முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் விவகாரத்தில் விதிமீறல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழக முதலமைச்சர் அலுவலகத்தை, நிர்வாக வசதிக்காக அருகிலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அம்மாளிகையின் 10-வது தளத்தில் முதலமைச்சரின் புதிய அறை, தனிச் செயலாளர்களுக்கான அலுவலகங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்ட அரங்கம் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிகளுக்காகச் சேப்பாக்கத்தில் உள்ள கட்டிடக் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டக் கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம் சார்பில், கடந்த 13-ஆம் தேதி நாளிதழ்களில் ‘ஏ’, ‘பி’, ‘சி’ என 3 பிரிவுகளாகத் தனித்தனியே டெண்டர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை ரூ.5,54 கோடி மதிப்பீட்டில் கோரியிருந்த இந்த டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்கள் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இணையதளப் பதிவேற்றத் தாமதம்: நாளிதழ்களில் விளம்பரம் வெளியான மறுநாளே டெண்டர் ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். ஆனால், கட்ந்த 13-ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெளியாகி 4 நாட்கள் கழித்து, 17-ஆம் தேதியே ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
திட்ட மதிப்பீடு மறைப்பு: நாளிதழ் விளம்பரத்தில் முதல் பிளாக்கிற்கு ரூ.2.41 கோடி, 2 அவது பிளாக்கிற்கு ரூ.2.01 கோடி, 3 ஆவது பிளாக்கிற்கு ரூ.1.12 கோடிக்கும் இதர பணிகளுக்கும் என ரூ.5,54 கோடி எனத் திட்ட மதிப்பீடுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், இணையதளத்தில் வெளியிடப்பட்ட டெண்டர் ஆவணங்களில் இந்த மதிப்பீடு குறித்த எந்த விவரமும் இடம்பெறவில்லை.
கால அவகாசத்தில் சிக்கல்: தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற டெண்டர் விதிகளின்படி, 50 லட்சத்திற்கு மேல் திட்ட மதிப்பீடுகள் இருந்தால் இணையத்தில் வெளியிடப்படும். இதில் குறிப்பாக ரூ.2 கோடிக்கு அதிகமான மதிப்பீடு கொண்ட பணிகளுக்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்க 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். ரூ.2 கோடிக்கும் குறைவான பணிகளுக்கு 15 நாட்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால், ரூ.2 கோடிக்கும் அதிகமான மதிப்பீடு கொண்ட பணிகளையும் சேர்த்து, 3 டெண்டர்களுக்கும் 15 நாட்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையுடன் தவெக அரசு செயல்படும் என முதல்வர் விஜய் அவ்வப்போது தெரிவித்து வரும் நிலையில் தற்போது முதல்வர் அலுவக டெண்டர் விவகாரத்தில் குளறுபடி இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
