குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, தாலுகாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குறித்த விவரத்தை சேகரிக்க சொல்லி, உத்தரவிட்டது விவகாரத்தில் சட்டவிரோத மற்றும் அத்துமீறலுக்கு வருவாய் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் 2026 ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சி உறுப்பினர்களின் விபரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்ட சம்பவத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “நவீன தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கம், அது கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் நியாயமற்ற சலுகைகள் ஆகிய காரணங்களால், நாடு முழுவதும் ஜனநாயக உரிமைகள், போராட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யும் இடதுசாரி அமைப்புகளும் இத்தகைய கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் மற்றும் மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகளுக்கு எதிராகவும் வலுவாக போராடி வருகிறது. அரசு கார்ப்பரேட் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் நியாயமற்ற சலுகைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி வருகிறது.
டில்லியில் ஜந்தர் மந்தர் பகுதியில் 40 நாட்கள் வரையிலும் ஓரிடத்தில் அமர்ந்து காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுகிறது. உலகில் பல நாடுகளில் மிக முக்கிய நகரத்தின் மைய பகுதியில், பொதுமக்கள், அரசியல் இயக்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் தங்களின் கோரிக்கையை முன் வைத்து போராட்டங்களை நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற ஜனநாயக உரிமைகள், கோரிக்கைகளை முன் வைத்து நடத்தும் போராட்ட உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்த போராட்டங்களை காவல்துறை மிக கடுமையாக ஒடுக்கும் செயலை அரங்கேற்றுவது, அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை மறுக்கும் செயலாகும். அரசின் இத்தகைய ஒடுக்குமுறையை சிபிஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மேற்படி அடக்குமுறையின் உச்சமாக, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி, தனது அதிகார எல்லை மற்றும் வரம்புகளை மீறி, சட்டத்திற்கு விரோதமாக, தாலுகாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குறித்த விவரத்தை சேகரிக்க சொல்லி, 18.08.2026 அன்று, ந.க.எண். (2017/2026/அ1) உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவின் நகலை, வட்டாட்சியர் அய்யாசாமி, மாவட்ட ஆட்சியர், பழனி கோட்டாட்சியர், தலைமையிடத்து துணை ஆட்சியர், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி உள்ளார். மாவட்ட ஆட்சியர், பழனி கோட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மேற்படி சட்ட விரோத உத்தரவின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
மேற்படி உத்தரவை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட சிபிஐ(எம்) சார்பில் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து மேற்படி வட்டாட்சியர் பயிற்சி முடிந்துவிட்டது என மாவட்ட ஆட்சியர் 18.08.2026 பிற்பகலில், தனியரை மாவட்ட பயிற்சியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக உத்தரவு வெளியிட்டு உள்ளார். மேற்படி வட்டாட்சியர் செயல் கண்டிக்கத்தக்கது, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய ஒன்று என ஜனநாயக குரல்கள் அதிகரித்து வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை, ஜனநாயக படுகொலைக்கு உடந்தையாக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வுகளும் மாநில வருவாய் துறைக்குள் இருக்கும் ஜனநாயக விரோத கருப்பு ஆடுகளின் செயலாக தெரிகிறது.
மாநில முதல்வரின் கவனத்திற்கு மேற்படி பிரச்சனை எடுத்து செல்லப்பட்ட பின்னரும், மாநிலம் முழுவதும் ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இது குறித்து விவாதித்து வரும் நிலையிலும், மாவட்ட ஆட்சியர் பயிற்சியில் இருந்து விடுவித்ததாக அறிக்கை வெளியிட்டிருப்பது, மாநில ஆட்சியாளர், வருவாய் துறை அதிகாரிகளுக்கு அளிக்கும் வழிகாட்டுதல் மீது சந்தேகம் வலுவாக ஏற்படுகிறது. ஆட்சியரின் செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்த சட்டவிரோத மற்றும் அத்துமீறலுக்கு வருவாய் துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டுமெனவும், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.
