தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது ‘சூப்பர் சிங்கர்’ ஆகிவிட்டது என்று சொல்வது ஒரு மாதிரியாக உள்ளது. கருத்துகளைச் சொல்லும்போது பாட்டு பாட விரும்புகிறவர்கள், அந்தக்கருத்தை ஒட்டிப் பாடுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை என தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “பேரவைத் தலைவரான நீங்கள் அவையை மிகவும் சிறப்பாக வழிநடத்தி வருகிறீர்கள். எங்களுக்கு வாய்ப்பு தந்தாலும், எங்களை விட அதிகமாக ஆளுங்கட்சியினருக்கு வாய்ப்பளிக்கிறீர்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். நீங்களும் அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குகிறீர்கள். எதிர்க்கட்சிகளை விட ஆளுங்கட்சியினர் பேசுவதையே அதிகமாக அவைக்குறிப்பிலிருந்து நீக்கி வரலாறு படைத்துள்ளீர்கள்; அதற்கு எனது வாழ்த்துகள்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படுகின்றன. நாங்கள் கேள்வி கேட்டால் ஆச்சரியப்படும் அளவிற்குப் பதில் தருகிறார்கள். இப்போது பாட்டெல்லாம் பாடுகிறார்கள். நாங்கள் சட்டப்பேரவைக்கு வந்துள்ளோமா அல்லது ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு வந்துள்ளோமா என்ற சந்தேகமே வருகிறது. நீங்கள் இதையெல்லாம் அவைக்குறிப்பிலிருந்து நீக்கினாலும், ரீல்ஸ் மூலமாக சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்படுகிறது. இதனால் நீங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது. முதலமைச்சர் தனது மேஜையில் உள்ள கோப்புகளைத் திறந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “மிசாவையே பார்த்த திமுக இயக்கத்தைத் தனிப்பெரும் கட்சியாக எங்களது தலைவர் வெற்றி பெறவைத்துள்ளார். அதனால் எங்களுக்கு எந்தப் பயமும் கிடையாது. ஒவ்வொரு துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு, முதலமைச்சர் அலுவலகத்தில் அந்த ஃபைல் உள்ளது. அதனால் ஆதாரப்பூர்வமாகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுதான் முதலமைச்சர் சொல்ல வந்தது. முதலமைச்சர் சொன்னபோது அவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் வரவில்லை; அது அவரது பிரச்சினை. கொறடா ‘ஆதாரம் இருக்கிறதா?’ என்று கேட்கையில், ‘எங்களிடம் ஆதாரம் இருக்கிறது; தகுந்த நேரத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று நிதித்துறை அமைச்சர் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் என்ன ரீல்ஸ் விட்டார்கள், என்ன பாட்டு பாடினார்கள்? நாடாளுமன்றத்திலேயே பதவியேற்கும்போது தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பெரியாரைப் பற்றியோ அண்ணாவைப் பற்றியோ பேசவில்லை. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் யாரைப் பற்றி பேசி பதவிப்பிரமாணம் செய்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்” என்றார்.
தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், “ஜோசியர் என்ற வார்த்தையை நீக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். 70 வயது முதியவர் ஒருவர், ‘இப்போது நாங்கள் சீரியல் பார்ப்பதில்லை; சட்டசபையில் என்ன நடக்கிறது என்பதைத்தான் நானும் என் மனைவியும் பேத்தியும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் மிகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறோம். எங்களுக்கு இருந்த பயமெல்லாம் போய், எதுவாக இருந்தாலும் எங்களுக்கென்று ஒரு பிள்ளை இருக்கிறார்’ என்று கூறினார். இது உண்மை” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், “எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது ‘சூப்பர் சிங்கர்’ ஆகிவிட்டது என்று சொல்வது ஒரு மாதிரியாக உள்ளது. கருத்துகளைச் சொல்லும்போது பாட்டு பாட விரும்புகிறவர்கள், அந்தக்கருத்தை ஒட்டிப் பாடுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. முதல்வரைப் பற்றிச் சொல்லும்போது ‘ஜோசியக்காரரைக் கேட்டுச் சொல்கிறார்’ என்கிறீர்கள். முதல்வரைப் பொறுத்தவரை, அவர் எத்தனை மணிக்கு வருகிறார், எவ்வளவு நேரம் பணிபுரிகிறார், எப்படி கோப்புகளைப் பார்க்கிறார் என்பதையெல்லாம் ஏற்கனவே அமைச்சர்கள் விளக்கியுள்ளனர். இதில் யாரை அவர் ஆலோசிக்கிறார் என்றால், யாரையும் ஆலோசிக்காமல் சுயமாகவே தனது அறிவாற்றலால் முடிவெடுக்கும் திறமை அவருக்கு இருக்கிறது என்பதை இந்த மூன்று மாத காலத்தில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கோப்புகள் என்னிடம் தயாராக இருக்கிறது’ என்றால், அது அவரது ஆய்வில் இருக்கிறது என்று அர்த்தம். எந்த நேரத்தில் எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி முதலமைச்சர் துறை சார்ந்த அமைச்சர்களோடு கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பார் என்று சொன்னாரே தவிர, அதைச் சவாலாக எடுத்துக்கொள்ளக் கூடாது.” என்றார்.
