‘ஜோசியகாரர்.. மஞ்சள் துண்டு.. பஞ்ச் டயலாக்’ வார்த்தைகளால் பேரவையில் சலசலப்பு – நடந்தது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

முதலமைச்சர் ‘மூன்று ஃபைல்கள் உள்ளன’ என்று சொன்னாரே, அதை நான் சவாலாகச் சொல்லவில்லை; பகிரங்கச் சவாலாகவே விடுக்கிறேன். முதலமைச்சர் கோப்புகளைத் தொடர்ந்து பார்க்கட்டும். உண்மையான குற்றச்சாட்டுகள் ஆதாரத்தோடு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் என தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், முதல்வர் தனது அலுவலக டேபிலிள் உள்ள 3 பைல்களை ஜோசியக்காரர் சொன்னால்தான் திறந்து பார்ப்பீர்களா? நல்ல நேரம் ஏதாவது பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “ஜோசியம்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்டதையெல்லாம் தமிழகம் பார்த்துவிட்டது. அதனால் எதைச் செய்தாலும் வெளிப்படையாக, எந்தவொரு ஒளிவுமறைவும் இல்லாமல் செய்யத் தெரியும். எதை எப்போது செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். எல்லாத் துறைகளிலும் எப்போதெல்லாம் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ, அங்கெல்லாம் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “இதைத்தான் நான் குறிப்பிட்டேன். நாங்கள் ஒரு கேள்வி கேட்டால் நாங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பதில் சொல்கிறீர்கள் என்று சொன்னேன். ‘ஜோசியக்காரர்’ என்று பேசுவது தவறு என்கிறீர்கள்; ஆனால் நீங்களே ஜோசியக்காரரைப் பணியமர்த்திவிட்டுப் பின்னர் நீக்கியிருக்கிறீர்கள். ‘ஜோசியக்காரர்’ என்பது தவறான வார்த்தை கிடையாது. கேள்வி நேரத்தையே நடத்த முடியாத நிலைமையில்தான் இந்த அரசு நடந்துகொண்டிருக்கிறது” என்றார்.

ADVERTISEMENT

அப்போது குறுக்கிட்டுப் பேசிய பேரவைத் தலைவர், “கேள்வி நேரத்தை நடத்த முடியாத நிலையில் இந்த அரசு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நேரமின்மை இருந்தாலும் கூட, உறுப்பினர்கள் விதி 55-ன் கீழ் அளித்துள்ள தீர்மானங்களைக் கேள்விகளாகக் கேட்டுப் பதில்களைப் பெறும் முறையைக் கடைப்பிடித்து வருகிறோம். காலதாமதம் இருந்தாலும் விடைகள் தரப்பட்டு வருகின்றன” என்றார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக நேரலை செய்தது திராவிட மாடல் அரசு. கேள்வி நேரம் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு, 10 கேள்விகள் எடுக்கப்பட்டு, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. இப்போதும் நீங்கள் நிகழ்ச்சிகளை நேரலை செய்கிறீர்கள்; இந்தப்பிரச்சனையைத்தான் நான் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிக்கொண்டே இருக்கிறீர்கள்; ஆனால் எல்லாமே ரீல்ஸாக மாற்றப்பட்டு வருகிறது. முதலமைச்சர் ‘மூன்று ஃபைல்கள் உள்ளன’ என்று சொன்னாரே, அதை நான் சவாலாகச் சொல்லவில்லை; பகிரங்கச் சவாலாகவே விடுக்கிறேன். முதலமைச்சர் கோப்புகளைத் தொடர்ந்து பார்க்கட்டும். உண்மையான குற்றச்சாட்டுகள் ஆதாரத்தோடு இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசுவது போல் சட்டமன்றத்தில் பேசக் கூடாது” என்றார். இதற்கு தவெக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், “பஞ்ச் டயலாக் என்ற வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்” என அறிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share