திமுகவின் செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திமுகவின் மறுசீரமைப்பு தொடர்பான முக்கியமான அறிவிப்புகளை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் கடந்த ஆகஸ்ட் 14-ந் தேதி, “திமுகவை காக்க ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி முடிவுகள்!” என்ற தலைப்பில் திமுகவின் கட்சி மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை முதன் முதலில் வெளியிட்டிருந்தோம்.
அதில்,
- 234 தொகுதிகளை 2 ஆக பிரிக்கிறது
- 2 சட்டசபை தொகுதிகளுக்கு 1 மாவட்ட செயலாளர் என 117 மா.செ.க்கள் நியமனம்
- மா.செ.க்களின் அதிகபட்ச வயது 70
- சென்னையில் பகுதி செயலாளர்கள், பிற மாவட்டங்களில் ஒன்றிய செயலாளர்களின் அதிகபட்ச வயது 50
- கிளைச்செயலாளர்களின் அதிகபட்ச வயது 40
- மாவட்டங்களுக்கான தொகுதிகள் ,ஒன்றியங்கள் எது எது? என்று அந்த மா.செ.க்களிடம் அறிக்கை வாங்குவது; அந்த அறிக்கையை தலைமை கழகம் சரி பார்த்து முடிவெடுப்பது
- மாநகர செயலாளர்கள் என்ற பதவி இனி இல்லை
- மாநகர செயலாளர்களுக்கு பதில் மா.செ.க்கள் மட்டும்தான்
- கட்சி பதவிகளுக்கு நியமனம் என்பது இனி இல்லை
- கட்சி பதவிகளுக்கு தேர்தல் மூலம் மட்டுமே தேர்வு
- புதியதாக உருவாக்கப்படும் 117 மாவட்டங்களில் ஆதி திராவிடருக்கு 30%; பெண்களுக்கு 10% ஒதுக்கீடு
உள்ளிட்ட முடிவுகளை மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளதாக பதிவு செய்திருந்தோம்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் திமுகவின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவுகளை அதிகாரப்பூர்வமாக மு.க.ஸ்டாலின் அறிவிக்க கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
