தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பாமக, விசிக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறை குறித்து உறுப்பினர்கள் இன்று (ஆகஸ்ட் 21) விவாதித்தனர். அப்போது, பாமக உறுப்பினர் கணேஷ் குமார், “நாடாளுமன்றத்தில் நியாயமான தொகுதி மறுவரையறை குறித்து பேசிய காங்கிரஸ், தற்போது தொகுதி மறுவரையறை கூடாது என்று நிலைப்பாட்டை மாற்றி பேசுகின்றனர். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் வராது என்று அமித் ஷா உறுதியளித்துள்ளார்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் வன்னி அரசு, ”கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கே உரையாற்றும் போது, மக்களவையில் ஒரு செய்தியைச் சொல்கிறார்.
’கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களின் தற்போதைய மக்களவை இடங்களின் சதவீதம் 23.76% ஆகும். மக்களவை இடங்களை 50% என உயர்த்தி இந்த ஐந்து மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்தால் இடங்களின் சதவீதம் 23.87% என்று அதிகரிக்குமே தவிர குறையாது. அதாவது 543 இடங்களில் தற்போதைய 129 என்ற எண்ணிக்கை 195 என உயரும்’ என்று தென் மாநிலங்கள் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கமாகச் சொன்னார்.
அவர் உள்ளே ஒன்று பேசுகிறார். வெளியில் ஒன்று சொல்கிறார்.
இந்து ஆங்கில நாளிதழுடைய ரெசிடன்ட் எடிட்டர் வர்கீஸ் ஜார்ஜ் எழுதின அந்த கட்டுரையை நான் வைத்திருக்கிறேன்.
Delimitation: How to align what is said, done and written என்ற அந்த கட்டுரையில், மக்களவையில் பேசிய அந்த கருத்து அவர் கொண்டு வந்த மசோதாவில் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.
மசோதாவில் இல்லாததை அவர் மக்களவையில் பேசுகிறார் என்றால், அதைத்தான் அமித் ஷா உள்ள ஒன்று சொல்கிறார், வெளியே ஒன்று பேசுகிறார் என்கிறோம்.
ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி நண்பர்கள் என்னன்னா, மருத்துவர் ராமதாஸை காப்பாற்றுவதா அல்லது மோடி அவர்களைக் காப்பாற்றுவதா என்ற நிலையில் இருக்கிறீர்கள்.
நான் சட்டத்தின் அடிப்படையில் பேசுகிறேன். மக்களவையில் என்ன பேசினார்கள் என்ற அடிப்படையில் பேசுகிறேன்.
நான் சொன்னதை திசை திருப்புகின்ற வேலையைத்தான் பாஜகவும் பாமகவும் சேர்ந்து செய்கின்றன.
மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை ஆணையம் மாநிலங்களுக்கான தொகுதிகளை வரையறுக்கும் என்றுதான் மசோதாவில் சொல்லப்பட்டிருந்ததே தவிர, அமித் ஷா விளக்கியபடி 50% உயர்வு என்பதெல்லாம் எங்குமே இல்லை” என்று கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதைத்தான் நானும் சொல்கிறேன். இதுதான் என்னுடைய கருத்து என்று கூறினார்.
அமைச்சர் வன்னி அரசு பேச பேச பாமக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார் பேசுகையில், ”யாரையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இல்லை. எங்களுடைய நிறுவனர் ஐயா தான் தமிழ்நாட்டிலேயே அதிக அரசியல் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட தலைவர்.
பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்ய வேண்டும் என்று சொன்ன காலமெல்லாம் உண்டு. அதிலிருந்தெல்லாம் மீண்டுதான் வந்திருக்கிறோம்,
இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு முதல் நாள் நீட் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாகத்தானே இருந்தோம்.
யாரைக் காப்பாத்துறதுக்கு இருந்தோம்? தமிழ்நாட்டினுடைய உரிமையைக் காப்பாத்துறதுக்குத்தானே நீட்டுக்கு ஆதரவாக நாங்கள் இருந்தோம். காவிரி பிரச்சினையில் யாருக்கு ஆதரவாக இருந்தோம். பாஜகவுக்கு எதிரான நிலைபாட்டைத்தானே எடுத்தோம்.
தொகுதி மறுவரையறை பொறுத்தவரை நாங்கள் சொல்வது என்னவென்று சொன்னால், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி வரையறை செய்யும் என்றால், பாட்டாளி மக்கள் கட்சி அதை எதிர்க்கும். உங்கள் கூடத்தான் நிற்போம்.
மக்கள் தொகை அடிப்படையில் வந்தது என்றால் நமக்கான பாதிப்பு ஏற்படும். நம்முடைய விகிதாச்சார அடிப்படை குறையும். 100% அரசு கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாகத்தான் நாங்கள் இருப்போம். சட்டம் வருகிறது என்றால் காலாவதி ஆகும்போது மறுவரையறை வரும்.
இப்போது உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது, உள்ளாட்சிக்கு 10 வருஷத்துக்கு ஒரு தடவை மறுவரையறை கேட்க வேண்டும். எந்த உள்ளாட்சியில கேட்டார்கள்? எந்த உள்ளாட்சியில மறுவரையறை செய்தார்கள். சட்டம் காலாவதி ஆகும்போது மறுவரையறை என்பது தானாக நடக்கும்.
7.18% வரும்பொழுது எந்த பாதிப்பும் இருக்காது என்று விசிக தலைவர் திருவாளவன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூறியிருக்கிறார்.
அமித் ஷா வெளியில் ஒன்று உள்ளே ஒன்று சொல்கிறார் என்றால், அவருடைய தலைவர் அன்றைக்கு தீர்மானத்தில் எடுத்த நிலைப்பாடு ஒன்று, இங்கு சட்டமன்றத்தில் எடுக்கிற தீர்மானம் என்பது வேறு.
தென்மாநிலத்தில் இருந்து தேவகவுடா, நரசிம்ம ராவ் ஆகியோர் தென் மாநிலங்களில் இருந்து வந்த பிரதமர்கள்தான்.
நீங்கள் வேண்டுமானால் உங்கள் கட்சியைச் காப்பாற்றிக் கொள்வதற்கு உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கலாமே தவிர, பாட்டாளி மக்கள் கட்சி என்றைக்கும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதில்லை! அன்னைக்கு தீர்மானத்தில் என்ன நிலைப்பாடு எடுத்தோமோ, அதே நிலைப்பாட்டில்தான் இருப்போம்” என்று கூறினார்.
