விஜய் ஆட்சியில் யார் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் – கொந்தளித்த பெ.சண்முகம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கல்லூரிச் சுற்றறிக்கை மற்றும் குஜிலியம்பாறை சுற்றறிக்கை விவகாரத்தில் இடதுசாரிகளை ஒடுக்க நினைக்கிறதா தமிழ்நாடு அரசு? அதிகாரிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்? என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோவில், “இன்றைக்கு ஒரு மிக முக்கியமான பிரச்சினை சம்பந்தமாகத் தமிழ்நாட்டில் பரவலாக விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கல்லூரிக் கல்வி ஆணையர் அவர்கள் அனைத்துக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை ஒன்று அரசியல் தளத்திலும், மாணவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

ADVERTISEMENT

அதில் குறிப்பாக, இடதுசாரி மாணவர் – இளைஞர் அமைப்புகள், காக்ரோச் ஜனதா பார்டியினர் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்றும், இதைக் கல்லூரி நிர்வாகம், பள்ளி நிர்வாகம், காவல்துறை ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும் என்றும் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டதுதான் இத்தகைய விவாதத்திற்கு மிக முக்கியமான காரணம்.

நான் என்ன கேட்க விரும்புகிறேன் என்றால், போராடும் உரிமையை இந்திய அரசியல் சாசனம் இந்திய நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்திய மக்களுடைய ஓர் அங்கம் என்ற முறையில் மாணவர்களும் அதற்கு உட்பட்டவர்கள்தாம். மாணவர்கள் தங்களுடைய கல்வி உரிமைக்காகவும், கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள ஊழல், மோசடி, சீர்கேடுகள் அனைத்துக்கும் எதிராகவும் போராட வேண்டியது அவர்களுடைய கடமை.

ADVERTISEMENT

அந்த வகையில் நாடு முழுவதும் பல்வேறு காலகட்டங்களிலும் மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் போராட்டக் காலத்திலும் கல்லூரி மற்றும் பள்ளிகளை விட்டு வெளியே வர வேண்டும் என்று மகாத்மா காந்தி அழைப்பு விடுத்தபோது, தங்களுடைய படிப்பைத் துறந்து தேசத்தின் விடுதலைக்காக மாணவர்கள் போராடிய வரலாறு இந்தியாவிற்கு உண்டு.

இத்தகைய சூழ்நிலையில், இன்றைக்குப் போராட்டத்திற்குச் செல்லக்கூடிய மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும் என்ற முறையில், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற சட்டம் – ஒழுங்கு கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்பட்டு, அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இத்தகைய சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT

இன்றைக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் அது சம்பந்தமாக விவாதம் நடைபெற்றபோது, “பொருத்தமில்லாத, தேவையற்ற சில வார்த்தைகள் அதில் இடம்பெற்றுவிட்டன” என்ற முறையில் உயர்கல்வித் துறை அமைச்சர் சொல்லியிருப்பது கடுகு அளவும் ஏற்க முடியாத ஒரு விஷயம்.

பாஜக, திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகியவற்றின் மாணவர் அமைப்புகளைப் பற்றிக் குறிப்பிடாமல், இடதுசாரி மாணவர் அமைப்புகள் மட்டும்தான் இந்த மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போலவும், அவர்களைக் கண்காணிக்க வேண்டும், ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுவிட்டு, “தேவையற்ற வார்த்தைகள் தெரியாமல் வந்துவிட்டன” என்று அவர் சமாளிப்பது ஏற்க முடியாத வாதம்.

இது இடதுசாரிகளையும், இடதுசாரி கருத்துக்களைக் கொண்ட மாணவர்களையும் ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கு உள்நோக்கம் இல்லை என்று அமைச்சர் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல.

ஆகவே, இதற்குக் காரணமான கல்லூரி கல்வித் துறை ஆணையர் மற்றும் சட்டம் – ஒழுங்கு கூட்டத்தை நடத்தி இத்தகைய வழிகாட்டுதல் கொடுப்பதற்குக் காரணமாக இருந்த தலைமைச் செயலாளர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் உட்பட அனைவரும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

இத்தகைய சுற்றறிக்கை வெளிவந்து கடுமையான எதிர்ப்பு இருந்த நிலையில்தான் அது திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. ஆனால், சுற்றறிக்கை வெளியாகி பல நாட்கள் வரை இது போன்ற விவாதங்கள் நடந்தது நிச்சயமாக ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இதில் இடதுசாரி இயக்கங்கள் மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகளை ஒடுக்க நினைப்பதே நோக்கம்.

காவல்துறை, கல்லூரி நிர்வாகம், பள்ளி நிர்வாகம் எல்லாரும் சேர்ந்து ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதில் இவ்வளவு அக்கறை காட்டும் நீங்கள், தமிழ்நாட்டில் இப்படி ஒருங்கிணைந்து தீர்க்கப்பட வேண்டிய, தலையிட வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றனவே, அதற்கெல்லாம் இத்தகைய ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருக்கிறீர்களா என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.

