நாட்டின் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மீது 10 ஆண்டுகளில் 4,200 கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன; மக்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்கு அராஜகப் பாதைகளை நோக்கி தள்ளிவிட வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர் (Justice Chelameswar) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை ஒய்.எம்.சி.ஏ. (YMCA) வளாகத்தில் நேற்று ஆகஸ்ட் 21-ந் தேதி நடைபெற்ற அரசியலமைப்புப் பாதுகாப்பு மாநாட்டில் நீதிபதி செல்லமேஸ்வர் பேசியதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது இந்த நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்புக் கவசமாகும். ஆனால், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கும் மேல் கடந்த நிலையில், இன்று நாம் “அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டும்” என்று பேசும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலையாகும்.
இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு என்பது குறித்து நீண்ட விவாதங்களை நடத்தலாம். பல்வேறு வரலாற்றுப் கட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு நம் அனைவரும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பாக ஒரு பிரபலமான அமெரிக்க வழக்கறிஞரின் மேற்கோள் மிகவும் பொருத்தமானது:
1830களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஒருவர் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் குறித்த விளக்கவுரையில், “இது உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான, அழகான அரசியலமைப்புச் சட்டம். எவ்வாறாயினும், இதனைப் பாதுகாப்பவர்களின் முட்டாள்தனத்தினால் ஒரு மணி நேரத்திற்குள் இந்த அரசியல் சாசனம் அழியக்கூடும்” என்றார்.
அரசியலமைப்பைப் பாதுகாப்பவர்கள் நீதிபதிகளோ, தேர்தல் ஆணையமோ, உச்ச நீதிமன்றமோ அல்லது பாராளுமன்றமோ அல்ல; மக்கள்தான். அரசியலமைப்பு என்பது அடிப்படையில் மக்களின் விழிப்புணர்ச்சியைக் குறிக்கிறது.

அரசியலமைப்பின் சாரம் அதன் முகப்புரையில் (Preamble) அடங்கியுள்ளது. “இந்திய மக்களாகிய நாம்” (We, the people of India) என்ற வார்த்தைகள், 1949 முதல் இன்று வரையிலும், நமக்குப் பிறகு வரவிருக்கும் அனைத்துத் தலைமுறையினரையும் உள்ளடக்கியது.
அனைத்து வடிவங்களிலும் நீதி (சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி).
சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுக்கான சுதந்திரம்.
அந்தஸ்து மற்றும் வாய்ப்பின் சமத்துவம்.
இவை அனைத்திற்கும் அடிப்படையான சகோதரத்துவம்.. இதைத்தான் அரசியல் சாசனம் உறுதி செய்கிறது.
இந்தியாவின் வரலாற்றைப் பார்த்தால், பேரரசர் அசோகரின் காலம் தவிர, என்றுமே இந்தியா ஒரு “ஒற்றை அரசியல் அலகாக” (Single political unit) இருந்ததில்லை. தமிழ்நாட்டில் சோழர்கள், பாண்டியர்கள் எனப் பல மன்னர்கள் தனித்தனியாக ஆண்டனர். சுதந்திரத்தின்போது கூட, நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பிரிட்டிஷ் நேரடிக் கட்டுப்பாட்டிலும், மீதி மூன்றில் ஒரு பங்கு சுமார் 500 முதல் 550 ராஜாக்களின் கட்டுப்பாட்டிலும் இருந்தது.

மதம், மொழி, பிராந்தியம் எனப் பல வேறுபாடுகள் கொண்ட 35 முதல் 40 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டை ஒன்றாக வைத்திருக்கவே, அரசியலமைப்பு நிர்ணய சபையினர் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஆவணத்தை உருவாக்கினர். சிறுபான்மை என்பது மதத்துடன் மட்டும் தொடர்புடையதல்ல; மொழிச் சிறுபான்மையினரும் இந்த நாட்டின் அங்கமே. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்கள், கேரளாவில் தமிழ் பேசுபவர்கள் எனப் பல மொழி சிறுபான்மையினரை அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது.
