விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தமிழ்த் தேசிய மாநாட்டில், “இந்திய தேசிய கீதம்” இசைக்கப்பட்டது குறித்து சீமானின் நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
உளுந்தூர்பேட்டையில் நேற்று விசிகவின் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு, அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். கட்டுக் கடங்காமல் திரண்டிருந்த கூட்டத்தால், திருமாவளவன் முழுமையாக உரையாற்றாமல் பாதியிலேயே முடித்துக் கொண்டார்.

இந்த மாநாட்டின் முடிவில், “இந்திய தேசிய கீதம்” இசைக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாள மணி செந்தில் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டை மிகப்பெரிய மக்கள் திரளுடன் நடத்தி முடித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு வாழ்த்துகள். அண்ணன் திருமா அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.
அதேவேளையில், மாநாட்டில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தின் உற்சாகத்தின் மற்றும் கட்டுப்பாடற்ற தன்மை காரணமாக, அண்ணன் திருமாவளவன் அவர்கள் தனது உரையை முழுமையாகவும் தெளிவாகவும் பேச முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

ஆனால், இந்த மாநாடு நிறைவடைந்தபோது தேசிய கீதம் இசைக்கப்பட்டது என்பது மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.
தமிழ்த்தேசியத்திற்கும் இந்திய தேசிய கீதத்திற்கும் என்ன தொடர்பு?
தமிழ்த்தேசியம் என்பது வெறும் மொழிப் பெருமையைப் பேசுவது அல்ல. அது தமிழர் என்ற தேசிய இனத்தின் உரிமை, அரசியல் அதிகாரம், இறையாண்மை, அடையாளம், நலன் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிப் பேசும் ஒரு விடுதலைக் கருத்தியல்.
தமிழர் தங்களுடைய நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடு என்றால், ஒரு தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டின் நிறைவில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்படுவதன் அரசியல் மற்றும் கருத்தியல் பொருள் என்ன?
இது வெறும் ஒரு நிகழ்ச்சி நிரல் சார்ந்த முடிவா?
அல்லது தமிழ்த்தேசியக் கருத்தியலுக்கும் இந்திய தேசிய அரசியலுக்கும் இடையிலான ஒரு சமரசத்தின் வெளிப்பாடா?

இதற்கான தெளிவான விளக்கத்தை அண்ணன் திருமாவளவன் அவர்கள்தான் வழங்க வேண்டும்.
தமிழ்த் தேசியம் பேசப்படும் ஒரு மேடையில், அந்தக் கருத்தியலின் அடிப்படைக் கேள்விகளுக்கு முரணாகத் தோன்றும் ஒரு நடைமுறை இடம்பெற்றால், அதை கேள்வி கேட்பதும் விவாதிப்பதும் அவசியம்.
தமிழர் உரிமை, தமிழர் எதிர்காலம், தமிழர் அரசியல் அதிகாரம் ஆகியவற்றைப் பேசும் அனைவரும் இந்தக் கேள்வியை உணர்வுபூர்வமாக அல்ல; கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அணுக வேண்டும்.
தமிழ்த்தேசியம் என்றால் என்ன?
அதன் அரசியல் எல்லை எது?
அதன் இறுதி இலக்கு என்ன?
இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அண்ணன் திருமாவளவன் அவர்கள் தனது உரையில் தெளிவாக வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்தேன்.
குறிப்பாக, நீண்டகாலமாக அவர் சார்ந்திருக்கும் திராவிடக் கருத்தியலுடன், தமிழ்த்தேசியக் கருத்தியலை எந்தெந்த புள்ளிகளில் பொருத்திப் பார்க்கிறார் என்பதையும், இந்த இரு அரசியல் கருத்தியல்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் ஒற்றுமைகளையும் அவர் எவ்வாறு அணுகுகிறார் என்பதையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்தது.
ஆனால், தமிழ்த்தேசியம் குறித்த இந்தக் கேள்விகளிலும், அதன் கருத்தியல் அடிப்படைகள் குறித்த விவாதத்திலும் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு மிகப்பெரிய ஆர்வம் இல்லை என்பதையே, அவர் சுருக்கமாகப் பேசிய உரையின் வழியாக நான் உணர்ந்தேன்.
தனக்கிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் உடனான கூட்டணி குறித்த நிலைப்பாட்டை உறுதி செய்வதிலும், அங்கே கூடியிருந்த பெரும் கூட்டத்தை மகிழ்விக்கும் வகையில் “நாம் ஆளுங்கட்சியாக மாறுவோம்” என்று அரசியல் இலக்குகளைப் பேசுவதிலும் அவர் காட்டிய ஆர்வம், தமிழ்த்தேசிய விடுதலைக் கருத்தியலை விளக்குவதில் இருந்திருந்தால், இந்த மாநாடு உண்மையான தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
ஆனால், தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்ன?
அதன் அரசியல் எல்லை எது? தமிழர் இறையாண்மை குறித்த அதன் நிலைப்பாடு என்ன? தமிழ்த்தேசியத்திற்கும் திராவிடக் கருத்தியலுக்கும் இடையிலான உறவு என்ன? இந்திய தேசிய அரசியலுக்குள் தமிழ்த்தேசியத்தின் இடம் என்ன?
என்பது போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு ஆழமான அரசியல் விவாதத்தை உருவாக்காமல், பெரும்பாலும் அரசியல் கூட்டணி, ஆட்சி அதிகாரம் மற்றும் தேர்தல் வெற்றி குறித்த விருப்பங்களை மட்டுமே முன்னிறுத்திய மாநாடாக இது முடிந்து விட்டது.
தமிழ்த்தேசியம் என்பது வெறும் தேர்தல் முழக்கமாக மாறிவிடக் கூடாது. அது ஒரு விடுதலைக் கருத்தியல். ஒரு தேசிய இனத்தின் அரசியல் தத்துவம். ஒரு தேசிய இனத்தின் நலன் மற்றும் உரிமைக்கான கோட்பாடு.
அந்தக் கருத்தியலை தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பு கிடைத்தும், அதை முழுமையாகப் பயன்படுத்தாமல் விட்டது தான் இந்த மாநாட்டின் மிகப்பெரிய ஏமாற்றம்.
மக்கள் கூட்டத்தின் அளவு ஒரு மாநாட்டின் வெற்றியை நிர்ணயிக்கலாம்.
ஆனால், ஒரு மாநாட்டின் வரலாற்று முக்கியத்துவத்தை நிர்ணயிப்பது, அங்கே முன்வைக்கப்படும் கருத்துகளின் ஆழமும் தெளிவும் தான்.
அந்த வகையில், மிகப்பெரிய மக்கள் திரள் இருந்தும், தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கேள்விகளுக்கு விடை காண முடியாமல் முடிந்த மாநாடாகவே இது அமைந்துவிட்டது. இவ்வாறு மணி செந்தில் தெரிவித்துள்ளார்.
