”அமைச்சர் உட்காருங்க.. யாருடைய கவனம் ஈர்க்க பேசுறீங்க?” நிர்மல்குமாருக்கு சபாநாயகர் ‘குட்டு’!

Published On:

| By Mathi

TN Speaker Rebukes Minister Nirmal Kumar in Assembly

தமிழக சட்டசபையில் கர்நாடகா வனத்துறையினரால் 3 தமிழர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய சட்ட அமைச்சர் நிர்மல்குமாரின் சில கருத்துகளுக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் ஆட்சேபனை தெரிவித்து சபை குறிப்பில் இருந்து நீக்கினார்.

கர்நாடகாவில் 3 தமிழர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக சட்டசபையில் இன்று ஆகஸ்ட் 18-ந் தேதி திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. அப்போது, 3 தமிழர் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரிக்க வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் நிர்மல்குமார் அளித்த விளக்கம்:
கர்நாடகா சாம்ராஜ்நகர் மாவட்டம் மரியமங்கலம் வனப்பகுதியில் 15.08.2026 அன்று காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் கர்நாடக வனத்துறையினால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட கர்நாடகாவில் ஹானூர் தாலுக்கா தோமையார பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும் காயம்பட்ட பெஞ்சமின் என்பவர் மட்டும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹானூர் தாலுகாவில் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து சில தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

சம்பவ நாளான ஆகஸ்ட் 15 அன்று காவேரி வனவிலங்கு சரணாலய வனப்பகுதியில் வனத்துறையினர் வேட்டை தடை நடவடிக்கையின் போது 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மேற்படி துப்பாக்கி சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து உடலை வாங்க மறுத்தும் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து கர்நாடக அரசு இடைக்கால நிவாரண தொகையாக தலா ஒரு குடும்பத்திற்கு ரூபாய் 5 லட்சம் அறிவித்தது.

ADVERTISEMENT

மேலும் மேற்படி சம்பவம் குறித்து கர்நாடக அரசு துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறியதன் அடிப்படையில் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்கு பின்பு 17.08.2026 அன்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றன.

வனத்துறையினரின் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து முறையான நீதி விசாரணைக்கு மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

துப்பாக்கி சூடு நடந்ததற்கு சரியான நிகழ்வுகள்- முதலில் சுட்டது யார்? மற்றும் வன்முறையை பயன்படுத்தியது நியாயமானதா? என்பது குறித்து மாஜிஸ்திரேட் தலைமையிலான விசாரணைக்குழு ஆய்வு செய்யும் என்று கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் விசாரணைக்கு பிறகு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அதற்கான விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரின் பெயரில் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் மீது ஹானூர் காவல் நிலைய காவல்துறையினரால் பிஎன்எஸ் 103 (1)-ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இச்சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் இது ஒரு படுகொலை மட்டுமல்ல, கர்நாடக வனத்துறையினரின் விளக்கம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், உயர்மட்ட குழு அமைத்து தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும;
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கர்நாடக அரசு வழங்க வேண்டும் எனவும், இது போன்ற இனி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்ற விவரத்தை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் “என்றார்.

அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுக்கு சபாநாயகர் எதிர்ப்பு

இதனைத் தொடர்ந்து அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்த சில கருத்துகளுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “அந்த சப்ஜெக்ட் வேண்டாம்.. மாண்புமிகு அமைச்சர் உட்காருங்க.. மாண்புமிகு அமைச்சர் உட்காருங்க.. மாண்புமிகு அமைச்சர் உட்காருங்க.. என கடிந்து கொண்டதுடன்,

“மாண்புமிகு அமைச்சர் அவர்கள், யாருடைய கவனத்தை ஈர்க்க பேசுறீங்க?.. கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஒட்டி மட்டும் தெரிவித்த கருத்துகள் சபை குறிப்பில் இருக்கும். கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அப்பாற்பட்டு பேசிய அனைத்தும் சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது” என்றார்.

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தொடர்ந்து நீக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share