நதிநீர் ‘பகிர்வு’ என்ற நிலையில் இருந்து நதிநீர் ‘ஒத்துழைப்பு’ என்பதை நோக்கி மாநிலங்கள் நகர வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார் (DK Shivakumar) வலியுறுத்தி உள்ளார்.

சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று ஆகஸ்ட் 20-ந் தேதி நடைபெற்ற தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார் பேசியதாவது:
- காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணாறு மற்றும் பாலாறு படுகைகளில் கர்நாடகாவின் சட்டப்பூர்வ பங்கையும், நதிநீர்ப் பங்கிடும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்போம்; அதே நேரத்தில், சமத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நதிநீர் பகிர்வு என்பதில் இருந்து நதி நீர் ஒத்துழைப்பு என்ற நிலைக்கு நாம் மாற வேண்டும்.
- காவிரியின் குறுக்கே கட்டப்படும் மேகதாது அணை கர்நாடகாவுக்கு மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கும் கூட முக்கியமானது.
- மேகதாது அணையில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்கு பயனளிக்கும்.
- நாட்டின் மக்கள்தொகையில் 5.5 சதவீதத்தைக் கொண்டுள்ளது கர்நாடகா. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 9% பங்களிப்பை கர்நாடகா மாநிலம் வழங்குகிறது.
- இந்தியாவின் மென்பொருள் ஏற்றுமதியில் கர்நாடகாவின் பங்களிப்பு 42%.
- கர்நாடகாவுக்கான நிதிப் பகிர்வை 3.6%-ல் இருந்து 4.7% ஆக மாற்ற வேண்டும்; 15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளால் 6 ஆண்டுகளில் கர்நாடகாவுக்கு ரூ.65,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
- 15-வது நிதிக் குழு பரிந்துரைத்த சிறப்பு மானியமான ரூ.11,500 கோடியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும்.
- 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொண்டு தென்னகத்தின் அரசியல் குரலைப் பாதுகாக்க வேண்டும்; மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு காத்திருக்காமல், மகளிர் இடஒதுக்கீட்டை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.
- மத்திய அரசு நிறைவேற்றியுள்ள கனிம வள திருத்த சட்டத்தை மறு ஆய்வு செய்து, கனிம வளம் நிறைந்த மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.
- வலிமையான இந்தியாவுக்கு வலிமையான தென்னிந்தியா அவசியம். தென்னிந்தியாவின் பொருளாதார பங்கிளிப்பை அங்கீகரிக்க வேண்டும். வலிமையான இந்தியாவை கட்டி எழுப்ப மத்திய அரசு மற்றும் இதர தென் மாநிலங்களுடன் கர்நாடகா இணைந்து செயல்பட தயாராக உள்ளது.
