சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் புதிதாகக் கார் வழங்கப்படும்; கார் பராமரிப்புப் படியாக ரூ. 75,000, உதவியாளர் படியாக ரூ. 25,000 என ஒரு உறுப்பினருக்குத் தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “நேற்று முன்தினம் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிதாகக் கார் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஏற்கனவே தமிழக அரசு கடனில் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், திமுகவைச் சேர்ந்த 59 உறுப்பினர்களும் அரசு வாகனத்தைப் பெற வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். அரசுக்குத் தேவையில்லாத செலவுகளைக் குறைக்க, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, நலிவடைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கார் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “முதலமைச்சரின் நோக்கம், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமல்லாது, இதே சட்டமன்றத்தில் ஏழ்மை நிலையில் இருக்கும் உறுப்பினர்களும் பயனடைய வேண்டும் என்பதுதான். முக்கியமாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் வரும்போது பேருந்தில்தான் வந்து செல்கிறார். யார் யாரெல்லாம் ரயிலிலும் பேருந்திலும் வருகிறார்களோ, அவர்களது குரலாகவே அந்த உறுப்பினரின் கோரிக்கை இருந்தது. முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிடும்போது, அவையைப் பொறுத்தவரை எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்று நினைத்தே அறிவித்தார்.
எங்கள் பொதுச் செயலாளரிடம் கார் உள்ளது, என்னிடம் கார் உள்ளது, இங்குள்ள பலரிடம் கார் உள்ளது; நாங்கள் போய் ‘சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வேண்டும்’ என்று கேட்கப்போவதில்லை. இது ஒரு அடிப்படையான புரிதல்.இதை அரசியலாகப் பார்க்கக் கூடாது; சட்டமன்ற உறுப்பினர்களின் உரிமையாகப் பார்க்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்கனவே கார் வைத்திருப்பவர்கள் யாரும் கார் கேட்கப் போவதில்லை; எங்களது நிலைப்பாடும் அதுவேதான். எதிர்க்கட்சித் தலைவரிடம் இரண்டு மூன்று வீடுகள் உள்ளன; இருந்தாலும் அவர் அரசு பங்களாவில் தங்கியிருக்கிறார் அல்லவா? அவர் தனது கோரிக்கை மடலை பொதுப்பணித்துறை அமைச்சரான என்னிடம்தான் கொடுத்தார். ‘உங்களுக்குச் சொந்தமாக இரண்டு மூன்று பங்களாக்கள் இருக்கின்றன; அதனால் அரசு பங்களா கொடுக்க முடியாது’ என்று நாங்கள் சொல்ல முடியுமா?
நீங்கள் உங்கள் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் ‘கார் இல்லை, வீடு இல்லை, பத்தாயிரம் ரூபாய் தான் பணம் இருக்கிறது’ என்று சொல்லியிருக்கலாம்; ஆனால், எங்களிடம் உள்ள பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களிடம் சொந்த வீடோ, காரோ இல்லை. தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களில் ஏற்கனவே கார் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள் என்பதுதான் நிலைப்பாடு. கார் என்பது ஆடம்பரம் அல்ல; மக்களைச் சந்திக்கத் தேவையான ஒன்று. ஊழலற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இன்றைக்கும் கார் தேவை; அவர்கள் மக்களைச் சென்று பார்க்க வேண்டும்” என்று பதிலளித்துப் பேசினார்.
இதைத்தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன், எங்கள் உறுப்பினர்களுக்கும் கார் வேண்டாம் என்றார்.
