முதல்வர் சிரிப்பதை பார்ப்பதற்கு தனி ஸ்கிரீன் வேண்டும் என்று தமிழக வெற்றி கழக எம்எல்ஏ கல்லணை கோரிக்கை வைத்தது அவையில் உறுப்பினர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று 2 மணியுடன் அலுவல் பணிகள் நிறைவடைந்தன.
இதற்கிடையே சட்டப்பேரவையில் பேசிய மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ கல்லணை தன்னுடைய தொகுதி சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.
தொடர்ந்து ஒரே ஒரு தனிப்பட்ட கோரிக்கையை முன் வைப்பதாக சபாநாயகரிடம் தெரிவித்தார்.
இதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து பேசிய கல்லணை, ‘தலைவர் எங்கு சென்றாலும் சிறு வயதிலிருந்து ஓடோடி சென்று பார்த்து வளர்ந்த எங்களுக்கு அவரது அருகிலேயே அமரும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறார்.
ஆனால் சின்ன வருத்தம் என்னவென்றால் அவருடைய முகத்தை எங்களால் பார்க்க முடியவில்லை.
சாமி அமைச்சர் என்று அண்ணன் சொல்லும் போது முதல்வர் விஜய் குலுங்கி குலுங்கி சிரித்ததை வீட்டிற்கு சென்று டிவியில் பார்த்தேன்.
எதிர்க்கட்சிகள் தன்னுடைய அரசை பற்றி குறை சொன்னால் கூட அதில் காமெடி இருந்தால் சிரிக்கிற ஒரு தலைவர் எங்கள் தலைவர். அண்ணா வழி வந்த எங்கள் அண்ணாவின் அழகிய முகத்தை பார்ப்பதற்கு ஒரு தனி ஸ்கிரீன் ஏதாவது ஏற்பாடு செய்து தர வேண்டும். என்னுடைய தனிப்பட்ட கோரிக்கையாக இதை முன்வைக்கிறேன்’ என்று கூறினார்.
இவரது பேச்சு அவையில் சிரிப்பலையையும் வியப்பையும் ஏற்படுத்தியது.
