‘சட்டசபையை சிறப்பாக நடத்தும் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்’- பாராட்டிய மு.க.ஸ்டாலின்

Published On:

| By Mathi

DMK Chief M.K. Stalin Extends Warm Praise to TN Speaker JCD Prabhakar

”சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தமிழக சட்டசபையை சிறப்பாக நடத்துகிறார்” என திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பாராட்டியதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் முதல்வர் விஜய், அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களை முன்வைத்தால் உடனே குறுக்கிட்டு, அதை சபை குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறார் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர். நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் அமைச்சர்கள் பலரது சர்ச்சை விமர்சனங்களையும் அடுத்தடுத்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நீக்கியதை சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோர் பாராட்டினர்.

ADVERTISEMENT

அத்துடன், எதிர்க்கட்சியினர் பேசுவதற்கும் போதுமான நேரத்தையும் ஒதுக்கி தருகிறார் சபாநாயகர். சட்டசபையை சுமூகமாக நடத்துவதற்கும் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதிலும் அக்கறை செலுத்துவதால் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.

இந்த பின்னணியில் மு.க.ஸ்டாலினை சந்தித்தது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில்,

முன்னாள் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களை
நட்பின் நிமித்தமாய்
நலம்கேட்கச் சென்றேன்;
பொன்னாடை அணிவித்தேன்

ADVERTISEMENT

ஞானபீடத்தின் பெருமையறிந்து
வீட்டுக்கே வந்து வாழ்த்திய
அந்நாள் முதலமைச்சர்,
பெற்றுவந்த விருதுக்காக
மீண்டுமொரு
பொன்னாடை அணிவித்தார்

பொன்னாடைக்குப்
பொன்னாடை

“எதைக் கொடுக்கிறாயோ
அதையே பெறுவாய்”
என்ற முதுமொழி
என் மூளைக்குள் ஓடியது

ஒருவரை ஒருவர்
கொண்டாடிக் கொண்டோம்

சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை
முக்கால் மணிநேரம்
இருவரும் கண்டுகொண்டிருந்தோம்

“ஜே.சி.டி பிரபாகர்
சிறப்பாக நடத்துகிறார்
சட்டமன்றத்தை” என்றார்
தி.மு.க தலைவர்

“சட்டமன்றத்தின்
ஆட்ட நாயகன்” என்று
சமூக ஊடகங்கள்
சபாநாயகரைப் பேசுகின்றன
என்றேன்

“அப்படியா” என்றார்

ஓர் அழகான காஃபி
குடித்து முடித்து
வாழ்த்தி விடைகொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share