அமைச்சர் விஸ்வநாதன் புதுச்சேரியில் பேசிய பேச்சு எனக்கு உகந்ததாக இல்லை. அவர் புதுச்சேரியில் பேசும்போது, ‘சில குள்ளநரிகள் குழிபறித்தார்கள்’ என்று சொன்னார். அதை நான் ஏற்கவில்லை; அதை நீங்கள் யாரும் ஏற்கக் கூடாது என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழாவை ஒட்டி, தமிழக காங்கிரஸ் சிறப்பு பொதுக்குழு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,200 பேர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேசுகையில், “ஜனவரி மாதம் 17-ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற அனைத்து முன்னோடிகளையும் நேரடியாக டெல்லிக்கு அழைத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இங்கு இருக்கின்ற நிர்வாகிகள், மாநில அளவிலான, தேசிய அளவிலான நிர்வாகிகள், முன்னாள் தலைவர்கள் எல்லாரையும் அழைத்து, நேருக்கு நேர் தனித்தனியாகக் கருத்து கேட்டார்கள்.
அவ்வாறு கருத்து கேட்டதற்குப் பிறகு, அமைப்பின் பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரிடமும் கருத்து கேட்ட பின்பு, ஓர் அரசியல் கணக்கீட்டின்படி ஒரு கூட்டணி அமைத்தோம். இது எந்த ஒரு தனிநபரோ அல்லது யாரோ ஒருவர் மற்றவர் மீதோ திணித்தது அல்ல.
ஒவ்வொரு முறையும் ஒரு முடிவு சரியாக அமையலாம், திருநாவுக்கரசர் சொன்னது போல சில நேரங்களில் முடிவுகள் தவறாகவும் போகலாம். அது தவறாகப் போனது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால், அந்த முடிவை யாரோ ஒரே ஒருத்தர் எடுத்தார், அதைத் திணித்தார்கள் என்று சொல்வதெல்லாம் தவறானது.
குறிப்பாக அமைச்சர் விஸ்வநாதன் புதுச்சேரியில் பேசிய பேச்சு எனக்கு உகந்ததாக இல்லை. அவர் புதுச்சேரியில் பேசும்போது, ‘சில குள்ளநரிகள் குழிபறித்தார்கள்’ என்று சொன்னார். அதை நான் ஏற்கவில்லை; அதை நீங்கள் யாரும் ஏற்கக் கூடாது.
நடந்த உண்மை என்னவென்றால், ஒரு கூட்டு முடிவை கட்சி எடுத்தது. சில நேரங்களில் கூட்டு முடிவு சரியாக இருக்கும்; சில நேரங்களில் கூட்டு முடிவு தவறாகவும் போகும். கூட்டு முடிவு எடுத்த அனைவரும் அதை ஒப்புக்கொள்கிறோம்; அந்த அரசியல் கணக்கீடு தவறாகப் போய்விட்டது. ஆனால், தேர்தலுக்குப் பிறகு கிடைத்த அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டோம்.
இருப்பினும், ‘கட்சிக்குள்ளிருந்து குள்ளநரிகள் குழிபறித்தார்கள்’ என்று ஓர் அமைச்சர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது; அதைத் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக முகநூலில் எழுதுபவர்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள். எல்லாரோடும் கலந்து ஆலோசித்து, இந்த முன் வரிசையில் இருக்கின்ற அத்தனை பேரின் கருத்தையும் கேட்டுத்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவெடுத்தது. அந்த முடிவு சரியா இல்லையா என்பதைப் பிறகு பரிசீலனை செய்யலாம்.
ஆனால், யாரையும் கேட்காமல் தன்னிச்சையாக அந்த முடிவை எடுக்கவில்லை. அது ஒரு கூட்டு முடிவு. அந்த கூட்டு முடிவை எடுத்தோம்; அது சில நேரங்களில் சரியாக இருக்கும், சில நேரங்களில் சரியாக அமையாததை ஏற்றுக்கொள்கிறோம்.
அந்தக் கூட்டு முடிவைத் தனியாக யாரும் எடுக்கவில்லை; எந்தத் தனிநபரும் எடுக்கவில்லை. அகில இந்திய காங்கிரஸும் அதை யார் மீதும் திணிக்கவில்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
நம்மையே நாம் விமர்சனம் செய்யும்போது கொஞ்சம் நாகரிகமாக, உண்மையை அறிந்து விமர்சனம் செய்யுங்கள். விமர்சனம் செய்வதற்காகவே விமர்சனம் செய்யாதீர்கள். பலபேர் தனியாகச் சொன்ன கருத்து ஒன்று, வெளியே சொன்ன கருத்து ஒன்று. அவை அனைத்தையும் கேட்டுத்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஓர் அரசியல் கணக்கீட்டை மேற்கொண்டது.
நான் அதற்கு மேல் வேறு விஷயத்திற்குச் செல்லவில்லை; இதோடு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்றார்.
