டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அதிரடி சோதனையும் நடைபெற்றது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டாஸ்மாக் வழக்கு குறித்து பதியப்பட்ட புகாரின் அடிப்படையில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு நேற்று முன்தினம் எனக்கு சம்மன் வழங்கி இருந்தார்கள். அந்த சம்மன் அடிப்படையில் இன்று சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி முன்பாக நேரில் வருகை தந்து, அவர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு உரிய முறையில் என்னுடைய பதிலை அளித்திருக்கின்றேன்.
கேள்விகளும் என்னுடைய பதில்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகையால் அந்த கேள்வி குறித்தும் பதில் குறித்தும் பொதுவழியில் தற்பொழுது தெரிவித்தால் அது சரியாக இருக்காது. இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியால் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்காகும்.
தவெக அரசு அமைந்த பிறகு, ஆட்சி நடத்துவதை விட எதிர்க்கட்சிகள் மீது வழக்கு பதிவு செய்வதில் சிறப்பு கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒரு வழக்கல்ல, 10 வழக்கல்ல… எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சந்திப்பதற்கு, எதிர்கொள்வதற்கு சட்டப்படி நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
முறைக்கேடு நடந்திருக்கிறதா என்று முதலில் விசாரிக்கட்டும். விசாரித்து முடித்த பின்னர் அவர்களே அந்த கருத்துக்களை நீதிமன்றத்தில் சொல்வார்கள். என்னென்ன கருத்துக்களை நீதிமன்றத்தில் சொல்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு, அதன்பிறகு நான் பதில் சொல்கிறேன்” என்றார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் கரூர் கம்பெனி என்று கூறியது தொடர்பான கேள்விக்கு, ”சட்டமன்றம் சுமூகமாக நடைபெற வேண்டும், ஒரு ஆரோக்கியமான விவாதம் நடக்க வேண்டும், நாட்டினுடைய நிலைகள் குறித்து சட்டமன்றம் நடைபெறுகின்ற பொழுது உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதும், அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளை சார்ந்த அமைச்சர்கள் பதில் சொல்வதும், முதலமைச்சர் பதில் சொல்வதும் இதுவரை இருந்த ஒரு நடைமுறையில் ஒன்று.
ஆனால் இன்றைய நிலை — புதிதாக அமைந்திருக்கிற தவெக அரசு, அவர்களே எதிர்க்கட்சிகள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், பதில் தெரியாமல் சட்டமன்றத்தினுடைய நிகழ்வுகளை வேறு விதமாக பதில்களை சொல்லி, அந்த இடத்தில் ஒரு கூச்சல் குழப்பத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள்.
நான் நேற்று என்ன கேட்டேன்? மின்சாரத்துறை அமைச்சரிடம், ‘ஈபி-யில் 18 ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது. கண்டுபிடித்தது 38 ஹார்ட் டிஸ்க் என்று சொன்னீர்கள். மீதிமிருந்த 20 ஹார்ட் டிஸ்க் எங்கு இருந்து கண்டுபிடிக்கப்பட்டது? உரிய விளக்கம் இருந்தால் நல்லா இருக்கும் என்று கேட்டேன். அதற்கு உரிய விளக்கம் இல்லை.
திரும்பவும் ஒரு கேள்வி கேட்டேன்… ‘நீங்கள் வெள்ளை அறிக்கையில் திமுக ஆட்சியில் எங்களுடைய முதலமைச்சராக இருந்த திராவிட மாடல் ஆட்சினுடைய நாயகர் முன்னெடுத்த திட்டங்களை வெள்ளை அறிக்கையிலே சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்.
99,000 மின்மாற்றிகள் மாற்றப்பட்டிருக்கின்றன, எவ்வளவு லைன் எல்லாம் போட்டிருக்கிறோம் என்று வெள்ளை அறிக்கையில் சொல்லியிருக்கிறீர்கள்.
2020-21-ல் இருந்த மின்வாரியத்தினுடைய ஓராண்டு கடன் 4,500 கோடி. கடந்த 2025-26-ல் 933 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கையிலே சொல்லிருக்கீறீர்கள்.
ஆக, வெள்ளை அறிக்கையில் திமுக அரசினுடைய சாதனைகளை சொல்லிவிட்டு நேற்று சட்டமன்றத்தில் வந்து திமுக ஆட்சியில் எந்தவிதமான பணிகளும் மின்சார வாரியத்தில் நடக்கவில்லை என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்கள். நான் அதைத்தான் கேள்வியாக கேட்டேன்.
இதற்கு சட்டமன்றத்தில் பதில் சொல்வதை விட்டுவிட்டு வேறு விதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார். இது போன்ற நிகழ்வுகளை சில அமைச்சர்கள் சட்டமன்றத்தில் முன்னெடுக்கின்றார்கள்” என்றார்.
