அனைத்து எம்எல்ஏக்களுக்கும் புதிய கார் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவித்தார். அதோடு கார் பராமரிப்பு மற்றும் எரிபொருள் செலவுக்காக மாதம் 75 ஆயிரம் ரூபாய் மற்றும் உதவியாளர் ஒருவரை நியமித்துக் கொள்ள 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்று அறிவிக்கப்பட்டது
தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் கார்களை பெற மாட்டோம் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
மாநிலத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் கார்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற குழு தலைவர் தளி ராமச்சந்திரனும் அறிவித்தார்.
பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணியும் தங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் அந்த கார்களை பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்ததோடு அந்த நிதியை கொண்டு நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கலாம் என்றும் வலியுறுத்தினார்.
தேர்தல் பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் இந்த வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்ற உறுப்பினர்களிடையே சமத்துவத்தை உறுதி செய்வதையே இந்த திட்டம் நோக்கமாக கொண்டிருக்கிறதே தவிர, இது ஆடம்பர வசதி அல்ல என்று கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் எளிய பின்னணியை கொண்டவர்கள். பொது பேருந்தில் பயணம் செய்யும் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரும் உள்ளார். எனவே எங்களது முயற்சி சமத்துவத்தை உறுதி செய்கிறது” என்று பதில் அளித்து, காட்டுமன்னார்கோயில் விசிக எம்எல்ஏ ஜோதி மணியின் கோரிக்கையை நினைவூட்டினார்.
இவ்வாறு எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் மாறி மாறி விவாதங்கள் நடந்தன.
இந்த சூழலில் எந்தெந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எத்தனை கார் உள்ளது என்ற தரவை டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி
தமிழ்நாடு எம்.எல்.ஏ.க்கள் எத்தனை பேருக்கு கார் உள்ளது?
| கட்சிகள் | எத்தனை எம்.எல்.ஏ.க்கள் | கார் வைத்திருப்பவர்கள் | கார் இல்லாதவர்கள் | குடும்பத்தில் யாருக்காவது கார் இருக்கிறதா? |
| தவெக | 107 | 75 | 32 | 10 |
| திமுக | 59 | 50 | 9 | 6 |
| அதிமுக | 41 | 33 | 8 | 3 |
| மற்ற கட்சிகள் | 20 | 15 | 5 | 1 |
ஒன்றுக்கும் மேற்பட்ட கார்கள் வைத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள்
தவெக -33 திமுக- 16 அதிமுக- 15
அதிகமான கார்களை வைத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள்
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கவுண்டபாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தேர்தல் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளதன் படி, கார்,ஜீப் உட்பட 14 வாகனங்கள் வைத்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.வான லீமா ரோஸ் மார்ட்டின் 9 கார்களும், அமைச்சர் பிரபு 7 கார்களும் வைத்திருக்கின்றனர்.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் பி.கே. சேகர் பாபு உள்ளிட்ட திமுகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும், தங்கள் பெயரிலோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ கார்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளதாக டிடி நெக்ஸ்ட் ஊடகம் தெரிவித்துள்ளது.
அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், தங்கள் பெயரிலோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரிலோ கார் எதுவும் இருப்பதாகத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
