தமிழ்நாட்டில் யார் யார் பாத்ரூமில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க தனியாக அமைச்சர் வைத்திருக்கிறீர்களா என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சட்டமன்றத்தில் மின்சாரத் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் நிர்மல் குமார் பேசுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாரியம் பட்ட பாடுகளை ஒரே ஒரு நிமிடம் விளக்க வேண்டும் என்று நினைக்கிறேன். கரூர் கம்பெனி—மன்னிக்கவும், கரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி…” என்றார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, “மன்னிக்கவும், கோயம்புத்தூர் சட்டமன்ற உறுப்பினர்; அவர்தான் 2021-இல் இந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தார்” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அமைச்சர் சொன்னதை நீக்கிவிட்டீர்களா தலைவரே?” என்றார். “மாண்புமிகு சங்கி அமைச்சர்… மன்னிக்கவும், மாண்புமிகு எரிசக்தித் துறை அமைச்சர்” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “மாண்புமிகு பாத்ரூமில் 3 மணி நேரம் உட்கார்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் என்று நான் சொன்னால் எவ்வளவு நேரம் ஆகும்? 5 நிமிடம் ஆகுமா? எல்லோருக்கும் பேசத் தெரியும், உட்காருங்கள். தேவையில்லாத வார்த்தைகளைப் பேசினால் எங்களுக்கும் பேசத் தெரியும்” என்றார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சால் அதிருப்தி அடைந்து முகம் சுழித்த சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.பி. பிரபாகர், “கரூர் கம்பெனி என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன்” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டில் யார் யார் பாத்ரூமில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதைக் கணக்கெடுக்கத் தனியாக ஆள் வைத்திருக்கிறீர்களா என்பதை நான் கேட்க விரும்புகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நான் மீண்டும் பதிவு செய்கிறேன்; திமுகவினரைப் போல நாங்கள் எல்லோரும் எழுந்தால் இந்த அவை நடக்காது” என்றார். உடனடியாகத் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுந்து நின்றனர்.
இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “எங்களது சட்டமன்ற உறுப்பினர் மானியக் கோரிக்கை குறித்துப் புள்ளிவிவரங்களுடன் தெளிவாகப் பேசிக்கொண்டிருந்தார். தவறான வார்த்தைகளை முதலில் பேசியது யார் என்பது உங்களுக்குத் தெரியும். அதையெல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீங்கள் நீக்க வேண்டும்; ஆதாரத்தோடு பேச வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “2021 காலகட்டங்களில் அவர் அமைச்சராக இருந்தார். அதன் பிறகு அவர் சிறை செல்கிறார். பிறகு தங்கம் தென்னரசு அமைச்சராக இருந்தார். அதன் பிறகு அவர் மீண்டும் அமைச்சராகிறார். கடைசியாக சிவசங்கரன் அமைச்சராக இருந்தார். இந்தத் துறையில் நான்கு அமைச்சர்கள் இருந்தார்கள். இந்தத் துறைக்கு மட்டும் கடந்த ஆட்சியில் நான்கு முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அதில் கடந்த 2016-2021 காலகட்டத்தில் மட்டும் 9,613 பேர் இந்தத் துறையில் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 2021-2026 காலகட்டத்தில் 343 பேர் மட்டும்தான் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.” இது மிகப்பெரிய பற்றாக்குறை.
“இதேபோல் 2016-2021 காலகட்டத்தில் 359 துணை மின்நிலையங்கள் (Substations) கொண்டுவரப்பட்டன; அதில் 2021-2026 காலகட்டத்தில் 122 துணை மின்நிலையங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுபோல் உட்கட்டமைப்புகளில் பெரிய அளவில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. கடந்த 2016-2021 ஆட்சிக் காலத்தில் 84,001 டிரான்ஸ்ஃபார்மர்களும், கடந்த ஐந்தாண்டுகளில் 99,000 டிரான்ஸ்ஃபார்மர்களும்தான் வாங்கப்பட்டுள்ளன. நமது தேவைகள் மிகவும் அதிகம். நமக்கு இப்போது மட்டும் 593 துணை மின்நிலையங்கள் தேவைப்படுகின்றன. இதில் இந்த ஆண்டு மட்டும் 209 துணை மின்நிலையங்களுக்கு முதல்வர் ஒப்புதல் செய்துள்ளார்” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஒரு வார்த்தை பேசினால் மறுவார்த்தை பேசுவதற்கு எங்களுக்கும் தெரியும். பேசிவிட்டு, ‘பேரவைத் தலைவர் நீக்குவேன்’ என்று சொல்வதெல்லாம் என்ன? பொதுவெளியில் சென்ற பிறகு நாங்கள் பதில் சொல்லாமல் ஊமையாக இருந்துவிட்டுப் போவதற்கு இந்தச் சபைக்கு நாங்கள் வரவில்லை. எங்களது மக்களின் கோரிக்கைகளை எடுத்துச் சொல்லும் இடமாக இந்தச் சட்டமன்றம் இருக்கிறது” என்றார்.
மேலும், “பொதுவெளியில் மின் துறை அமைச்சர் பேசும்போது சீரமைப்புகள், முறைகேடுகள் என ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் தடிமனான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார். அதைத்தான் எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் இன்று காலை சொன்னார். எதுவாக இருந்தாலும் நாம் பதவியேற்ற கடமையை நிறைவேற்றும் வகையில், ஒரு தவறு இருந்தால் அதை உடனுக்குடன் சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் நாம் உறுதிமொழி எடுத்துக்கொண்டதன் அர்த்தத்தை நிறைவேற்றும். அப்படி இல்லாமல் துறையில் சில தவறுகள் இருந்தால் அல்லது தங்களுக்குத் தவறாகத் தெரிந்தால் உடனுக்குடன் அதைச் சுட்டிக்காட்டி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
