போராடும் உரிமையை மறுக்கவும், இடதுசாரி கட்சியினரை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வெளியிடப்பட்ட கல்வித்துறை சுற்றறிக்கைக்கு தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் அக்கட்சியின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: கல்லூரி கல்வி ஆணையர் 17.08.2026 தேதியிட்டு, அரசு கடித ந.க எண். 1075/அ1/2026-1, 14.08.2026 என்பதை பார்வை என குறிப்பிட்டு, ஒரு உத்தரவை அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பி உள்ளார். இந்த உத்தரவு, பார்வையில் குறிப்பிட்ட அரசு கடிதத்தில், இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களில், மாணவ-மாணவியர் மற்றும் இளைஞர்கள் பங்கெடுப்பதை, தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே, துறை இடைத் தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை எடுத்த விவரங்களை தெரிவிக்குமாறு கல்லூரி கல்வி ஆணையர் கேட்டுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
14.08.2026 தேதியிட்ட அரசின் சிறப்பு செயலாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பிய கடிதம், மேற்படி உத்தரவை கல்லூரி கல்வி ஆணையருக்கு வழங்கியுள்ளது. ஜூலை மாத சட்ட ஒழுங்கு குறித்த பரிசீலனையின்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் எம்.சாய்குமார் ஐ.ஏ.எஸ் வலியுறுத்தியதாக உள்ளது. கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரி கல்வி ஆணையரகம் இவை குறித்து என்ன நடவடிக்கை எடுத்தது என்ற அரசின் சிறப்பு செயலாளருடைய கேள்வி மிகத் தீவிர தன்மையுடன் ஜனநாயக இயக்கங்களை ஒடுக்கும் நோக்கம் கொண்டதாகவே வெளிப்படுகிறது.
தலைமைச் செயலாளரும் கலந்து கொண்ட கூட்டத்தில் போராடும் உரிமை மறுக்கப்படுவது, கல்வி நிலையங்களுக்குள் காவல்துறை அத்துமீறி செல்வதை அனுமதிக்கும் வழிகாட்டுதல் வழங்கியிருப்பது மிகக் கொடிய அடக்குமுறையை கட்டவிழ்க்கும் நோக்கம் கொண்டதாகும்; அனைத்தும் திட்டமிட்டு நடந்த செயலாகும். எனவே, தலைமைச் செயலாளர் உள்ளிட்டு அதிகாரிகள் பங்கெடுத்து நடந்த பரிசீலனைக் கூட்டத்தின் இந்த முடிவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இடதுசாரி கட்சியினரையும், இதர ஜனநாயக நடவடிக்கைகளையும் குறிவைத்து ஒடுக்க வேண்டும் என்ற நோக்கம் ஏன் உருவானது? தலைமைச் செயலாளர் எப்படி அமைச்சரவைக்கு அல்லது முதலமைச்சருக்கு தெரியாமல், இதுபோன்ற மிகப்பெரிய முடிவுகளை எடுத்திருப்பார்? போன்ற கேள்விகள் அடுத்தடுத்து எழுவது இயற்கையானதாகும்.
19.08.2026 அன்று மீண்டும் கல்லூரி கல்வி ஆணையர் ஒரு கடிதம் மூலம் மேற்படி உத்தரவை விலக்கி கொள்வதாக கூறியுள்ளார். ஆனாலும், மேற்படி உத்தரவுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வன்மையாக கண்டிக்கிறது. இத்தகைய வழிகாட்டுதலை வழங்கிய தலைமைச் செயலாளர் பொறுப்பேற்க வேண்டுமெனவும், எதிர்வரும் காலத்தில் இது போன்ற ஜனநாயக பறிப்பு சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை தமிழக முதலமைச்சர் உறுதி செய்திட வேண்டுமென்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
