முதல்வர் விஜய்-ன் எம்.எல்.ஏ.க்களுக்கான ’கார்’ அறிவிப்பும் ‘நிதி’ முதல் எழும் கேள்விகளும்!

Published On:

| By Minnambalam Desk

CM Vijay's MLA Car Announcement and the Questions

அ. குமரேசன்

“கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்.”

வாலி எழுத்தில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில். டி.எம். சவுந்திரராஜன் பாட, எம்ஜிஆர் நடிக்க, 1964இல் வந்த ‘படகோட்டி’ படத்தின் இந்தப் பாட்டு தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பரவிப் புகழ்பெற்றது. எம்ஜிஆர் மீது பெரும்பகுதி மக்களுக்கு மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தி, முதலமைச்சர் இருக்கையில் அமர்கிற அளவுக்கு அவரது செல்வாக்கை வளர்த்ததில் இப்படிப்பட்ட பாட்டுகளுக்கும் பங்குண்டு.

ADVERTISEMENT

இன்று முதலமைச்சர் இருக்கையில் அதே திரைப்படத் துறையிலிருந்து வந்து பெரும்பகுதி மக்களின் அன்பைப் பெற்றுள்ள ஜோசப் விஜய் அமர்ந்திருக்கும் நிலையில் இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறார் சட்டமன்ற உறுப்பினர் கே. சிந்து. அதுவும் சட்டமன்றத்திற்கு உள்ளேயே பாடியிருக்கிறார். பாடலில் உள்ள அவன் என்ற சொல்லை அவர் என்று மாற்றி அவர் பாடியது விஜய் பற்றியேதான். அவர் என்ன கொடுத்தார் என்றால் (அதாவது கொடுக்கப் போகிறார் என்றால்), எம்எல்ஏக்கள் எங்கும் சென்றுவரத் தோதாகப் புத்தம் புதிய கார். அதை இயக்குவதற்கு ஓட்டுநர். அவருக்கான ஊதியம், தினசரிப் படி. பெட்ரோல் (அல்லது மின்சார) செலவு, பராமரிப்புத் தொகை…

புரிவதும் புரியாததும்

தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், எளிய நிலையில் இருக்கும் பலரையும் வேட்பாளராக நிறுத்தி, சட்டமன்ற உறுப்பினர்களாகவும் ஆக்கியிருப்பது உண்மை. அப்படிப்பட்ட உறுப்பினர்கள், முதலமைச்சரின் அறிவிப்பால் புளகாங்கிதம் அடைந்திருப்பதையும் நன்றி விசுவாசத்தோடு உணர்ச்சிவசப்படுவதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ADVERTISEMENT

புரிந்துகொள்ள முடியாதது என்னவென்றால், அந்தப் புதிய கார்களுக்காக  முதலமைச்சர் அரசுக் கருவூலத்திலிருந்து மக்கள் பணத்தை அல்லவா எடுத்துக் கொடுக்கிறார்? பொதுப் பணத்தில் யாரும் கைவைக்க விடமாட்டோம் என்று பதவியேற்பு விழாவில் முழங்கினாரே, அந்த முழக்கத்தில் வருகிற “யாரும்” என்ற சொல்லுக்கு முன்பாக அடைப்புக் குறிகளுக்குள் “வேறு” என்ற சொல்லைப் போட்டு நிரப்பிக்கொள்ள வேண்டுமோ?

முதலில், இந்த அறிவிப்பை எதற்காக 110ஆவது விதியின் கீழ் வெளியிட வேண்டும்? உறுப்பினர்கள் கருத்துச் சொல்லலாமே தவிர விவாதிக்கவோ, வாக்குப் பதிவு அடிப்படையில் முடிவு செய்யவோ முடியாது என்பதே  விதி 110. மக்கள் நலன் சார்ந்த அவசர நடவடிக்கைகள் என வருகிறபோது இந்த விதி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் ஒரு விதி.

