திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்தார்.
திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் 1,103 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர், மொத்த பட்டதாரிகளில் 616 பேர் மகளிர். 37 மாணவிகள் உட்பட 50 பேர் தங்கப் பதக்கம் பெற்றனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நாகை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஜி. பத்மநாபன், துணைவேந்தர் முதுநிலை பேராசிரியர் சுலோச்சனா சேகர், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்திற்கும், பட்டம் பெறும் இளம் தலைமுறையினருக்கும் முக்கியமான மைல்கல். விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, மன உறுதி ஆகியவற்றைக் கொண்டாடும் நாள் இது.
பட்டம் பெறும் மாணவர்களின் சாதனை, அவர்களின் பெற்றோர், குடும்பத்தினர், ஆசிரியர்கள், வழிகாட்டிகள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும் உரியது.
‘தமிழ்நாடுதான் நான் பிறந்த மண்; எனது பயணம் தொடங்கிய மண்’. தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருவது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியளிக்கிறது.
தியாகராஜர் கோயில் அமைந்துள்ள திருவாரூர், பல நூற்றாண்டுகளாக ஆன்மிகம், கல்வி மற்றும் கலைச் சிறப்பின் மையமாகத் திகழ்ந்து வருகிறது.
இப்புனித மண் சான்றோர்கள், அறிஞர்கள் மற்றும் கர்நாடக இசையின் புகழ்பெற்ற மும்மூர்த்திகளை உருவாக்கிய மண். பண்பாடு, கல்வி மற்றும் விழுமியங்கள் ஒன்றிணைந்து வளரும்போதுதான் உண்மையான மேன்மை உருவாகிறது என்பதற்கு திருவாரூர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இன்றைய பட்டதாரிகள் உலகம் வேகமாக மாறிவரும் காலக்கட்டத்தில் தங்களது பயணத்தைத் தொடங்குகின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்துறைகளை மாற்றி வருகிறது; காலநிலை மாற்றம் வளர்ச்சி குறித்த அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய மனிதகுலத்தைத் தூண்டுகிறது. சுகாதாரம், உயிரித் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியில் ஏற்படும் முன்னேற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளை உருவாக்குகின்றன. பட்டம் பெற்ற ஒவ்வொரு மாணவரும் வெற்றி, நல்ல ஆரோக்கியம் மற்றும் சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் மனநிறைவு கொண்ட எதிர்காலத்தைப் பெற வேண்டும்” என்றார்.
தமிழக அமைச்சர் புறக்கணிப்பு
தமிழ்த் தாய் வாழ்த்து 3-வதாக பாடப்பட்ட நிலையில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், இந்நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளார். இது தொடர்பாக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில், “அரசு மரபுப்படி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்று, உபசரித்து, வழியனுப்பும் பொறுப்பு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பின் மாண்பை முழுமையாக மதிக்கிறோம்.
ஆனால், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் முதலில் வந்தே மாதரம், இரண்டாவதாக தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் வகையில் அமைந்தது கண்டனத்திற்குரியது.
தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இனி அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும். இந்த நடைமுறை எந்தக் காரணத்திற்காகவும் மீறப்படக் கூடாது. மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவர் அவர்களுக்கு உரிய மரியாதை வழங்குவதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேவேளையில், தமிழ்த்தாய் வாழ்த்தின் மாண்பை விட்டுக்கொடுக்கவும் முடியாது.
அரசின் உத்தரவு முறையாகப் பின்பற்றப்படாத எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் காங்கிரஸ் சார்ந்த அமைச்சர் பங்கேற்காமல் இருப்பதே உரிய நிலைப்பாடு என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்” என தெரிவித்திருந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை, உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
