தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ சபரி ஐயங்கரன் தனது உறவினர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சபரி ஐயங்கரன்.
இவர் ‘அண்ணன்’ என கூறி, தனது உறவினர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகியுள்ளது..
அதாவது அண்ணன் என கூறப்படும் அந்த நபர் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில், கலப்பு திருமணம் தொடர்பாக கருத்துக்களை பகிர்ந்ததாக தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் அவரிடம் தொலைபேசி மூலம் உரையாடிய சபரி ஐயங்கரன், எந்த தைரியத்தில் இப்படி ஒரு ஸ்டேட்டஸை வைத்தீர்கள்.
என் குடும்ப விவகாரத்தை பொதுவெளியில் இழுக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” என்று கேட்கிறார்.
இதற்கு அந்த நபர், கலப்பு திருமணம் திராவிடம் கொண்டு வந்தது தானே. நான் உங்களை குறிப்பிடவில்லையே. பொதுவாக தானே வைத்திருக்கிறேன் என்று பதில் சொல்கிறார்.
ஆனால் ஆத்திரமடைந்த சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன், “பெரியகுளம் எம்எல்ஏ யார் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது குடும்ப விவகாரத்தை மறைமுகமாக சீண்டுவதை அனுமதிக்க முடியாது. உங்கள் தந்தையின் மீது நான் வைத்திருக்கும் மரியாதை மட்டுமே என்னை அமைதியாக இருக்க வைக்கிறது. இல்லையென்றால் என்ன நடக்கும் என்று தெரியாது.
காவல் நிலையம் மூலம் நடவடிக்கை எடுத்து டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டரை உங்கள் வீட்டிற்கு அனுப்பி ஜெயிலில் உட்கார வைத்து விடுவேன்.
அந்த ஸ்டேட்டஸை நீக்கவில்லை என்றால் நைட் தாண்ட மாட்டீர்கள். குடும்ப சூழலையும் உறவையும் மனதில் வைத்து உடனடியாக அந்த பதிவை நீக்குங்கள்’ என்று மிரட்டல் தொனியில் பேசி இருக்கிறார்.
அந்த ஆடியோவின் இறுதியில் சரி நான் அந்த பதிவை நீக்கிவிட்டு பேசுகிறேன் என்று அந்த நபர் கூறுவதும் பதிவாகியுள்ளது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளுக்கு மாற்றாக தூய்மையான அரசியலை கொடுக்கப் போவதாக கூறி களம் இறங்கிய தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு பேசியிருப்பது இணையத்தில் கடுமையான விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
ஆனால் இந்த ஆடியோ தொடர்பாக தமிழக வெற்றி கழக தலைமையோ அல்லது எம்.எல்.ஏ சபரியோ இதுவரை எந்தவிதமான விளக்கமும் அளிக்கவில்லை.
அந்த ஆடியோவில் இருக்கும் குரல் அவருடையதுதானா என்பதும் உறுதி செய்யப்படவில்லை.
முன்னதாக சபரி ஐயங்கரன், எம் எல்.ஏ க்களுக்கு கார் வழங்குவதை குறிப்பிட்டு, நான் தினமும் டிரெய்னில் தான் வருகிறேன். தற்போது முதல்வர் வேலையும் கொடுத்து காரும் வழங்குகிறார் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த சபரி ஐயங்கரனுக்கு சொந்தமாக கார் வைத்திருக்கிறார்.
டாடா டிகோர் கார் உள்ளதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, பெரியகுளம் தொகுதிக்குள், எம்எல்ஏ என்ற பெயர்ப் பலகை பொருத்திய காரில் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