ADVERTISEMENT

கார் வேண்டும்தான்…

இன்றைய சூழலில் பொதுமக்களின் முக்கியமான போக்குவரத்துத் தேவைகளுக்கே கூட கார்கள் தேவைப்படுகின்றன. சொந்தக் கார் இல்லாதவர்கள் வாடகைக் கார் செயலி நிறுவனங்கள் மூலம் வரவழைத்துப் பயணிக்கிறார்கள். மக்களின் பிரதிநிதிகளுக்கு, ஒரே நாளில் பல முறை தொகுதிக்கு உள்ளேயும் பிற இடங்களுக்கும் விரைவாகச் செல்ல வேண்டிய தேவை இருக்கவே செய்கிறது.

இயலாதவர்கள் வேண்டுகோள் விடுப்பார்களானால், அதை நிறைவேற்ற முயல்வது அவர்களது தலைவருக்கு அழகுதான். ஆனால், அதைக் கட்சியின் நிதியிலிருந்து செய்யலாமே? சொல்லப்போனால், தொகுதியின் பிரதிநிதி இவ்வாறு குறிப்பிட்ட ஓர் இடத்திற்குச் சென்றுவர வேண்டியிருக்கிறது என்றால், அவர் சார்ந்துள்ள கட்சியின் மாவட்ட அமைப்பே அதற்கு ஏற்பாடு செய்கிறது. குறிப்பிட்ட ஒரு பிரச்சினையை ஆய்வு செய்வதற்குச் செல்கிறார் என்றால், அதில் தொடர்புள்ள மக்களே கூட வாகனம் ஏற்பாடு செய்கிறார்கள். இதையெல்லாம் விட, இப்படிப்பட்ட தேவைகளை சமாளிப்பதற்கென்றே சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சம்பளத்துடன் கூடுதல் படிகள் வழங்கப்படுகின்றன.

இன்றைய ஏற்பாடுகள்

தற்போதுள்ள சட்டப்பூர்வ விதிமுறைகளின்படி,

  • தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களால்  இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் (நகர, புறநகர், விரைவு மற்றும் சொகுசுப் பேருந்துகள்)  கட்டணமின்றிப் பயணிக்கலாம். இதற்காக அவர்களுக்குச் சிறப்புப் இலவசப் பயண அனுமதிச் சீட்டு  வழங்கப்படுகிறது.
  • ரயில் பயணத் தேவை ஏற்படுமானால்   தனியாக அல்லது தனது உதவியாளருடன் இலவசமாகப் பயணிப்பதற்கான ரயில்வே கூப்பன் வழங்கப்படுகிறது. ஓராண்டில் நிர்ணயிக்கப்படும் தொகை வரை இந்தக் கூப்பன்களைப் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்திப் பயணித்திருந்தால் பணத்தைத் திரும்பப் பெறும் சலுகையும் உண்டு.
  • சொந்த வண்டியை அல்லது வாடகை வண்டியைப் பயன்படுத்தி அலுவல் சார்ந்த பயணங்களை மேற்கொள்ளும்போது, குறிப்பிட்ட அளவு வரையிலான எரிபொருள்  தொகையைக் கணக்கிட்டு அதை மாதப் படியாகவே அரசாங்கம் வழங்குகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள்  கட்டணமின்றிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்கச் சென்னை வரும்போதும், சட்டமன்றக் குழுக்களின் ஆய்வுகளுக்காக பிற பகுதிகளுக்குச் செல்லும்போதும் கிலோமீட்டர் கணக்கீட்டில் பயணப்படி, சென்னையில் தங்கிப் பணியாற்றும் நாட்களுக்குத் தினசரிப்படி உண்டு.

மிகைச் சலுகைகள் அல்ல

இதையெல்லாம் சில மேல்தட்டுக் கருத்தாளர்கள், எம்எல்ஏக்களுக்கு அள்ளித்தரப்படும் சலுகைகள் என்று விமர்சிப்பதுண்டு. ஆனால். இவற்றை மக்கள் சார்பாக, அவர்களுக்கான பணிகளை மேற்கொள்கிற பிரதிநிதிகளுக்குச் செய்யப்படும் நியாயமான ஏற்பாடுகளாகவே பார்க்க வேண்டும். பிரதிநிதிகள் தங்களின் கைப்பணத்திலிருந்து செலவிட இயலாது, அப்படிச் செலவிடக் கூடாது. கைக் காசைச் செலவு செய்தால், ‘என்னை யார் கேட்பது’ என்ற ஆணவம் தலையில் ஏறிவிடக்கூடும்.