ஆகவே, இது தெரியாமல் நடந்த ஒரு தவறு என்ற முறையில் எடுத்துக்கொள்ள முடியாது. இது முழுக்க முழுக்கச் சட்டவிரோதமானது. இந்திய அரசியல் சாசனம் நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளை மறுக்கக்கூடிய வகையில்தான் இந்தச் சுற்றறிக்கை அமைந்திருந்தது.

எனவே, இந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டதனால் மட்டும் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது என்ற நிலையை நாம் ஏற்க முடியாது. இதற்குக் காரணமான தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்; உரிய நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

இதே காலகட்டத்தில்தான் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் வட்டாட்சியராக இருந்தவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர்கள் சம்பந்தமான விவரங்களையும், முகவரிகளையும் ஒரு நாளுக்குள் சேகரித்துக் கொடுக்க வேண்டும் என்ற கடுமையான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.

“அப்படி என்ன தலைபோகிற அவசரம்?” என்று நான் கேட்க விரும்புகிறேன். ஒரு கட்சியில் யாரெல்லாம் இருக்கிறார்கள், இல்லை என்பது குறித்த விவரங்களைச் சேகரிக்கும் அதிகாரம் இவருக்கு இருக்கிறதா? அல்லது சிபிஐயோ, சிபிஎம் அமைப்போ தடைசெய்யப்பட்ட இயக்கங்களா? சட்டவிரோதமான கட்சிகளா? எந்த அடிப்படையில் அவர் இதுபோன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிடுகிறார்?

அதற்காகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்து, “குறிப்பாணையைத் திரும்பப் பெற்றுவிட்டோம்; அவரை இடமாறுதல் செய்துவிட்டோம்; ஆகவே அந்தப் பிரச்சினையை அத்தோடு முடிப்போம்” என்று அரசு தரப்பில் சொல்வதெல்லாம் ஏற்கத்தக்க விஷயம் அல்ல.

அவர் இப்படிப்பட்ட குறிப்பாணையை வெளியிடுகிறார் என்றால் இதுபற்றிய விளைவுகளை தெரியாமல் வெளியிட்டார் என்பதெல்லாம் ஏற்க முடியாது. வட்டாட்சியர் அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு மட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியருக்கும், பழனி கோட்டாட்சியருக்கும் என அனைவருக்கும் அனுப்புகிறார் என்று சொன்னால், அவர் முறையான ஒரு நடவடிக்கை என்ற உணர்வோடுதான் தெரிந்தே இந்தக்காரியத்தைச் செய்துள்ளார்.

இப்படி வந்திருப்பது தவறு என்று தெரிந்திருந்தால் மாவட்ட ஆட்சியரோ, கோட்டாட்சியரோ உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அதிகாரிகள் யாருமே “இப்படி ஒரு சட்டவிரோதமான காரியத்தை வட்டாட்சியர் செய்திருக்கிறார்; நாமும்தான் இதற்குப் பொறுப்பாக வேண்டியிருக்கும்” என்ற முறையில் தலையீடே செய்யவில்லை.

இந்தக் குறிப்பாணை வெளிவந்து, எங்களைப் போன்றவர்களும், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கடுமையான கண்டனம் தெரிவித்த பிறகு, அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பிறகுதான் இதன் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். தானாக அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இடமாறுதல் என்பதில் கூட, “அவருக்குப் பயிற்சி முடிந்துவிட்டது; அதனால் நீங்கள் மீண்டும் சென்னைக்குப் போங்கள்” என்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவு இருக்கிறது என்றால்,எவ்வளவு அலட்சியமான முறையில் இந்தப் பிரச்சினையை அதிகாரிகள் கையாள்கிறார்கள் என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு.

ஆகவே, அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியைப் பற்றியும், அதன் உறுப்பினர்கள் சம்பந்தமான விவரங்களைச் சேகரிப்பது என்ற சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபட்ட குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இடமாறுதல் என்பதை ஒரு தண்டனையாக ஏற்க முடியாது.

இது எல்லாவற்றையும் இணைத்துப் பார்த்தால், “அதிகாரிகள் ஆட்சியாளர்களின், அமைச்சர்கள், முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்களா அல்லது அதிகாரிகள் தானடித்த மூப்பாக இஷ்டத்திற்குச் செயல்படுகிறார்களா?” என்ற கேள்வியை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, அதிகாரிகள் என்ன தவறு செய்தாலும், நல்லது செய்தாலும், கெட்டது செய்தாலும் அது அரசுக்குத்தான் வந்து சேரும். எனவே, ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் இதுபோன்ற விஷயங்களில் அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, சரியான திசைவழியில் நிர்வாகத்தைக் கொண்டு செல்ல வேண்டும்; இதில் முதலமைச்சர் உள்ளிட்டோர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share