’ முடிவெடுக்க வேண்டும். ‘அண்ணனுக்கு’ அந்த 2 தொகுதிகள் ‘வசதியாக’ இருக்கும்.. ‘அண்ணனால்’ அங்க போய் வேலை செய்ய முடியாது’ என்ற “சலுகைகளை” முன்வைத்து தொகுதிகளைப் பிரித்தால் ஒட்டுமொத்த கட்சியின் சீரமைப்பு நடவடிக்கையுமே கேலிக்குரியதாகவும் கேள்விக்குறியதாகவும் மாறிவிடும்” என்கிறார் இளைஞர் அணி நிர்வாகி ஒருவர்.
மாநில மகளிர் அணி நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசிய போது, ”திமுகவின் பதவிகளில் பெயரளவுக்குதான் பெண்கள் இருக்கின்றனர். கிளைக் கழகம், ஒன்றியம், மா.செ. என அனைத்து நிலைகளிலும் பெண்களை ஓரளவுக்கேனும் உட்கார வைப்பதும் பெண் வாக்காளர்களிடம் வேலை செய்ய உதவும்” என்கின்றனர்.
திமுக ஐடிவிங் நிர்வாகி நம்மிடம் பேசுகையில், “கட்சியிலிருந்து சரி, ஒவ்வொரு கழகக் தொண்டன். ஒன்றியச் செயலாளர் மாவட்டச் செயலாளர்… இவங்க முதல்ல நான் இன்ன ஜாதி ஆளுன்னு நினைக்கிறதை நிறுத்தனும்.. நான் திமுக காரன்னு நினைக்கிறதை பெருமையாக சொல்லனும்.. நாம ஜாதியே இல்லைன்னு சொன்ன கட்சி.. நாமளே இன்னைக்கு ஜாதிகிட்ட சிக்கி இருக்கிறோம். அந்த மனநிலை இல்லாம இருந்தாலே பாதி திமுக மீண்டு வந்துவிடும்.
மா.செ.க்களுக்கு வயது வரம்பு 70-ன்னு சொல்றாங்க.. இது எப்படி சரியா வரும்? அப்படி பார்த்த 78 மா.செ.க்களில் 13 பேர்தான் வெளியே போவாங்க.. இது எப்படி கட்சி மறுசீரமைப்பாகும்? 60 முதல் 65ன்னு இன்னும் வயசை குறைக்கனும்.. அப்பதான் புதிய முகங்கள் அந்த இடத்துல உட்கார முடியும்..
நாம புதிய முகம்னு சொன்னாலும் ஒரு பயம் இருக்கு.. ஏற்கனவே இருக்கிற மா.செ, முன்னாள் அமைச்சர்கள், சிட்டிங் எம்.எல்.ஏக்கள் இவங்க வாரிசுகள் அந்த இடத்துக்கு வர்றதை தலைமை கழகம் இனியாவது அனுமதிக்காம இருக்கனும்..
அதனால முதல்ல இந்த ‘பெரியவங்க’ளை கூப்பிட்டு கட்சி தலைமையே, ‘உங்க பையனை/ பொண்ணை நிப்பாட்டக் கூடாது..’ன்னு சொல்லி கன்வீன்ஸ் பண்ணனும்..
அதே மாதிரி சின்ன வயசு இளைஞர்களை கட்சி மூத்த நிர்வாகிகள் அழைச்சு பேசி அரவணைக்கனும்.. அப்பதான் கட்சி மேல நம்பிக்கை வரும்.. அடுத்து வர்ற இளைஞருக்கும் நம்பிக்கை வரும்.. திமுகவில, அதிமுகவில பதவி கிடைக்காதுன்னு தெரிஞ்சு தவெகவுக்கு போன ஏராளமான இளைஞர்கள் இருக்காங்க.. இந்த ஊரில் ஏற்கனவே திமுகவில அவரு இருக்கிறாரு.. அதிமுகவில இவரு இருக்கிறாரு.. அவருக்கே கட்சியில பதவி கிடைக்காது.. அவரு பின்னாடி போனா நமக்கு என்னா கிடைக்கும்?னு நினைச்சு தவெகவுக்கு போனவங்களும் உண்டு.. அந்த அவநம்பிக்கையை கட்சி உடைக்கனும்..
இல்லைப்பா திமுகவில எல்லாருக்கும் பதவி கிடைக்கும்.. பெரியவங்க, சிறியவங்க, அந்த ஜாதி, இந்த ஜாதின்னு இல்லாம உழைச்சா, மரியாதை கிடைக்கும்.. பதவி, பொறுப்பு கிடைக்கும் அப்படிங்கிற சூழ்நிலையை கட்சித் தலைமை ‘கறாரா’ உருவாக்கனும்.
அதுமட்டுமல்லாம, “கீழே இறங்கி” போய் திமுகன்னா என்னா? திமுகவோட கொள்கைன்னா என்னா?ன்னு மக்கள்கிட்ட பேசுகிற மனநிலை கொண்டவங்க கட்சி பொறுப்புகளில் இருந்தா அவருக்கு பின்னால இருக்கிற ஒன்றியம், கிளை எல்லாமே அதை பாலோ அப் செய்யும்.. ஒரு ஊருக்கு நிகழ்ச்சிக்கு ‘எனக்கு வேண்டியவங்க’ மட்டும் வந்தா போதும்னு நினைக்காம.. அந்த ஊரில இருக்கிற அத்தனை கட்சிகாரங்களையும் சந்திச்சு பேசி அவங்களுக்காக சில மணி நேரம் செலவழிக்க ரெடியா இருக்கிறவங்களைதான் மா.செ., ஒ.செ.ன்னு போட்டா இன்னும் சிறப்பா இருக்கும்” என்கின்றனர்.
