ஓட்டத் தெரியாத டிரைவரை நம்பி பேருந்தை ஒப்படைத்துவிட்டோம் : முதல்வர் விஜய் மீது துரைமுருகன் தாக்கு!

Published On:

| By Kavi

எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்கும் விவகாரத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் கொடுக்கப்போவதாக கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், ”வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளும் மலைப்பாதை டிரைவர்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”’Optics matter in administration’ அதாவது, அரசியலில் செய்யப்படும் எந்த ஒரு செயலின் மீதான பொதுப் பார்வை எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவது மிக மிக முக்கியம்.

ADVERTISEMENT

ஏனென்றால், முதல் பார்வையில் ஒரு விஷயம் எப்படி இருக்கிறதோ, அதைத்தான் பெரும்பாலானோர் பிடித்துக்கொண்டு பேசுவார்கள். அது குறித்த தர்க்க நியாயங்களுக்குள் எல்லோரும் செல்வதில்லை என்பது நிர்வாக அனுபவம் உள்ளவர்களுக்குப் புரியும்.

அதற்குச் சமீபத்திய சிறந்த உதாரணம், எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்பதை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்ததும், அதற்கு எம்எல்ஏக்கள் வானளாவப் புகழ்ந்ததும், பாட்டுப் பாடியதும்.

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து, அன்றைய தினத்தில் விவாதிக்கப்பட்ட ஏறத்தாழ மூன்று துறைகளின் மானியக் கோரிக்கைகளுக்குப் பதினைந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அது நியாயமானதா, இல்லையா? எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? எவ்வளவு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும்?

அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரமும் பொருளாதாரமும் உயர்வதற்கான வாய்ப்புகள் எத்தனை? என்பதையெல்லாம் விவாதிக்காமல், ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து சுமார் 150 கோடி ரூபாய் செலவு வைக்கும் எம்எல்ஏக்களுக்குக் கார் வழங்கும் விஷயத்தைப் பேசுபொருளாக மாற்றிவிட்டார்கள்.

அரசின் நிர்வாகச் செலவுகளில் எம்எல்ஏக்களுக்குக் கார் வழங்குவது என்பது மிக மிகச் சாதாரணமான ஒன்று. அதுவும் குறிப்பாக வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், வேளாண்மை அலுவலர் என வட்ட அளவிலான அரசு அலுவலர்களுக்கும், வட்டார அளவிலான அரசியல் ஒன்றியத் தலைவர்களுக்கும் கார் வழங்கப்பட்டிருக்கும் சூழலில், அரசின் அதிகாரப்பூர்வ வாகனம் எம்எல்ஏக்களுக்கு வேண்டும் என்பது ஒன்றும் நியாயமில்லாத கோரிக்கை அல்ல.

அதுவும் இவ்வளவு பெரிய அரசு நிர்வாகத்தில், பட்ஜெட்டில் ஆண்டுக்குச் சராசரியாக 30 முதல் 35 கோடி ரூபாய் என்பது ஒன்றும் பெரிய விஷயமும் அல்ல. ஏனென்றால், அரசின் மொத்த பட்ஜெட்டில் வீணாகும், விரயமாகும் செலவுகளே மிக எளிதாக 20 விழுக்காடு இருக்கக்கூடும்.

ஆனால், இதை ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்றும், தான் என்ன செய்தாலும் மக்கள் ரசிப்பார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என்ற மமதையிலும், நிர்வாக அடிப்படைப் புரிதலும் இல்லாமல், இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சரியான அதிகாரிகளைச் சரியான ஆலோசனைகளுடன் பயன்படுத்தாமலும் இவ்வளவு சாதாரணமான ஒரு பிரச்சினையைப் பெரிய பேசுபொருளாக மாற்றி, சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது தவெக அரசு” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வை திமுக அரசு எப்படி கையாண்டிருக்கும்?

மேலும் அதில், ”ஒருவேளை எம்எல்ஏக்களுக்குக் கார் வழங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தால், தெளிவாக முடிவு செய்திருப்போம்.

வழங்கலாம். ஆனால் நேரடியாக வழங்காமல், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு கூடுதல் வாகனங்கள் வழங்கப்பட்டு, எம்எல்ஏக்கள் பொதுமக்களின் பணிகளை மேற்கொள்வதற்காகத் தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஓர் அரசாணையை வெளியிட்டிருப்போம்.

அதற்குப் பிறகு கொஞ்ச நாள் கழித்து, அந்த வாகனங்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எம்எல்ஏக்களிடம் ஒப்படைத்துவிட்டு, பிறகு ஓராண்டு கழித்து அதற்குரிய தொடர் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கி சரியாகச் செய்திருப்போம்.

இப்படித்தான் பல விஷயங்களைச் செய்ய வேண்டும், செயல்பட வேண்டும்.

ஏனென்றால், அரசியலில் என்ன செய்கிறோம் என்பதைவிட, அதை மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற ‘optics’ மிக மிக முக்கியம்.

எடுத்துக்காட்டாக, இதன் பொருளாதாரப் பின்னணி என்ன, இதன் செலவினம் என்ன, அரசின் மொத்த பட்ஜெட் என்ன என்பதையெல்லாம் சாதாரண மக்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை ‘கார்’ என்பது பெரிய விஷயம். தனக்குக் கிடைக்காமல் மற்றவர்களுக்கு அரசிடமிருந்து அது கிடைப்பதை மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்தப் புரிதல் இல்லாமல், சாதாரண ஒரு விஷயத்தை சின்னாபின்னமாக்கியிருக்கிறது.

நமக்கெல்லாம் இருக்கும் பயம் ஒன்றே ஒன்றுதான்.

ஒரு நிர்வாக அனுபவமும் இல்லாமல், எந்தப் புரிதலும் இல்லாமல், இவ்வளவு பெரிய வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருந்த நாட்டை இவர்கள் கையில் ஒப்படைத்திருக்கிறோம்.

மேல்நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு வாகனம் தட்டுத் தடுமாறி அதே இடத்தில் நின்று, அதன்பிறகு பாதாளத்தை நோக்கி விரைந்து வந்துவிட்டால், மீண்டும் அதை மேல்நோக்கிச் செலுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல்தான் தமிழ்நாட்டுக்கும் நடந்திருக்கிறது.

ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம்.

அவரைச் சுற்றி நின்று ஓட்டுவதற்கு ஆலோசனைகள் சொல்கிறார்கள். சரியாகச் சொல்கிறார்களா, சரியாகச் சொல்லாமல் இருக்கிறார்களா, யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்று தெரிந்துகொள்வதற்குள் ஐந்தாண்டுகள் முடிந்துவிடும். வண்டி பல நூறு கிலோமீட்டர் பின்னால் வந்துவிடும்.

இது ஒரு எளிதான ஒரு புரிதல்தான்,

செங்குத்தான வளர்ச்சிப் பாதையில் இறங்குவது மிக மிகச் சுலபம். ஏறுவது மிக மிகக் கடினம்.

நாம் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கிறோம்.

காலமே, நீ ஓர் அதிசயப் பெட்டகம்!

என்னென்ன அதிசயங்களை வைத்திருக்கிறாயோ தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share