ஜனநாயகம் என்பது மகாராஜாக்கள் அல்லது நவாப்களின் சர்வாதிகார ஆட்சி முறைக்கு மாற்றாக உருவானது. ஆனால் ஜனநாயகத்தில் பெரும்பான்மை மட்டுமே எல்லாவற்றையும் தீர்மானித்துவிட முடியாது. இதற்குச் சிறந்த உதாரணம் கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீஸ். அவர் இளைய தலைமுறையைக் கெடுப்பதாகக் கூறி, ஏதன்ஸ் நகர மக்கள் அனைவரும் கூடி, பெரும்பான்மையின் அடிப்படையில் அவரை ஆபத்தானவராகக் கருதி விஷம் கொடுத்துக் கொன்றனர். எனவே, பெரும்பான்மை மக்கள் எடுக்கும் முடிவுகள் மட்டுமே எப்போதும் சரியானதாக இருக்க முடியாது என்பதை வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பு உருவாக்கத்தின்போது அலெக்சாண்டர் ஹாமில்டன் குறிப்பிட்டது போல், “மனிதர்கள் தேவதூதர்களாக இருந்தால் அரசாங்கமே தேவையில்லை; ஆட்சியாளர்கள் தேவதூதர்களாக இருந்தால் சட்டமே தேவையில்லை.”
ஆனால் ஆட்சியாளர்களும் மனிதர்கள்தாம் என்பதால், சில அடிப்படை மதிப்புகளைப் பாதுகாக்கவே அரசியலமைப்புச் சட்டம் தேவைப்படுகிறது.
ஜனநாயகத்தின் செயல்முறை மிகவும் சீர்குலைந்துள்ளது. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நாடு முழுவதும் சுமார் 4,200 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 10% வழக்குகள் உண்மையானதாக இருந்தால்கூட, சட்டம் இயற்றும் அமைப்புகளில் அத்தகைய பின்னணி கொண்டவர்கள் இருப்பது மிகவும் மோசமான சமிக்ஞையாகும்.
நாட்டின் வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளிப்பதற்கான முறையை உருவாக்குவதை விட்டுவிட்டு, நாம் பல அற்பமான அரசியல் விவாதங்களில் நேரத்தை வீணடிக்கிறோம். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான முதல் படியாக, தேர்தல் முறையைச் சீர்திருத்துவது அவசியமாகும்.
பாபாசாகேப் அம்பேத்கர் அற்புதமான அரசியலமையை எழுதியபோது, கடந்த 75 ஆண்டுகளில் ஏன் 130 முறை திருத்தங்கள் தேவைப்பட்டன? (ஆண்டுக்கு சராசரியாக இரண்டு திருத்தங்கள்). ஒன்று பாபாசாகேப் தவறு செய்திருக்க வேண்டும் அல்லது நாம் இந்த அரசியலமைப்புக்குத் தகுதியற்றவர்களாக இருக்க வேண்டும்.
அரசியலமைப்புச் சபையில் பாபாசாகேப் தனது கடைசி உரையில் மூன்று முக்கிய எச்சரிக்கைகளைக் கூறினார்:
”எந்தவொரு பெரிய மனிதனின் காலடியில் கூட உங்கள் உரிமைகளை ஒருபோதும் சரணடையச் செய்யாதீர்கள்”
”அரசியலமைப்பு முறைகள் மூலம் கொடுக்கப்பட வேண்டிய ஜனநாயகத்தை விட்டுவிட்டு, மக்கள் வன்முறை பாதைக்கு திரும்ப அனுமதிக்கக் கூடாது”.
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அரசியலமைப்பு இயந்திரம் சரியாகச் செயல்பட அனுமதிக்கப்படாதபோது, மக்கள் மீண்டும் அராஜகத்தின் விளிம்பிற்குத் தள்ளப்படுகிறார்கள். நாம் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர்களாக இருந்தால், இந்த ஆழமான அரசியல் சிக்கல்களைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி செல்லமேஸ்வர் பேசினார்.
நீதிபதி செல்லமேஸ்வர் (Justice Chelameswar) யார்?
நாட்டின் மிக முக்கியமான நீதிபதிகளில் ஒருவர் செல்லமேஸ்வர். ஆந்திரா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றியவர்.
இந்திய நீதித்துறையின் வரலாற்றிலேயே முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து வெளிப்படையாகக் கேள்வி எழுப்பி, அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராகத் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்ய மூத்த நீதிபதிகள் குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய், மதன் பி. லோகூர் இணைந்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பத்திரிகையாளர் சந்திப்பை 2018-ம் ஆண்டு நடத்தியதில் நீதிபதி செல்லமேஸ்வர் முக்கியப் பங்கு வகித்தார்.
நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் தலையீட்டை எதிர்த்து, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று தீர்ப்பு வழங்கியவர்.
மத்திய பாஜக கூட்டணி அரசின் புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான வலுவான குரல் எழுப்பியவர். பாஜகவினரால் ‘அர்பன் நக்சல்’ என விமர்சிக்கப்பட்டவர்.