இத்தனை ஏற்பாடுகள் இருக்க, திடீரென்று சொந்தக் கார் வாங்கித் தருவதற்கான தேவை என்ன வந்தது? முதலிலேயே குறிப்பிட்டது போல, யாரேனும் கோரிக்கை விடுத்திருந்தால் கட்சி நிதியிலிருந்து நிறைவேற்றலாம் அல்லது சொந்தப் பணத்திலிருந்து வாங்கிக்கொடுத்துப் பெருமிதக் கணக்கை ஏற்றிக்கொள்ளலாம். அப்படித் தலைவர் தன் சொந்தப் பணப் பையிலிருந்து எடுத்துக்கொடுக்கிறார் என்றால் அவரும் அதே ஆணவ அதிகாரப் புத்தியின் பிடியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உண்டு.

மாநிலத்தின் நிதி நெருக்கடி பற்றி இந்த அரசுதான் பேசுகிறது. நிதி நிலை பற்றிய வெள்ளையறிக்கையே வெளியிட்டார்கள். முந்தைய திமுக ஆட்சியாளர்கள் கடனை இழுத்துவிட்டுப் போய்விட்டதாகவும் குற்றம் சாட்டினார்கள். இந்த நிலைமையில், 234 எம்எல்ஏக்களுக்கு 234 கார்கள் வாங்குவதற்கான நிதி எங்கிருந்து வரும்?


கார் பட்ஜெட்

ஆளுங்கட்சி, ஆதரவுக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என 234 சட்டமன்ற உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள், பேரவைத் தலைவர், துணைத் தலைவர், பேரவைச் செயலர் என மொத்தம் 240 பேருக்கு நவீன கார் வாங்கப்பட உள்ளது. குறைந்தபட்ச நவீன வசதிகளுடன் 15 லட்சம் ரூபாய் முதல் கூடுதல் வசதிகளுடன் 20 லட்சம் ரூபாய் வரையில் விலை கொடுக்க வேண்டியிருக்கும். அப்படியானால் 36 கோடி முதல் 48 கோடி ரூபாய் வரையில் செலவாகும். இது ஒரு முறை செய்யப்படும் கொள்முதல் செலவு.

அத்துடன், ஓட்டுநர் ஊதியம், எரிபொருள், இதர படிகளுக்கு மாதம் ரூ.75,000, உதவியாளருக்கு ரூ.25,000 என ஓராண்டில் 21 கோடியே 60 லட்சம் ரூபாய் ஆகிறது. மொத்தத்தில் 57 கோடியே 60 லட்சம் முதல் 69 கோடியே 60 லட்சம். இது முதலாமாண்டு கார் பட்ஜெட். அதற்கடுத்த ஆண்டிலிருந்து புதிய கார் வாங்குகிற செலவு இருக்காது, ஆனால் மற்ற செலவுச் சங்கதிகள் ஆண்டுதோறும் தொடரும்.

இந்த அரசு அறிவித்துள்ள கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள், 8ஆம் வகுப்புவரையில் ஊட்டச் சத்துணவு உள்ளிட்ட  உண்மையிலேயே பாராட்டத்தக்க திட்டங்களுக்கான தொகைகளோடு, வரவேற்க இயலாத இந்தத் திட்டத்திற்கான தொகையும் சேர்ந்து  கொள்ளும். தேர்ந்தெடுத்த மக்களுக்கு  அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த உதவாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வசதியைக் கூட்டும்.

