தனியார் நிகழ்ச்சி விவாதத்தில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கி வீசிய விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை மதுரவாயலில் உள்ள பிகைன் வுட்ஸ் சேனல் சார்பாக நேற்று விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விவாத அரங்கில் அதிமுகவைச் சேர்ந்த கோவை சத்யன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக், தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தவெக செய்தி தொடர்பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நாஞ்சில் சம்பத் திமுகவினரை அவதூறான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.
இதனால் அரங்கில் இருந்தவர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கூட்டத்தில் இருந்த ஒருவர் நாற்காலியை எடுத்து நாஞ்சில் சம்பத் தலையில் வீசியதால் காயம் ஏற்பட்டதாகவும் ஒரு தகவல்கள் வருகின்றன.
இந்த சம்பவத்தால் விவாத மேடை போர்க்களமாக மாறியதை தொடர்ந்து அந்நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தற்போது இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக அதிமுக கோவை சத்யன் தனது எக்ஸ் பக்கத்தில், ”தனது வாயை வாடகைக்கு விட்டு பல கட்சிகள் தாவி பிழைக்கின்ற நபரிடம் ஒழுக்கம் , நல்ல பண்பு , நடத்தை எதிர்பார்ப்பது தவறு.
நேற்று விவாத மேடையில் தவெகவின் பேச்சாளர் மேடையில் பேச ஆரம்பித்த போது கீழே இருந்த சிலர் கிண்டல் செய்தனர். நாகரீக வரையறையை மீறவில்லை. அதை கூட தாங்க முடியாமல் ॥….. பிள்ளைகள் “ என்று கூட்டத்தில் இருந்தவர்களை பார்த்து திட்டியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அங்கு பெண்களும் இருந்தார்கள்.
காவலர்கள் அழைத்து பைலட் வாகனத்துடன் அழைத்து சென்றது தவெக அரசு.
இதுதான் உங்கள் நடவடிக்கை லட்சணமா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுகவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ”தவெகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேச எழுந்தார். நிகழ்வு ஆரம்பிக்கும் போது மக்கள் அரங்குகளில் மாற்றுக் கருத்து தெரிவிப்பதும், கேள்வி எழுப்புவதும், முழக்கம் எழுப்புவதும் ஜனநாயகத்தில் இயல்பான ஒன்றுதான். அப்படித்தான் இன்றும் கூடியிருந்த மக்கள் தங்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்!!
ஆனால், பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் நாஞ்சில் சம்பத் ஆளுங்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்ற ஆணவத்தில் தன்னிலை மறந்து, பொதுமக்களை இழிவுபடுத்தும் வகையிலும், பொது அரங்கில் பயன்படுத்தக்கூடாத கொச்சையான வார்த்தைகளையும் பயன்படுத்தி ஆவேசமாக கத்த தொடங்கினார்!!
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரங்கில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் முழக்கம் எழுப்பினர். உடனடியாக நானும், தம்பி இடும்பாவனம் கார்த்திக்அவர்களும், கோவை சத்யன் , நிகழ்ச்சியின் நடுவர் ரங்கராஜ் பாண்டேவிடம் நாஞ்சில் சம்பத் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில் அவரை தொடர்ந்து பேச அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினோம்.
திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மட்டுமல்லாமல், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடந்து கொண்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
எங்களது கண்டனத்தை ஏற்றுக்கொண்ட நிகழ்ச்சி நடுவர் ரங்கராஜ் பாண்டே நாஞ்சில் சம்பத்தை தொடர்ந்து பேச அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளித்ததன் காரணமாக நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது.
ஆளுங்கட்சியாக இருக்கிறோம் என்ற ஆணவத்தில் தவெக நிர்வாகிகள் பொது மேடைகளில் அடாவடியாக நடந்து கொள்வதும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் இயல்பாகிவிடக் கூடாது. அதிகார ஆணவத்தில் அராஜகம் செய்த பல கட்சிகளும், ஆட்சிகளும் வரலாற்றில் வீழ்ந்திருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்றைய நாஞ்சில் சம்பத் அவர்களின் பேச்சு அராஜகத்தின் உச்சம்; ஆணவத்தின் உச்சம். பொதுமக்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் பயன்படுத்திய வார்த்தைகளை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேடையிலேயே எனது கண்டனத்தைப் பதிவு செய்தேன். நிகழ்ச்சி நிர்வாகமும் அதனை ஏற்று அவரை தொடர்ந்து பேச அனுமதிக்காமல் எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறோம்.
ஜனநாயக மேடைகளில் கருத்து மோதல்கள் இருக்கலாம்; ஆனால் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் இழந்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.
நாஞ்சில் சம்பத்தின் இன்றைய பேச்சை வன்மையாகக் கண்டிக்கதக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