மறுக்கும் நேர்மை

தற்போதைய உறுப்பினர்களில் 190 பேருக்கு சொந்தக் கார் இருப்பதாக அவர்களது வேட்பு மனு ஆவணங்களிலிருந்து தெரியவருகிறது. அவர்களில் சிலருக்கு இரண்டுக்கு மேற்பட்ட கார்கள் இருக்கின்றன. அவர்களுடைய வீடுகள் முன்பாகவும் புதிய கார்கள் நிறுத்தப்படுமா? இவர்களில் எத்தனை பேர், “என்னிடம் ஏற்கெனவே கார் இருப்பதால் புதிதாக வேண்டாம்,” என்று மறுப்பார்கள்?

அடிப்படையாக மேலும் சில கேள்விகள் முளைக்கின்றன.

  • ஐந்தாண்டு சட்டமன்றக் காலம் முடிந்து, புதிய தேர்தல் நடந்து ஒருவர் மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பேரவைக்கு வருகிறார் என்றால், அந்தப் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கார் ஷாப்பிங்கில் அவருக்கு மறுபடியும் ஒரு வண்டி கிடைக்குமா? அப்படியானால் நிறைய வண்டி நிறுத்துவதற்குப் போதுமான காலியிடத்துடன் புதிய வீடுகளும் தர வேண்டியிருக்குமே!
  • தற்போதைய நடைமுறை விதிகளின்படி, மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் சட்டமன்றக் கூட்டத்திற்காகவோ பிற பணிகளுக்காகவோ சென்னைக்கு வருகிறபோது தங்குவதற்காக போதிய வசதிகளுடன் கூடிய பெரிய அறைகளைக் கொண்ட விடுதிகள் உள்ளன. ஐந்தாண்டு முடிவில், அவர்கள் அந்த அறைகளைக் காலி செய்து அரசின் பொதுப் பணித் துறையிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதே போல், இந்தக் கார்களும் திரும்பப் பெறப்படுமா?
  • ஓட்டுநர்கள் நிலைமை என்ன? முன்னாள் எம்எல்ஏக்களுடன் செல்வார்களா, அல்லது புதிய எம்எல்ஏக்களுக்குப் பணியாற்றுவார்களா?

டீக்கடை தீர்ப்பு

தேநீர்க்கடைகளில் வெகு இயல்பாக, “கார் கொடுத்து எம்எல்ஏக்களின் வாயை மூடவைக்கிற தந்திரம் இது,” என்று சூடான தேநீரை உறிஞ்சிக்கொண்டே மக்கள் பேசுகிறார்கள். எல்லாக் கட்சிகளின் எம்எல்ஏக்களின் வாய்களையும் மூட வைத்துவிட முடியாதுதான்.

240 கார்கள் வாங்கல், ஓட்டுநர்–உதவியாளர் நியமனம் ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெறுமானால், அந்தக் கார்களிலேயே வந்திறங்கி விமர்சிப்பார்களே! 110ஆவது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வாங்கிய கார்கள், ஆகவே அது பற்றி விவாதிக்க முடியாது என்று அப்போது சொல்ல முடியாதே!

கலைஞர், ஜெயலலிதா ஆட்சிகளில்

விவாதம் என்று வருகிறபோது இரண்டு முக்கியமான, சுவையான நிகழ்வுகளை இங்கே அசைபோடலாம்.

2007 ஜூலையில், அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி உறுப்பினர்களின் ஊதியத்தையும் இதர படிகளையும் உயர்த்துவதற்கான சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்தார் (110இன் கீழ் அல்ல). அதன் மீதான விவாதத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ந. நன்மாறன்  “மாநிலத்தில் வறட்சி, நிதி நெருக்கடி, மக்கள் சந்திக்கும் பல்வேறு பொருளாதாரச் சிரமங்கள் எனப் பல அத்தியாவசியச் செலவுகள் அரசாங்கத்திற்கு முன்னால் நிலுவையில் இருக்கின்றன. இந்தச் சூழலில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இப்படி ஓர் ஊதிய உயர்வு இப்போது மிகவும் தேவையா.” எனக் கேட்டார்.

முதலமைச்சர் கலைஞர் உரித்தான நகைச்சுவை உணர்வோடு, உங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்றால், நீங்கள் உயர்த்தப்பட்ட ஊதியத்தை வாங்காமல் விட்டுவிடலாமே… உங்களை யார் வேண்டாம் என்று சொன்னது, என்று கூறினார்.

உடனே நன்மாறன் தனக்குரிய நையாண்டி நடையில் “சாப்பாடு சரியில்லை, விலை அதிகமாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டினால்… ‘நீ சாப்பிடாமல் பட்டினியாக இரு’ என்று சொல்வதைப் போல அல்லவா உங்கள் பதில் இருக்கிறது!, என்று சட்டெனக் குறிப்பிட்டார். முதலமைச்சர் உள்பட மொத்த சபையும் குலுங்கிச் சிரித்தது.

ஊருக்குத் தெரியவந்த உண்மை

இதே போல, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 2011 அக்டோபரில் ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டார். மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், மாநிலப் பொருளாதார நிலைமையைச் சுட்டிக்காட்டி இது தேவையில்லை என்று வாதிட்டனர். அப்போது கட்சியின் சட்டமன்றக்குழு தலைவராக அ. சவுந்தரராசன், துணைத் தலைவராக கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.

ஜெயலலிதா தனது நிறைவுரையில், “கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இந்த ஊதிய உயர்வை எதிர்ப்பதற்கான காரணம் எனக்குப் புரிகிறது! நீங்கள் எம்எல்ஏ-வாகப் பெறும் முழுச் சம்பளத்தையும் அப்படியே உங்கள் கட்சியிடம் ஒப்படைத்து விடுவீர்கள். பின்னர் கட்சி உங்களுக்குத் தரும் ‘அலவன்ஸ்’ தொகையை வைத்துக்கொண்டுதான் வாழ்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு சம்பளம் உயர்த்தப்பட்டாலும் அது கட்சிக்குத்தானே போகப்போகிறது… உங்களுக்கு அதில் நேரடிப் பயன் இல்லை என்பதால் தான் நீங்கள் இதை எதிர்க்கிறீர்கள்!,” என்றார். ஆளுங்கட்சியினர் மேசையைத் தட்டி ஆரவாரித்தனர் என்றாலும், கம்யூனிஸ்ட்டுகளின் எளிய, கட்டுப்பாடான வாழ்க்கையை மக்கள் தெரிந்துகொள்ளும் வாய்ப்பாகவும் அது அமைந்தது.

முன்னுதாரணம் உண்டா?

முதலமைச்சர் விஜய் அறிவித்தது போன்ற கார் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருப்பதாகத் தகவலில்லை. உலக அளவிலும் கூட, மேற்கிலும் மற்ற பல நாடுகளிலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இலவச பேருந்து ரயில் விமானப் பயணங்கள், சொந்த வண்டிக்கான எரிபொருள் செலவு, பராமரிப்பு போன்ற சலுகைகள்தான் நடைமுறையில் இருக்கின்றன. எந்த நாட்டிலும் கார் வாங்கிக்கொடுத்த கதைகள் இல்லை. ஒருவேளை, “ஒப்பிலாத கார் விநியோகம் உலகத்திற்கொரு புதுமை” என்பதாகப் புகழ்பெறலாம் என்று யாராவது ஆலோசனை சொன்னார்களோ என்னவோ.

அறிவித்துவிட்டதால் பிடிவாதம் தேவையில்லை. இது சட்டமாக நிறைவேற்றப்பட்டதல்ல, அறிவிப்புதான் என்பதால் அரசு மறு ஆய்வு செய்து விலக்கிக்கொள்ளலாம். மக்கள் பணம் விரையமாக்கப்படுகிறது என்று யாராவது பொதுநல வழக்குத் தொடுப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதற்கு முன் முதலமைச்சர் நல்ல முடிவெடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கட்டுரையாளர் குறிப்பு: அ. குமரேசன்

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர். தீக்கதிர் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர். பல்வேறு உலக இலக்கிய, அரசியல், சமூக படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். 

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share